இறைவனின் திருப்பெயரால்....

Pages

Monday, June 27, 2011

தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் கலக்கம்

சட்டசபை தேர்தல் முடிவுகள், தி.மு.க.,வை ஒரு புரட்டு, புரட்டிப்போட்டது போல், அதன் கூட்டணி கட்சிகளையும் பதம் பார்த்துள்ளது. தேர்தல் தோல்வியால், கூட்டணி கட்சித் தலைமைக்கு எதிரான குரல் எழுந்துள்ளதால், தலைவர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.


தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுடன் காங்கிரஸ் - பா.ம.க., - விடுதலைச் சிறுத்தைகள் - கொங்குநாடு முன்னேற்றக் கழகம் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டன. கூட்டணி கட்சிகள் எதிர்பார்த்த தொகுதிகளைக் காட்டிலும், கூடுதலாக தி.மு.க., வாரி வழங்கியதால், மகிழ்ச்சியோடு தேர்தல் களம் கண்டன. ஆனால், தி.மு.க., அரசின் மீது பொதுமக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி, கோபம் காரணமாக, தி.மு.க.,வும், கூட்டணி கட்சிகளும் கடும் தோல்வியை சந்தித்துள்ளன. தேர்தல் தோல்வி, ஸ்பெக்ட்ரம் விவகாரம் காரணமாக, தி.மு.க., முடங்கியுள்ளது போலவே, கூட்டணி கட்சிகளும், தங்களின் அடுத்த கட்ட அரசியல் பயணத்தை தொடர முடியாமல், திக்கு முக்காடிப்போய் உள்ளன.

கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸ், தேர்தல் தோல்விக்கு, ஸ்பெக்ட்ரம் விவகாரமே காரணம் என வெளிப்படையாக தெரிவித்து, தி.மு.க., மீது குற்றம் சுமத்தியுள்ளது. தேர்தலுக்கு முன், தி.மு.க.,வுக்கு எதிர்ப்பு தெரிவித்த இளங்கோவன் போன்றவர்கள், மீண்டும் தி.மு.க.,வை கடுமையாக விமர்சிக்கத் துவங்கியுள்ளனர்.குறிப்பாக, "கூடா நட்பு கேடாய் முடியும்' என தி.மு.க., தலைவர் கருணாநிதி குறிப்பிட்டது, இளங்கோவன் போன்ற தலைவர்களின் வெறும் வாய்க்கு கிடைத்த அவலாக மாறியுள்ளது. இருப்பினும், எவ்வளவுதான் நெருக்கடி வந்தாலும், மத்திய அரசில் தொடர்வது என்ற தி.மு.க.,வின், "நிலையான' நிலைப்பாட்டால், டில்லி காங்கிரஸ் தலைமை, முடிவெடுக்க முடியாமல் திணறி வருகிறது. டில்லி தலைமையின் முடிவை அறியாத நிலையில், தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள், அரசியலுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு அமைதியாகியுள்ளனர்.

தி.மு.க., கூட்டணியின் அடுத்த பிரதான கட்சியாக பா.ம.க.,விற்கும், தேர்தலில் பெரும் தோல்வி கிடைத்தது. இதனால், அன்புமணியை, ராஜ்யசபா எம்.பி.,யாக்கி, டில்லி அனுப்ப வேண்டும் என்ற கனவும் கலைந்து போயுள்ளது. "நாங்கள் இருக்கும் அணிதான் வெற்றி பெறும்' என்ற பா.ம.க.,வின் பெருமைப்பேச்சுக்கும் முற்றுப்புள்ளி விழுந்துள்ளது. இதற்கெல்லாம் மேலாக, அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் காவேரி, தன்ராஜ் உள்ளிட்டோர் கட்சித்தலைவர் ஜி.கே.மணிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக எடுத்துவைத்துள்ளனர். அடுத்தகட்டமாக, ராமதாஸ், அன்புமணிக்கு எதிராகவும் அவர்கள் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்த, பா.ம.க., கூடாரம் கலகலத்துப் போயுள்ளது. அ.தி.மு.க., கூட்டணியில் தொடர வேண்டும் என, பெரும்பான்மையானோரின் விருப்பத்திற்கு மாறாக, ராமதாஸ் முடிவெடுத்ததாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.அதிருப்தியாளர்களை ஒன்றிணைத்து, போட்டி பா.ம.க.,வை நடத்துமளவிற்கு, விவகாரம் முற்றிப்போயுள்ளது. இதனால், அரசியலை ஒதுக்கிவிட்டு, கட்சி நிர்வாகிகளை சமாதானப்படுத்தி, உட்கட்சி பூசலை தீர்ப்பதிலேயே பா.ம.க., தலைமை தீவிரமாகியுள்ளது.

சட்டசபை தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாத, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இலங்கை விவகாரத்தை வைத்து அரசியல் நடத்தலாம் என திட்டமிட்டிருந்தது. ஆனால், "இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும்' என, சட்டசபையில் நிறைவேற்றிய ஒற்றைத் தீர்மானம் மூலம், அ.தி.மு.க., அதையும் தகர்த்துள்ளது. அ.தி.மு.க., அணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம், இந்திய குடியரசு கட்சி ஆகியவை பலம்பெற்று வருவதும், விடுதலைச் சிறுத்தைகளின் எதிர்காலத்திற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

கொங்குமண்டலத்தில் மிகப்பெரிய சக்தியாக தன்னை கருதிக்கொண்ட கொங்குநாடு முன்னேற்றக் கழகத்திற்கு தேர்தல் தோல்வி பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது. தேர்தல் தோல்வி மட்டுமல்லாது, அ.தி.மு.க., எடுத்துவரும் அடுத்தடுத்த அதிரடிகளால், இக்கட்சியின் முக்கியத்துவம் படிப்படியாக குறைந்து வருகிறது. அமைச்சரவையில் கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒன்பது பேருக்கு இடம்; சாய ஆலை பிரச்னைக்கு தீர்வுக்கு தீவிர நடவடிக்கை என, கொங்கு மண்டலத்தை நிரந்தர கோட்டையாக்கும் விதத்தில், அ.தி.மு.க.,வின் செயல்பாடு அமைந்துள்ளது.அதோடு, அ.தி.மு.க., ஆதரவு பெற்ற, தனியரசு தலைமையிலான கொங்கு இளைஞர் அமைப்பில், கொ.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் இணைந்து வருவதால், கொ.மு.க., மீண்டும் உயிர்பெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

"அடித்த காற்றில் தி.மு.க., என்ற அம்மியே பறக்கும்போது, நாங்கள் எம்மாத்திரம். இப்போதைக்கு கட்சி உடைந்துவிடாமல், அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்துவதில் தான், தோல்வியடைந்த கட்சிகளின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது' என்கிறார், தி.மு.க., கூட்டணி கட்சி ஒன்றின், கொங்கு மண்டல பிரமுகர் ஒருவர்.



0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.