இறைவனின் திருப்பெயரால்....

Pages

Monday, June 20, 2011

மத்திய அமைச்சரவையில் மாற்றம்: தயாநிதி பதவி பறிபோகுமா?

புதுடில்லி:+வரும் ஜூலை 2ம் தேதி, மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான புகாரில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர் தயாநிதியின் பதவி பறிபோகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.


மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராஜா, ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிக்கியதால், பதவியை ராஜினாமா செய்தார். ராஜா வகித்து வந்த தொலைத்தொடர்புத் துறையை, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், கூடுதலாக கவனித்து வருகிறார்.அதேபோல், ஆதர்ஷ் அடுக்கு மாடி குடியிருப்பு ஊழல் பிரச்னை காரணமாக, மகாராஷ்டிரா முதல்வர் பதவி விலகியதால், மத்திய அமைச்சராக இருந்த பிரித்விராஜ் சவான், அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். ரயில்வே அமைச்சராக இருந்த மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வராக பதவியேற்றார். இவர்கள் இருவரும் வகித்த பதவிகளுக்கு, புதிதாக யாரும் நியமிக்கப்படவில்லை. சில அமைச்சரவை பொறுப்புகளை, பிரதமர் மன்மோகன் சிங்கே கூடுதலாக கவனித்து வருகிறார்.

சில அமைச்சர்களின் செயல்பாடுகள், பிரதமருக்கு திருப்தி அளிக்கவில்லை. எனவே, காலியாக உள்ள பதவிகளுக்கு புதிய அமைச்சர்களை நியமிக்கவும், சரியாகச் செயல்படாத அமைச்சர்களை மாற்றி விட்டு, அந்த பதவிகளை, சிறப்பாகச் செயல்படுவோருக்கு வழங்கவும் பிரதமர் மன்மோகன் சிங் திட்டமிட்டுள்ளார்.மேலும், தற்போது மத்திய ஜவுளித் துறை அமைச்சராக உள்ள தயாநிதி, முன்னர் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் கூறியுள்ளன. இதனால், மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை தவிர்க்கும் வகையில், அவரது அமைச்சர் பதவி பறிக்கப்படுமா என்ற கேள்வி, மத்திய அரசு வட்டாரங்களில் எழுந்துள்ளது.

மத்திய அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என, ஏற்கனவே பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்தார். ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள், லோக்பால் மசோதா போன்ற காரணங்களால், அமைச்சரவை மாற்றம் தாமதமாகியது. விரைவில் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் துவங்கவுள்ளதால், அதற்கு முன்னதாக, மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்ய, பிரதமர் மன்மோகன் சிங் முடிவு செய்துள்ளார்.அடுத்த மாதம் 2ம் தேதி, அமைச்சரவை மாற்றம் செய்யப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை, மத்திய அமைச்சரவை செயலக அதிகாரிகள் செய்து வருகின்றனர். ஜனாதிபதி மாளிகை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, அமைச்சரவை செயலக அதிகாரிகள் இதுகுறித்து ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சரவை மாற்றத்தின் போது, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் சிதம்பரம், ராணுவத்துறை அமைச்சர் அந்தோணி ஆகியோரின் இலாகாக்களில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது என, தகவல் வெளியாகியுள்ளது. ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்காத இளைஞர்களுக்கு, அமைச்சரவையில் அதிக வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.





0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.