இறைவனின் திருப்பெயரால்....

Pages

Monday, June 20, 2011

அரசு நிர்வாகத்தை சீர்குலைத்துள்ளது தி.மு.க.,- முதல்வர் ஜெ.,

திருச்சி: ""நான் ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதம் தான் ஆகிறது. அரசு துறையின் பல்வேறு நிர்வாகச் சூழலை பார்க்கும்போது, எனக்கு கடும் அதிர்ச்சியாக இருக்கிறது. முந்தைய தி.மு.க., அரசு பல்வேறு துறைகளை சீரழித்து, குளறுபடிகளை செய்து, சீர்குலைத்துள்ளது,'' என, ஸ்ரீரங்கத்தில் முதல்வர் ஜெயலலிதா பேசினார்.


திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிக்கான, 190 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 430 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி, தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:தமிழக மக்களை விலை பேசி, அவர்களை விலைக்கு வாங்கி விடலாம் என நினைத்தவர்களின் கனவு தகர்க்கப்பட்டுள்ளது. அரசின் சார்பில் நடக்கும் முதல் கூட்டம் இது. மக்கள் நலத்திட்டங்களுக்கு என் அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. தேர்தல் அறிக்கையில் கூறியபடி, பொது வினியோகத் திட்டத்தின் கீழ் இலவச அரிசி வழங்கப்படுகிறது. இதன் மூலம் மக்கள் உணவுப் பாதுகாப்பை உரிமையாகவே பெற்று விட்டனர்.ஏழைப் பெண்கள் திருமணம் செய்ய தாலிக்கு தங்கம், மீனவர்களுக்கான, மீன்பிடி தடைக்கால உதவித்தொகை உயர்வு, முதியோர் தொகை உயர்வு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு முதல் கட்டமாக இந்தாண்டு, ஒன்பது லட்சம் பேருக்கு இலவச, "லேப்-டாப்' வழங்கப்படும்.

வறுமையை அகற்றுவதில் அரசு முனைப்பாக உள்ளது. பொருளாதார வளர்ச்சி, ஏழை மக்களின் வாழ்க்கைத்தரம் உயர, சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 300 சதுர அடியில், 1.80 லட்சம் ரூபாய் செலவில் வீடு கட்டித் தரப்படும். நகர்ப்புற மக்களுக்கு மின் விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கப்படும். இத்திட்டம் அண்ணாதுரை பிறந்த நாளான செப்., 15 முதல் செயல்படுத்தப்படும்.நான் ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதம் தான் ஆகிறது. அரசு துறையின் பல்வேறு நிர்வாகச் சூழலை பார்க்கும்போது, எனக்கு கடும் அதிர்ச்சியாக இருக்கிறது. முந்தைய மைனாரிட்டி தி.மு.க., அரசு பல்வேறு துறைகளை சீரழித்து, குளறுபடிகளை செய்து, சீர்குலைத்துள்ளது.

துறை ரீதியாக உள்ள குளறுபடிகளை சரி செய்வதே எனக்கு மாபெரும் சவாலாக அமைந்துள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதியில், 190 கோடி ரூபாய் செலவில் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க வந்துள்ளேன். முந்தைய ஆட்சியில் போடப்பட்ட திட்டங்கள், மக்களுக்கு பயன்படாமல், அவர்களுக்கு பயன்பட்டது. ஆனால், அ.தி.மு.க., திட்டங்கள் மக்களுக்காக மட்டுமே தீட்டப்பட்டவை.தமிழக மக்களின் வாழ்க்கைத்தரம் உயரவும், பொருளாதாரம் மேம்படவும் நடவடிக்கை எடுக்கப்படும். மணிகண்டம், மணப்பாறை ஒன்றியம் ஆகிய பகுதிகளில் சாலை வசதி, பஸ் வசதி மருத்துவமனை ஏற்படுத்தி தர வேண்டும் என, இப்பகுதி மக்கள் கூறிபடி திட்டங்கள் நிறைவேற்றப்படும்.இவ்வாறு முதல்வர் பேசினார்.

ஜெ., சொன்ன குட்டிக்கதை : ஒரு சீடன், "மனிதனின் மதிப்பு எவ்வளவு' என்று தன் குருவிடம் கேட்டான். அதற்கு அந்த குரு, ஒரு வைரக்கல்லை அந்த சீடனிடம் கொடுத்து, "இந்த வைரக்கல்லின் மதிப்பு எவ்வளவு என்று கேட்டு வா; ஆனால், விற்கக் கூடாது' என்றார்.அந்த சீடன் முதலில் ஒரு ஆரஞ்சு பழக்கடைக்காரரிடம் கேட்டார். அதற்கு அந்த ஆரஞ்சு பழக்கடைக்காரர், இரண்டு ஆரஞ்சு பழம் தருவதாகக் கூறினார். தொடர்ந்து உருளைக்கிழங்கு வியாபாரி, நான்கு கிலோ உருளைக்கிழங்கு தருவதாக கூறினார். மளிகைக்கடைக்காரர், அரிசி, பருப்பு தருவதாக கூறினார். தங்க நகை வியாபாரி, ஆயிரம் ரூபாய் தருவதாக கூறினார்.கடைசியாக வைர வியாபாரியிடம் அந்த வைரக்கல்லை காட்டி கேட்டான். அந்த வியாபாரி அந்த கல்லை ஆராய்ந்து பார்த்துவிட்டு, "இது மிகவும் விலை மதிப்பற்றது. இதற்கு எவ்வளவு வேண்டுமானாலும் பணம் தரலாம்' என்றார். குழம்பிப் போன சீடன், குருவிடம் நடந்ததை கூறினான். "மனிதனின் மதிப்பு கிடைத்தற்கரிய வைரக்கல்லை போன்றது' என்றார் குரு.கதையை கூறிய பின், அதைத்தான் இந்த தேர்தல் மூலம் நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். மக்கள் சக்தியை மதிப்பு குறைவாக எடை போட்டவர்களை அப்புறப்படுத்தி இருக்கிறீர்கள் என்று ஜெ., பேசினார்.





0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.