திருவொற்றியூர், ஜூலை 16: முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியில் 60 நாள்களில் 60 கொலை, 120 வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பேன் என்று சூளுரைத்த முதல்வர், இதற்கு என்ன பதில் சொல்கிறார் என தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
ராயபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தி.மு.க உயர்நிலை செயல்திட்டக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசியது:
சமச்சீர் கல்வித் திட்டம் என்பது ஏழை, பணக்காரர்கள் அனைவருக்கும் பொதுவானது. கருணாநிதி கொண்டு வந்தார் என்பதற்காகவே ஜெயலலிதா அதை ரத்து செய்தார். அவரது முயற்சி வெற்றி பெறாது. சரியான தீர்ப்பினை நீதிமன்றம் விரைவில் வழங்கும்.
அரசுத் துறையின் அனைத்து அலுவலகங்கள், சட்டமன்ற விடுதி உள்ளிட்டவைகள் அருகாமையில் அமைந்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் ஓமாந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகத்தை தி.மு.க அரசு கட்டியது. மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட அந்தக் கட்டடத்தை ஜெயலலிதா புறக்கணிப்பது சரியா?
60 நாளில் 60 கொலைகள்: முதல்வர் பதவியேற்றவுடன் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதுதான் தனது முதல் வேலை என ஜெயலலிதா சூளுரைத்தார். கடந்த 60 நாள்களில் மட்டும் தமிழகம் முழுவதும் 60 கொலைகள், 120 வழிப்பறி கொள்ளைகள் மற்றும் 8 பாலியல் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரிகிறது.
கொள்ளையர்கள், ரவுடிகள் எல்லாம் அண்டை மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து விட்டதாக ஜெயலலிதா கூறினார். அப்படியெனில் தற்போதைய சம்பவங்களில் தொடர்புடையவர்கள் யார்?
நீதிமன்றத்தில் சந்திப்போம்: நில மோசடிகளில் உண்மையிலேயே தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் ஆட்சேபணை இல்லை. பொய்யான புகார்களைப் பெற்றுப் பழிவாங்க யாராவது முயற்சித்தால் அதை நீதிமன்றத்தில் தி.மு.க. சந்திக்கும். பொய் வழக்குப் பதிவு செய்யும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றார் ஸ்டாலின்.
Sunday, July 17, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.