இறைவனின் திருப்பெயரால்....

Pages

Sunday, June 12, 2011

சமச்சீர் கல்வி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல்

சமச்சீர் கல்வி விவகாரம் தொடர்பாக, தமிழக அரசு, நாளை காலை சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்கிறது. ஏற்கனவே அறிவித்தபடி, அனைத்து பள்ளிகளையும், வரும் 15ம் தேதி திறக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


தி.மு.க., அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், கடந்த கல்வியாண்டில், முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. இந்த கல்வியாண்டில், இதர எட்டு வகுப்புகளுக்கு அமல்படுத்த, பாடப் புத்தகங்கள் தயாராக அச்சடிக்கப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.புதிதாக பதவியேற்ற அ.தி.மு.க., அரசு, சமச்சீர் கல்வித் திட்டம் தரமானதாக இல்லை எனக் கூறி, அத்திட்டத்தை நிறுத்தி வைத்து அறிவித்தது. சட்டசபையில், கடந்த 7ம் தேதி, சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தும் வகையில், சட்டத் திருத்த மசோதா கொண்டு வந்து, விவாதத்திற்கு பின், அன்றே நிறைவேற்றியது.

அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்புகள், சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், நேற்று முன்தினம் தீர்ப்பு கூறப்பட்டது. "நடப்பு கல்வியாண்டில், முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுடன், இதர வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என, நீதிபதிகள் தீர்ப்பு கூறியுள்ளனர்.

அதிர்ச்சி அடைந்த தமிழக அரசு, தீர்ப்பு வந்ததும் அவசர ஆலோசனை நடத்தியது. தலைமைச் செயலகத்தில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடந்த கூட்டத்தில், துறைச் செயலர் சபீதா மற்றும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.அதில், ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தால், உடனடியாக தீர்ப்பு பெறுவதற்கு கால அவகாசம் இருக்கிறதா, அப்படி மேல் முறையீடு செய்வதால், மேலும் பள்ளிகளை தள்ளி வைக்க வேண்டிய நிலை ஏற்படுமா என்பது குறித்து, விரிவாக விவாதித்ததாகக் கூறப்படுகிறது.இதனடிப்படையில், தமிழக அரசு, சில முடிவுகளை எடுத்துள்ளது.

சென்னை ஐகோர்ட் விதித்த இடைக்கால தடையை ரத்து செய்யக்கோரி, தமிழக அரசு, நாளை காலை, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், செயலர் சபீதா மற்றும் அதிகாரிகள் குழு, நேற்று காலை டில்லி புறப்பட்டுச் சென்றனர்.டில்லியில், சட்ட நிபுணர்கள் குழுவுடன் நேற்று பல முறை அமைச்சரும், அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினர்.

சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் தரமாக இல்லாதது குறித்து, மேல் முறையீட்டு மனுவில் விரிவாக விளக்கி கூற உள்ளது. சுப்ரீம் கோர்ட்டுக்கு தற்போது கோடை விடுமுறை என்றாலும், இரு தினங்களில் பள்ளிகள் திறக்க உள்ள நிலையை எடுத்துக் கூறி, அவசர மனுவாக ஏற்று விசாரிக்க, தமிழக அரசு வலியுறுத்த உள்ளது.இதில் தீர்ப்பு வர, சில நாட்கள் ஆகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. அது வரை, அமைச்சர் மற்றும் அதிகாரிகள் டில்லியிலேயே தங்கியிருந்து, வழக்கை விரைவுபடுத்தும் வேலைகளில் ஈடுபடுவர் என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையே, ஏற்கனவே அறிவித்தபடி, 15ம் தேதி பள்ளிகளை திறக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து, பள்ளிக் கல்வித் துறை செயலர் சபீதா கூறும்போது, "அறிவித்தபடி, 15ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும். அதில், எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால், மாணவர்களுக்கு எத்தகைய பாடத்திட்டங்களை அமல்படுத்துவது என்பது குறித்து, அரசு பின்னர் அறிவிக்கும்' என்றார்.இதனால், பாடப் புத்தகங்கள் இல்லாமல், மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பழைய பாடப் புத்தங்கள் அச்சிடும் பணி நிறுத்தம் : சமச்சீர் கல்வித் திட்டம் கிடையாது என்பதால், பழைய பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு வினியோகிக்க, தேவையான பாடப் புத்தகங்களை அச்சிட, அரசு நடவடிக்கை எடுத்தது. இந்தப் பணிகள், நூற்றுக்கும் மேற்பட்ட அச்சகங்களில் நடந்து வந்தன. இந்தப் பணியை உடனடியாக நிறுத்துமாறு, நேற்று முன்தினம் இரவு, அனைத்து அச்சக உரிமையாளர்களுக்கும் தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளன.இன்னும் முழுமையான அளவில், பாடப் புத்தகங்கள் அச்சிட்டு முடிக்கப்படவில்லை. சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்குப் பின், பாடப் புத்தகங்களை அச்சடிப்பதா, வேண்டாமா என்பது குறித்து, அரசு முடிவெடுக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும், தமிழக அரசுக்கு ஆதரவாக, சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வரும்பட்சத்தில், பழைய பாடப் புத்தகங்களை முழுமையான அளவிற்கு மாணவர்களுக்கு வழங்க முடியாத நிலை ஏற்படும்..





0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.