நீண்ட நாள் எதிர்பார்ப்பு இப்போது நிறைவேறிய சந்தோஷத்தில் தி.மு.க.,வினர் உள்ளனர். அந்தளவுக்கு, தயாநிதியின் செயல்பாடுகளை, தி.மு.க.,வின் மேல்மட்டத் தலைவர்கள் முதல் அடிமட்டத் தொண்டர்கள் வரை வெறுத்து வந்துள்ளனர்.
தயாநிதி மற்றும் கலாநிதி ஆகியோரின் போக்கை தி.மு.க., தலைவர் கருணாநிதியும் ரசிக்கவில்லை. "ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தில் ராஜா கைதாகி சிறை சென்ற போது கூட, ராஜா தவறு செய்யவில்லை, வழக்கை சந்தித்து நிரபராதி என்று நிரூப்பிபோம் என ராஜாவுக்கு ஆதரவாகவே கருணாநிதி பேசினார். தி.மு.க., பொதுக் குழுவிலும் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், தயாநிதி விவகாரத்தில் ஒதுங்கி நிற்கும் பாணியையே அவர் கடைபிடித்து வருகிறார். சுப்ரீம் கோர்ட்டில் தயாநிதி மீது சி.பி.ஐ., குற்றம் சுமத்தியதும், தயாநிதியிடம் பேசாமல், டில்லியிலிருந்த டி.ஆர்.பாலுவை அழைத்து, "தயாநிதியை ராஜினாமா செய்யச் சொல்' என கருணாநிதி கூறியுள்ளார். அந்தளவுக்கு அவர் கோபமாக இருப்பதாக தி.மு.க., தலைவர்கள் கூறுகின்றனர்.
"ஸ்பெக்ட்ரம்' விவகாரம் பூதாகரமாக வெடித்து, கனிமொழி மற்றும் ராஜாவை பழி வாங்கியதோடு மட்டும் அல்லாமல், கட்சிக்கு பெரும் தலைக்குனிவை ஏற்படுத்த தயாநிதி தான் காரணம் என தலைவர் நினைக்கிறார். நல்லவர்களாக காட்டிக் கொள்ள முயன்ற இவர்களின் குட்டு இப்போது வெளிப்பட்டு விட்டது' என தி.மு.க., மூத்த தலைவர் ஒருவர் கூறுகிறார்.
அவர் மேலும் கூறுகையில், "மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல்லை விற்க நிர்பந்தித்து, அதுவரை ஏர்செல் நிறுவனத்துக்கு "2ஜி'லைசென்ஸ் வழங்காமல் இழுத்தடித்து காரியம் சாதித்துள்ளார். இதற்கு, தங்களது நிறுவனத்துக்கு மேக்சிஸ் நிறுவனத்தின் முதலீட்டைப் பெற்றனர் என்பது சி.பி.ஐ., தயாநிதி மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டு. இதை பார்க்கும்போது, தி.மு.க., கொடுத்த அமைச்சர் பதவியை, தங்களது நிறுவன வளர்ச்சிக்காக மட்டுமே அவர்கள் பயன்படுத்தி உள்ளனர். அவரால் கட்சிக்கு எந்தப் பயனும் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது' என்கிறார்.
"தயாநிதியை கட்சிக்கு கொண்டு வந்தது கருணாநிதி. அவரது எதிர்பார்ப்புக்கு தயாநிதி இருப்பார் என நினைத்தோம். ஆனால், பேரன் என்ற உறவைப் பயன்படுத்திக் கொண்டு, கட்சியை அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைத்தனர். ஒரு கட்டத்தில், கட்சியை உடைக்கவும் அவர்கள் முயன்றனர். கட்சியில் தொண்டர் பலமே இல்லாமல், இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்ட அவர்கள் மீது, கட்சி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகுந்து வருத்தத்தைத் எங்களைப் போன்றவர்களுக்குத் தருகிறது' என ஆற்றாமையுடன் கூறுகிறார் மாவட்ட நிர்வாகி ஒருவர்.
தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மனநிலையைப் பார்க்கும்போது, தயாநிதி விவகாரத்தை தி.மு.க, பெரிதாக கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. கட்சி எம்.பி., என்பதால், மீடியாக்களை சந்திக்கும்போது எழும் கேள்விகளுக்கு, மழுப்பலான பதில்களை கூறுவிட்டு தி.மு.க., தலைமையும் நின்றுவிடும் எனத் தெரிகிறது.
"ஸ்பெக்ட்ரம்' விவகாரத்தில் பெரும் அவப்பெயரை சந்தித்துள்ள நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மீதமுள்ள 3 ஆண்டு காலத்தில், காங்கிரசிடம் எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்துவிடவே தி.மு.க., நினைக்கிறது.
ராஜா, தயாநிதி ஆகியோரால் மத்திய அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள காலியிடத்துக்கு யாரையும் பரிந்துரைக்க தி.மு.க., தலைமை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. கனிமொழிக்கு ஜாமின் வாங்குவதே தி.மு.க., முன் உள்ள முக்கிய அஜெண்டாவாக இருக்கிறது. காங்கிரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்காமல், மூன்றாண்டை கடத்திவிட்டு, 2014 லோக்சபா தேர்தலுக்கு புதிய கூட்டணியை உருவாக்குவதே தி.மு.க.,வின் இலக்காக இருக்கிறது.
Sunday, July 10, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.