இறைவனின் திருப்பெயரால்....

Pages

Tuesday, July 26, 2011

என் மீது போடப்பட்ட வழக்குகளை நீதிமன்றத்தில் சந்திப்பேன்: முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அறிக்கை

சேலம். ஜூலை. 26-


சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொது வாழ்க்கையில் ஈடுபட்டு இன்று வரை 54 ஆண்டுகளாக தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் கொள்கை ஏற்று இந்தி மொழி ஆதிக்கத்தை எதிர்த்து தமிழ் மொழிக்காகவும்-தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும்-மக்களின் வாழ்வாதாரம் உயரவும், தமிழர்களின் கலாச்சாரம்-நாகரீகத்தின் பெருமையை நம்முடைய மக்களுக்கு எடுத்துரைத்து பகுத்தறிவு கொள்கை வழியில் சுய மரியாதை உணர்வை ஏற்படுத்திய தலைவர்களின் வழி நின்று திராவிட முன்னேற்ற கழகத்தில் 1956-ம் ஆண்டு முதல் இருந்து தொண்டாற்றி வருபவன் நான்.

 சேலம் மாவட்டத்தின் வளர்ச்சிக்காகவும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் உரிமைக்காகவும் குரல் கொடுத்து வருபவன் நான்.

இந்த கொள்கைக்காக நான் இருப்பதால் இந்த அரசு என் மீது பொய் வழக்கு போட்டு என் பொது வாழ்க்கையை முடக்கி விட முடியாது. கழகத்தை பலவீனமாக்கி விட முடியாது.

 கழகம் நடத்திய விலைவாசி உயர்வு போராட்டத்தை தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டம். ஈழத் தமிழர்களுக்கான உரிமை போராட்டம் மற்றும் அறிஞர் அண்ணா காலத்தில் அறிவித்த போராட்டங்கள், அண்ணா மறைவிற்கு பிறகு தலைவர் கலைஞர் அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்டு சிறை சென்று மக்களுக்காக தியாகங்களை நான் மட்டுமல்ல என்னை பெற்ற தாய் முதல் என் மனைவி, பிள்ளைகள் அனைவரும் பல்வேறு சோதனைகளை தாங்கி கொண்டு தான் திராவிட முன்னேற்ற கழகத்தில் தொடர்ந்து இருந்து மக்களுக்காக உழைத்து வருகிறேன்.

 1975-ம் ஆண்டு தேசிய நெருக்கடி காலத்தில் 1976-ம் ஆண்டு கழக ஆட்சி கலைக்கட்டப்பின் நானும் எனது குடும்பமும் எவ்வளவு அடக்குமுறைகளை, அச்சுறுத்தல்களை சந்தித்தோம் என்பதை மாவட்ட மக்கள் மட்டுமல்ல தமிழ்நாடே நன்கு அறியும். அரசியல் காரணத்திற்காக பொய் வழக்கு போடுவதால் பொது வாழ்க்கையில் இருந்து நான் ஒதுங்கி விட மாட்டேன்.

 இப்போது என் மீது போடப்பட்டுள்ள வழக்கு முற்றிலும் உண்மை இல்லை. இந்த பொய் வழக்கை நீதிமன்றத்தில் சந்திக்க உள்ளேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.