இறைவனின் திருப்பெயரால்....

Pages

Sunday, June 12, 2011

உடனே கவனிப்பாரா முதல்வர்? வி.சாமிநாதன்,

செங்கல்பட்டிலிருந்து எழுதுகிறார்: மின்வெட்டு எப்போது ஏற்படும் என்பது மக்களுக்குத் தெரிவதில்லை. அதே போல், தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகங்கள், நெல் கொள்முதலை எப்போது நிறுத்தும் என்று தெரியாமல், மக்கள் அவதிப்படுகின்றனர்.மதுராந்தகம் நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு, நண்பர் ஒரு வேலையாக செல்லும் அவசியம் ஏற்பட்டது. அங்கு, ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள், அம்போவென கிடந்திருக்கின்றன.சம்பந்தப்பட்ட அதிகாரியை விசாரித்தால், "இங்கு நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டு விட்டது. வேறு இடங்களுக்கு நெல்லை எடுத்துச் செல்ல, விவசாயிகளை அறிவுறுத்தி இருக்கிறோம்' எனக் கூறியுள்ளார்.பங்குகளில் பெட்ரோல் இல்லையெனில், "பெட்ரோல் இல்லை' என்ற அறிவிப்புப் பலகை தொங்கவிடப்படுகிறது. உணவகங்களில் சாப்பாடு தீர்ந்து விட்டால், "சாப்பாடு தயார்' போர்டு எடுத்து வைக்கப்படுகிறது.தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகங்களும், இதுபோன்ற அறிவிப்புகளைச் செய்தால், விவசாயிகளுக்கு இரட்டிப்பு செலவு ஏற்படாது.போக்குவரத்து செலவு, கோணியில் அடைத்து ஏற்றி, இறக்கும் செலவு என, மூட்டைக்கு, 50 ரூபாய் உபரியாக செலவாகும் நிலை, அரசு அதிகாரிகளின் மெத்தனத்தால் ஏற்படுகிறது. மதுராந்தகம் நுகர்பொருள் வாணிபக் கழகம், இன்ன பிற வாணிபக் கழகங்களில், விவசாயிகள் இறக்கி வைத்திருக்கும் நெல்லை மட்டுமாவது கொள்முதல் செய்ய, அரசு உத்தரவிட வேண்டும்.தென்மேற்கு பருவமழை ஆரம்பிக்க உள்ளது. மழை வந்தால், வாணிபக் கழகங்களில், வெட்ட வெளியில் அடுக்கி, குவித்து வைத்துள்ள நெல் அனைத்தும், முளைத்து பாழாய்ப் போய்விடும். தன் ஆட்சிக் காலத்தில், விவசாயிகள் நட்டமடைவதற்கு, முதல்வர் ஜெயலலிதா இடம் தரக்கூடாது. போர்க்கால வேகத்தில், ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கருத்து.


"கூடா நட்பு'விளக்கியிருக்கலாம்!சி.ராம்சந்த், மதுரையிலிருந்து அனுப்பிய, "இ - மெயில்' கடிதம்: தி.மு.க., தலைவர் கருணாநிதி, தன் பிறந்தநாள் செய்தியாக, "கூடா நட்பு கேடாய் முடியும்' என்ற வைர வரிகளை, கழக தொண்டர்களுக்கு கூறி எச்சரிக்கை செய்துள்ளார். பாவம், கழகத் தொண்டர்கள்... "கூடா நட்பு' என்றால், அவர்களுக்கு என்னவென்றே தெரியாது.சிந்தனை என்ற செயல்பாட்டையே காயடித்து, மழுங்க செய்து கொண்ட தொண்டனுக்காக சொல்லப்பட்ட வரிகள் அல்ல இவை. இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட தலைவர்களுக்காக சொல்லப்பட்டது தானா இந்த வரிகள் அல்லது தன் குடும்பத்தினருக்காக இதை சொன்னாரா? அவர் கொஞ்சம் விளக்கமாக சொல்லியிருந்தால், சில நடுநிலை நோக்கர்கள், தங்கள் தலையை பிய்த்து கொண்டிருக்க மாட்டார்கள். ராஜாத்திக்கும், பூங்கோதைக்கும் ஏற்பட்ட நட்பு; கனிமொழிக்கும், ராஜாவுக்கும் ஏற்பட்ட நட்பு; ராஜாவுக்கும், நிரா ராடியாவுக்கும் ஏற்பட்ட நட்பு... இப்படி வரிசையாக, பல, "உன்னதமான' நட்புகளை கூறிக் கொண்டே போகலாம்.எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல, தமிழகத்தையே, இருட்டிலும், புழுக்கத்திலும் தவிக்க விட்டாலும் கூட, எந்தவித குற்ற உணர்வுமே இல்லாமல், தலைவருக்கு பின்னால் நின்று, போட்டோக்களுக்கு போஸ் கொடுத்துகொண்டிருந்த ஆற்காடு வீராசாமியின் நட்பை தான், தனக்கு வாய்த்த, "கூடா நட்பு' என்று கூறுகிறாரோ?நீர் அடித்து நீர் விலகுவதில்லை. கழகத்தில் எல்லாமே அவர் தான் எனும்போது, யாரும், யாரையும், கூடா நட்பென்று கூறி விலகிவிடவும், விலக்கி விடவும் முடியாது.

