இறைவனின் திருப்பெயரால்....

Pages

Monday, June 27, 2011

ஊழலுக்கு எதிரான போரை முன்பே துவக்கி விட்டேன்: மாணவிக்கு கலாம் பதில்

திண்டுக்கல்:""ஊழலுக்கு எதிரான போரை நான் முன்பே துவக்கி விட்டேன்,'' என மாணவியின் கேள்வி ஒன்றுக்கு அப்துல்கலாம் பதிலளித்தார்.


காந்திகிராமத்தில் நடந்த கருத்தரங்கில் பேசிய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூட்டத்தினரை பார்த்து 10 நிமிடம் கேள்வி கேளுங்கள் என்றார்.

ஒரு மாணவன் எழுந்து "அறிவு' என்றால் என்ன, என்றார்.

அதற்கு கலாம்," அறிவு என்பது வாழ்க்கையில் சிறப்பு. நல்ல எண்ணம் இருந்தால், நல்ல சிந்தனை உண்டாகும்,' என்றார்.

மாணவி: நான் கிராமத்தில் இருந்து படிக்க வந்துள்ளேன். நான் முன்னேற என்ன செய்ய வேண்டும்.

கலாம்: என்னவாக ஆசைப்படுகிறாய்.

மாணவி: "மெரைன் பயாலஜி' படிக்க ஆசைப்படுகிறேன்.

கலாம்: அதில் முயற்சி எடுத்து படித்து முன்னேறு.

மாணவர்: விவசாய நிலங்கள் பிளாட்டுகளாக மாற்றப்படுகின்றன.

கலாம்: இந்தியாவின் உணவு உற்பத்தி நவீன தொழில் நுட்பத்தில் அதிகரித்து வருகிறது. நாம் வாழ்க்கையில் ஐந்து மரங்களை வளர்க்க வேண்டும்.

மாணவி: இந்தியாவில் ஊழல் பிரச்னை குறித்து..

கலாம்:நான் இந்த போராட்டத்தை முன்பே துவக்கி விட்டேன். ஒவ்வொரு வீடும் சிறப்பாக இருந்தால், நாடும் சிறப்பாக இருக்கும், என்றார்.

கிராமங்கள் முன்னேறினால் தான் இந்தியா வல்லரசாகும்: கலாம்:திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில், காந்தி கிராம கிராமிய பல்கலையும், காரைக்குடி சுதேசி அறிவியல் இயக்கமும் இணைந்து நடத்திய தமிழக அறிவியல் பேரவையின் 11வது கருத்தரங்கு நடந்தது. பல்கலை துணைவேந்தர் சோம.ராமசாமி தலைமை வகித்தார். பதிவாளர் நாராயணசாமி வரவேற்றார். ஏவுகணை, " பிரமோஸ்' திட்ட இயக்குனர் சிவதாணுபிள்ளை, குன்றக்குடி பொன்னம்பல அடிகள், அமைப்பு செயலர் நாகராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

கருத்தரங்கை துவக்கி வைத்து அப்துல் கலாம் பேசியதாவது: பாரதியார் 1910ல், பாஞ்சாலி சபதத்தில் "சரஸ்வதி வந்தனம்' என்ற பாடலில் அண்ட சராசரங்கள் சுழன்று கொண்டே இருக்கின்றன. அது போல நாமும், ஓயாது, துவளாது செய்தால், இறையருளால் நம் நாடு மிக விரைவில் வளர்ந்த நாடாக உயரும் என்று, ஒரு விஞ்ஞானி போல் பாடியுள்ளார்.

நாம் எந்த பணி செய்தாலும், அதில் ஒரு லட்சியம் வேண்டும். நமது பல்கலைகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிலையங்கள் நமது நாட்டிற்கு தேவையான அறிவியல் ஆராய்ச்சி மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் தர வேண்டும்.

இந்தியாவில் 70 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இதனால், கிராமப்புறங்களில் கல்வி, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, மேம்படுத்தினால் தான் 2020ல் இந்தியா வல்லரசாகும். நகரங்களுக்குள்ள வசதிகள் கிராமங்களுக்கு கிடைக்க, "புரா' என்ற திட்டத்தை துவக்கினேன். தமிழக அரசு இந்த திட்டத்தை மாநிலம் முழுமைக்கும் நிறைவேற்ற முடிவு செய்திருப்பது, இந்தியாவிற்கே ஒரு முன்னுதாரணமாக திகழும். மாநிலங்கள் வளர, மாவட்டங்கள் வளர வேண்டும். மாவட்டங்கள் வளர, கிராமங்கள் ஒவ்வொன்றாக வளர வேண்டும்.இவ்வாறு கலாம் பேசினார்.

ஆசிரியருக்கு மரியாதை : காந்தி கிராம பல்கலைக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், தன் பேராசிரியர் சின்னத்துரையிடம் சென்று ஆசி பெற்றார்.அவருக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார். அப்துல் கலாம் கூறுகையில், "நான் எப்போது திண்டுக்கல் வந்தாலும், அவர் இருப்பிடம் சென்று ஆசி பெறுவேன். தற்போது அவர் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததால், எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. பேராசிரியர் சின்னத்துரை எனக்கு நடத்திய, "அட்டாமிக்' பாடம் தான் நான் அணுசக்தி, அணுகுண்டு தயாரிக்க என்னை ஊக்கப்படுத்தியது. இதற்காக நான் பேராசிரியருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.

"என்னை வழி நடத்தியது திருக்குறள்' : "நண்பர்களே என் வாழ்க்கையின் பல்வேறு நிலைகளில் உறுதுணையாக இருந்து, உற்ற துணையாக இருந்து வாழ்க்கையின் வழிகாட்டியாக என்னை வழி நடத்தியது திருக்குறள் தான். எனக்கு பிடித்த ஒரு திருக்குறள் என் வாழ்விற்கு வளம் கொடுத்தது.

அது...

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண்

என்பதாகும். அறிவு அழிவு வராமல் காக்கும் கருவியாகும். பகைவராலும் அழிக்க முடியாத உள் அரணுமாகும்' என்றார்.







0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.