புதுடில்லி:"தயாநிதி மீது ஏர்செல்லின் முன்னாள் உரிமையாளர் சிவசங்கரன் சுமத்திய குற்றச்சாட்டுகள் உண்மையே' என, தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள் மூவர், சி.பி.ஐ.,யிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனடிப்படையில், தயாநிதியிடம் சி.பி.ஐ., அதிகாரிகள் விரைவில் விசாரணை நடத்த உள்ளனர்.தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்தபோது, 2004 முதல் 2005 வரை அத் துறைச் செயலராக இருந்து, தற்போது ஓய்வு பெற்றுள்ளவர் நிருபேந்திர மிஸ்ரா. அப்போது மிஸ்ராவின் உதவியாளர்களாக இருந்தவர்கள் ராம்ஜி சிங் குஷாவா, பி.கே.மிட்டல். இவர்களில் ராம்ஜி சிங் குஷாவா, தற்போது தொலைத் தொடர்புத் துறையில், தந்தியில்லாத் துறையின் இணை ஆலோசகராக உள்ளார். மிட்டல் தற்போது காஷ்மீர் பிராந்திய தொலைத்தொடர்புத் துறையின் தலைமைப் பொது மேலாளராக பணிபுரிகிறார்.
கடந்த 2001-2006 காலகட்டத்தில் நடந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து விசாரணை நடத்த, சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது. அதனடிப்படையில், இவர்கள் மூவரிடமும், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தி, அவர்களின் வாக்குமூலங்களை சமீபத்தில் பதிவு செய்தனர். அப்போது மூவரும், "கூடுதல் உரிமங்கள் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கேட்டு, ஏர்செல் சார்பாக, சிவசங்கரன் தாக்கல் செய்த விண்ணப்பங்களை தயாநிதி வேண்டுமென்றே இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைத்தார். உரிமங்கள் தரவும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யவும் மறுத்து வந்தார். வேண்டுமென்றே இழுத்தடித்தார். இந்த விவகாரத்தில், உரிமம் வழங்கும்படி, நாங்கள் தெரிவித்த யோசனைகளை எல்லாம் நிராகரித்து விட்டார்' என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால், இந்த வாக்குமூலங்கள் அடிப்படையில், தயாநிதிக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையாக (எப்.ஐ.ஆர்.,) பதிவு செய்ய சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளது.
இந்த வாரம் அவரை அழைத்து விசாரணை நடத்தவும் தீர்மானித்துள்ளது.இந்த வாரம் விசாரணைக்கு வர முடியுமா என்பது குறித்து, தயாநிதிக்கு சி.பி.ஐ., அதிகாரிகள் கடிதம் அனுப்ப உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தயாநிதி, தற்போது அமைச்சர் பதவியில் இருந்து விலகி விட்டதால், அவரை விசாரிக்க மத்திய அரசின் அனுமதியை சி.பி.ஐ., பெற வேண்டியதில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
Sunday, July 10, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.