இறைவனின் திருப்பெயரால்....

Pages

Monday, July 25, 2011

நான் செய்தது தவறு என்றால் முன்பு இருந்த மந்திரிகளும் ஜெயிலில் இருக்க வேண்டும்: கோர்ட்டில் ஆ.ராசா வாதம்

புதுடெல்லி, ஜூலை. 25-
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை துறை அதிகாரி தெரிவித்து இருந்தார். இந்த முறைகேடு பற்றி சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இதில் பிப்ரவரி மாதம் 2-ந் தேதி முன்னாள் தொலைத் தொடர்பு மந்திரி ஆ.ராசா, அதிகாரிகள் சித்தார்த் பெகுரா, சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாகித் பல்வா மற்றும் தனியார் டெலிகாம் உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
ஸ்பெக்ட்ரம் பணம் ரூ.200 கோடி கலைஞர் டி.வி.க்கு கைமாறியது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கலைஞர் டி.வி. பங்குதாரர் கனிமொழி எம்.பி., நிர்வாக இயக்குனர் சரத்குமார் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள சி.பி.ஐ. விசேஷ கோர்ட்டில் தொடங்கியது. சி.பி.ஐ. தரப்பு வக்கீல் ஆஜராகி வாதாடினார். இதில் ஆ.ராசா தான் முக்கிய குற்றவாளி என குறிப்பிட்டார். அடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி வாதாடலாம் என்று நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசா தனது தரப்பில் தானே இன்று ஆஜராகி வாதாடுவதாக கோர்ட்டில் தெரிவித்து இருந்தார். இதற்கு நீதிபதி அனுமதி அளித்தார். இதையடுத்து அவர் இன்று காலை திகார் ஜெயிலில் இருந்து வேனில் சி.பி.ஐ. கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.
நீதிபதி முன் அவர் வாதாடுகையில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். அவரது வாதம் வருமாறு:-
ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் நான் எந்த தவறும் செய்யவில்லை. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கொள்கை முன்பு இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் எடுக்கப்பட்டது. அதையே தொடர்ந்து பின்பற்றினோம்.
நான் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்தது தவறு என்றால் எனக்கு முன்பு இருந்தவர்கள் செய்ததும் தவறு தான். 1993 முதல் தொலைத் தொடர்புத்துறை மந்திரிகளாக இருந்தவர்களும் என்னோடு ஜெயிலில் இருக்க வேண்டும்.
தொலைத்தொடர்பு மந்திரியாக அருண்ஷோரி இருந்த போது 26 லைசென்சுகள் வழங்கப்பட்டது. தயாநிதி மாறன் 25 லைசென்சுகள் வழங்கினார். நான் 122 லைசென்சுகள் வழங்கினேன். இதில் எண்ணிக்கையில் தான் வேறுபாடு இருக்கிறது. மற்றபடி நான் மேற்கொண்டு எதுவும் செய்யவில்லை.
அவர்கள் செய்தது தவறு இல்லை என்றால், என்னை மட்டும் குற்றம் சாட்டுவது ஏன்? என்னிடம் மட்டும் கேள்வி கேட்பது ஏன்? அவர்கள் செய்யாததை விட நான் ஒன்றும் செய்யவில்லை.
2003-ல் மத்திய மந்திரி சபை எடுத்த முடிவை கடைப்பிடித்தேன். இதில் சட்ட விதிமுறைகளை பின்பற்றினேன். அதை மீறி எதுவும் செய்யவில்லை. இதற்காக எனக்கு கிடைத்த பரிசு (கைது) இது. நான் எடுத்த முடிவு பிரதமர் மன்மோகன்சிங்குக்கும் அப்போது நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரத்துக்கும் தெரியும்.
சட்ட விதிகளின்படிதான் டி.பி.ரியாலிட்டி நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பிரதமர் முன்னிலையில் நிதி மந்திரி இதற்கு ஒப்புதல் கொடுத்தார். இதில் எங்கே குற்றம் இருக்கிறது. எங்கே சட்டமீறல் இருக்கிறது? அவர்கள் முன்னிலையில் எடுக்கப்பட்ட முடிவு என்னை ஜெயிலில் தள்ளி இருக்கிறது.
நான் மந்திரியாக இருந்த போது சாதாரண மக்களும் செல்போனில் பேச நடவடிக்கை எடுத்தேன். செல்போன் கட்டணம் மிகவும் குறைக்கப்பட்டது. சாதாரண ரிக்ஷா தொழிலாளி முதல் வேலைக்காரர்கள் வரை செல்போன் வைத்திருக்க முடிந்தது. நாட்டு மக்களுக்காக சேவை செய்தேன். நான் மந்திரியாக இருந்த போது தான் செல்போன் கட்டணம் மலிவானது. இதனால் ஏழைகள் செல்போன் பயன்படுத்த முடிந்தது.
இவ்வாறு ஆ.ராசா கூறினார்.
தொடர்ந்து கோர்ட்டில் வாதாடி வருகிறார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.