இறைவனின் திருப்பெயரால்....

Pages

Sunday, June 12, 2011

தகவல் உரிமை சட்டத்திலிருந்து சி.பி.ஐ.,க்கு விலக்கு: மத்திய அரசு முடிவால் பொதுமக்கள் அதிர்ச்சி

புதுடில்லி: தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலிருந்து, சி.பி.ஐ.,க்கு விலக்கு அளிப்பது என, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, சி.பி.ஐ.,யில் இனி, விசாரணையின் வெளிப்படைத்தன்மை தடைபடும் என்பதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளையும், மிகப்பெரிய அளவிலான ஊழல், மோசடி தொடர்பான வழக்குகளையும், சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்த வழக்குகள் விசாரணையில் இருக்கும் போது, அது தொடர்பான விவரங்களை அளிக்கும்படி, சி.பி.ஐ.,க்கு, பலரும் கோரிக்கை விடுக்கின்றனர். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தியும் தகவல்கள் கேட்கின்றனர். வழக்குகள் குறித்த தகவல்களை அளிப்பது, சம்பந்தப்பட்ட வழக்குகளின் விசாரணையை பாதிக்கும் என்பதால், இந்த சட்டத்திலிருந்து, தங்களுக்கு விலக்கு அளிக்கும்படி, மத்திய அரசிடம் சி.பி.ஐ., சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலிருந்து, சி.பி.ஐ.,க்கு விலக்கு அளிப்பது என, முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அமைச்சரவையில் கருத்து வேறுபாடுகள் எழுந்தபோதும், "சி.பி.ஐ.,யின் இந்த கோரிக்கை, நியாயமானது தான்' என, மத்திய அமைச்சரவை, ஒருமனதாக பரிந்துரை செய்துள்ளது. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

சி.பி.ஐ., செய்தி தொடர்பாளர் தாரிணி மிஸ்ரா கூறியதாவது: தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலிருந்து சி.பி.ஐ.,க்கு விலக்கு அளிப்பது குறித்து, மத்திய அமைச்சரவை எடுத்த முடிவு பற்றி, எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. இருந்தாலும், வழக்கு பற்றிய தகவல்களை மற்றவர்களுக்கு கொடுப்பதால், விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும் என்பது, எங்களின் கோரிக்கை. சி.பி.ஐ.,யை பொறுத்தவரை, ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டதும், அந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரி, அது தொடர்பான தன் கருத்தை விளக்கி, இயக்குனருக்கு அறிக்கை அளிப்பார். சி.பி.ஐ., வழக்குகளில், இது முக்கியமான ஆதாரமாக கருதப்படுகிறது. இந்த தகவல்கள் பகிரங்கபடுத்தப்பட்டால், விசாரணைக்கு பாதிப்பு ஏற்படுவதோடு, பல்வேறு பிரச்னைகளும் ஏற்படும். இதன் காரணமாகவே, தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கும்படி வலியுறுத்துகிறோம். இவ்வாறு தாரிணி கூறினார். மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு, சி.பி.ஐ.,யால் தற்போது விசாரிக்கப்பட்டு வரும் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையின் வெளிப்படையான தன்மை குறித்து, கேள்வியை எழுப்பியுள்ளது.





0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.