இறைவனின் திருப்பெயரால்....

Pages

Sunday, July 17, 2011

நில அபகரிப்பு வழக்குகளை விசாரிக்க வருகிறது தனி கோர்ட்? விரைவாக நீதி வழங்க தமிழக அரசு திட்டம்

நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தனி போலீஸ் பிரிவு ஏற்படுத்தப்பட்டது போல், தனி கோர்ட்டுகளும் அமைக்க வேண்டும் என, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால், தங்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என அவர்கள் நம்புகின்றனர்.கடந்த ஆட்சியில், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அவர்களின் கூட்டாளிகள், பொதுமக்களை மிரட்டி அடிமாட்டு விலைக்கு நிலங்களை வாங்கவோ, அபகரிக்கவோ செய்தனர். இவ்வாறு தமிழகம் முழுவதும் நடந்த ஆக்கிரமிப்புகள், அபகரிப்புகளில் இருந்து நிலங்களை மீட்கவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தனி போலீஸ் பிரிவை ஏற்படுத்தி, முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் உத்தரவிட்டார்.


நில அபகரிப்பு குறித்து, தமிழகம் முழுவதிலும் இருந்து 1,449 புகார்கள் போலீசுக்கு வந்துள்ளன. இந்தப் புகார்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு வருகின்றன. அனைத்து புகார்களையும் தற்போதுள்ள போலீஸ் நிலையங்களில் விசாரிப்பது கடினம் என்பதால், தனியாக சிறப்புப் பிரிவை ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.முதல்வரின் இந்த அறிவிப்புக்கு, பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. தனி போலீஸ் பிரிவு ஏற்படுத்தப்பட்டிருப்பது போல், இந்த வழக்குகளை விசாரிக்க தனி கோர்ட்டுகளும் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். அபக ரிக்கப்பட்ட நிலங்களை மீட்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம்.ஏற்கனவே உள்ள கோர்ட்டுகளில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாகி வருகின்றன. இந்த நில அபகரிப்பு வழக்குகளும் அதில் சேரும் பட்சத்தில், வழக்குகளின் எண்ணிக்கை மேலும் உயரும். விசாரணை மேலும் தாமதமாகும். இதனால், தீர்ப்பு வருவதும் தாமதமாகும்.நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்க, சிறப்பு கோர்ட் அமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க, தனியாக மகளிர் கோர்ட் செயல்படுகிறது. மாவட்டந்தோறும் விரைவு விசாரணை கோர்ட்டுகள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், நில மோசடி வழக்குகளை விசாரிக்கவும் தனி கோர்ட்டுகள் அமைக்கப்பட்டால், விரைவில் தீர்ப்பு கிடைக்க ஏதுவாகும்.

இதுகுறித்து, சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் என்.ராஜா செந்தூர்பாண்டியன் கூறியதாவது:தனி கோர்ட் அமைப்பது என அரசு கொள்கை முடிவெடுத்தால், அதற்கான மசோதாவை சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்ற முடியும். தனி கோர்ட்டுகள் அமைக்கப்படும் போது, நில அபகரிப்பு வழக்குகள் மட்டுமே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க, விரைவு கோர்ட்டுகள் ஏற்படுத்தப்பட்டன. அதுபோல், இந்த தனி கோர்ட்டுகளும், நில அபகரிப்பு வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்கும். இதனால், பாதிக்கப்பட் டவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்க வழி ஏற்படும். வழக்குகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி என, முக்கிய நகரங்களில் தனி கோர்ட்டுகளை ஏற்படுத்தலாம்.

தனி கோர்ட்டுகள் அமையும்போது, நீண்ட காலத்துக்கு "வாய்தா' வாங்க முடியாது. மற்ற கோர்ட்டுகள் என்றால், விசாரணை ஒரு மாதம் வரை தள்ளிப் போகும். ஆனால், தனி கோர்ட் என்றால், நீண்ட கால தள்ளிவைப்பு இருக்காது. இவ்வாறு செந்தூர்பாண்டியன் கூறினார்.சட்ட நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, தனி கோர்ட்டுகளை அரசு அமைக்கும் பட்சத்தில், இழந்த சொத்துகளை பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் பெற முடியும்; ஆக்கிரமிப்பாளர்கள், அபகரிப்பாளர்களுக்கு உரிய தண்டனையும் கிடைக்கும்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.