இறைவனின் திருப்பெயரால்....

Pages

Monday, June 20, 2011

கான்ட்ராக்டர்களிடம் கமிஷன் கேட்காதீங்க: விஜயகாந்த் கண்டிப்பு

""சட்டசபை தேர்தலை போலவே உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற தயாராக வேண்டும்'' என, தே.மு.தி.க., செயலர்களுக்கு, அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் ஆலோசனை வழங்கினார்.


சட்டசபை தேர்தல் வெற்றிக்குப் பின், முதன் முறையாக சென்னை, கோயம்பேடு தே.மு.தி.க., அலுவலகத்தில் கட்சியின் நகர, ஒன்றிய, பேரூராட்சி செயலர்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தை இரு பகுதியாக பிரித்து, தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு காலை முதல் பகல் வரையும், வட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு பகல் முதல் மாலை வரை நடத்தப்பட்டது.தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், அக்கட்சி மாநில நிர்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், சுதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கூட்டத்தில், அ.தி.மு.க.,- தே.மு.தி.க., கூட்டணி வேட்பாளர்கள், வெற்றிக்காக உழைத்த கட்சியின் நகர, ஒன்றிய, பேரூராட்சி செயலர்களுக்கு விஜயகாந்த் நன்றி தெரிவித்தார்.

அப்போது, விஜயகாந்த் பேசியதாவது:மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெற வைத்துள்ளனர். எதிர்க்கட்சி என்ற மிகப்பெரிய பொறுப்பையும் வழங்கியுள்ளனர். அந்த பொறுப்பை சிறப்பாக செய்ய வேண்டியது நமது கடமை.எனவே, தே.மு.தி.க., நிர்வாகிகள் அனைவரும் மக்கள் தேவையறிந்து, அதை அவர்களுக்கு பெற்றுத் தருவதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும். மாறாக அரசு பணிகளுக்கு டெண்டர் எடுக்கும் கான்ட்ராக்டர்களிடம், கமிஷன் என்ற பெயரில் கையேந்த வேண்டாம். மக்கள் பணி செய்தால் மட்டுமே அவர்கள் மனதில் இடம் பிடிக்க முடியும். வரும் உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெற முடியும். சட்டசபை தேர்தலைப் போன்றே, உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றி பெற, கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும். அதற்கான பணிகளில், இப்போதில் இருந்தே ஈடுபட வேண்டும்.இவ்வாறு விஜயகாந்த் பேசியுள்ளார்.

ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு, அதில் பங்கேற்ற செயலர்களுக்கு மட்டன், சிக்கன் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.

விஜயகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு:சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு, துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், "தன்னுடன் போலீசார் யாரும் பாதுகாப்பிற்காக வர வேண்டாம்' என, விஜயகாந்த் கறாராக தெரிவித்துள்ளார்.

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தே.மு.தி.க., 29 எம்.எல்.ஏ.,க்களை பெற்றது. எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் பொறுப்பேற்றார். வழக்கமாக எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்பவர்களுக்கு அரசு பங்களா, ஒரு எஸ்.ஐ., தலைமையில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுவது வழக்கம். ஆனால், விஜயகாந்த் போலீஸ் பாதுகாப்பை ஏற்காமல் புறக்கணித்து வந்தார்.

இந்நிலையில், ரிஷிவந்தியம் தொகுதியில் நன்றி தெரிவிக்கச் சென்றபோது, விஜயகாந்த் சென்ற வாகனம் மீது கல் வீசி தாக்குதல் நடந்தது. உடன் போலீஸ் பாதுகாப்பை ஏற்க வேண்டும் என, தே.மு.தி.க., நிர்வாகிகள், விஜயகாந்திடம் ஆலோசனை வழங்கினர். நீண்ட ஆலோசனைக்கு பிறகு, போலீஸ் பாதுகாப்பை விஜயகாந்த் ஏற்றுள்ளார்.சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு, நான்கு ஆயுதப்படை போலீசார் கொண்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில், ஒருவர் துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீஸ். விஜயகாந்தின் வீட்டிற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள கூண்டில் அமர்ந்து 24 மணி நேரமும், "ஷிப்ட்' முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார், மூன்று வேளையும், வீட்டில் இருந்து எடுத்து வரும் உணவுகளை சாப்பிடுகின்றனர். காலை மற்றும் மாலை நேரத்தில் மட்டும் விஜயகாந்த் வீட்டில் இருந்து அவர்களுக்கு டீ, காபி வழங்கப்படுகிறது. வீட்டிற்கு மட்டும் பாதுகாப்பு போதும்; வெளியில் செல்லும் போது போலீசார் உடன் வரத் தேவையில்லை என, விஜயகாந்த் கறாராக தெரிவித்துவிட்டதாக அக்கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.





0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.