கு.அருண், புவனகிரியிலிருந்து எழுதுகிறார்: அன்று அன்னா ஹசாரே பற்ற வைத்த நெருப்பு, இன்று மீண்டும், பாபா ராம்தேவ் மூலம் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்திருக்கிறது. ஊழலுக்கு எதிராக, காந்தியவாதியான அன்னா ஹசாரேயும், பாபா ராம்தேவும், இரட்டைக் குழல் துப்பாக்கியாக கிளம்பியுள்ளது, எகிப்து முதல், லிபியா வரை, பல நாடுகளில், ஊழல் அதிபர்களுக்கு எதிராக எப்படி கிளர்ச்சி உண்டாகி உள்ளதோ, அதே எழுச்சி, நம் நாட்டில் தற்போது உண்டாகியுள்ளது.இதில் வேடிக்கை என்னவெனில், ஊழலுக்கு எதிரானவர்கள் என சொல்லிக்கொள்ளும் பிரதமர் மன்மோகன்சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவும், ஊழலுக்கு அரணாக இருப்பவர்களாகத்தான் உள்ளனர். உதாரணமாக, ராஜாவின் மீது குற்றச்சாட்டு உறுதியாகிவிட்ட நிலையிலும், கபில்சிபல் மூலம், "தொலைத் தொடர்புத் துறையில் எந்த ஒரு முறைகேடும் நடக்கவில்லை' என, விளக்கம் கொடுத்தனர். ஆனால், இன்று அதே ராஜா, பல மாதங்களாக திகார் சிறையில் உள்ளார். இந்நிலையில், ஊழல் மற்றும் கறுப்புப் பணத்திற்கு எதிராக உண்ணாவிரதம் துவங்க வந்த பாபா ராம்தேவை, நான்கு மத்திய அமைச்சர்கள், விமான நிலையத்திற்கே சென்று, உண்ணாவிரதத்தை கைவிடக் கோரியுள்ளது, மத்திய அரசு, இந்த உண்ணாவிரதத்தை கண்டு எந்த அளவுக்கு பயந்துள்ளது என்பதை படம் பிடித்துக் காட்டிவிட்டது.இன்று வெளிநாடுகளில் முடங்கிக் கிடக்கும் பல லட்சம் கோடிகளை, நம் நாட்டிற்கு கொண்டு வந்துவிட்டாலே, அனைத்து துறைகளிலும் நம் நாடு தன்னிறைவு பெற்றுவிடும். பாபாவின் கோரிக்கைப்படி, ஊழலில் ஈடுபடுவோர் மீதான குற்றத்தை விசாரித்து, ஓராண்டுக்குள் தீர்ப்பு வழங்கும் வகையில், அதிவிரைவு கோர்ட்டுகளை அமைக்க வேண்டும்."அதிகபட்சமாக மரண தண்டனை அளிக்க வேண்டும்' என சொல்லியுள்ளது சரியே! இன்று சீனாவில், ஊழல் குற்றவாளிகளுக்கு, மரண தண்டனை கொடுக்கப்பட்டு வருகிறது.நாட்டின் நல்லதொரு மாற்றம் கருதி, நாமும், பாபா ராம்தேவ் மற்றும் அன்னா ஹசாரேவின் போ ராட்டத்திற்கு தோள் கொடுத்தும், குரல் கொடுத்தும், ஊழலுக்கு சாவு மணி அடிப்போம்.

வரிச்சலுகை எதற்கு? கலைநன்மணி மகிழ்நன், சென்னையிலிருந்து எழுதுகிறார்: கடந்த, 2001 முதல், 2005 வரை, விளம்பரங்களில் நடித்ததற்கு சச்சின், வருமான வரித்துறையிடம், வரி விலக்கு கோரி இருந்தார்; வரிச்சலுகை கிடைத்திருக்கிறது.அடிப்படையில் சச்சின் ஒரு விளையாட்டு வீரர். அவருக்காக தேசமே நன்றி செலுத்துகிறது. கிரிக்கெட்டில் உலக சாதனையாளராக இன்னும் திகழ்கிறார். அவருக்கு, பதக்கம், பட்டம், விருதுகள் வழங்கி, எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். ஆனால், விளம்பரப்படங்களில் நடிப்பது அவரது பொழுதுபோக்கு.இந்திய விளையாட்டு வீரர்களில், விளம்பரப் படங்களில் நடித்து, கோடிகளில் வருமானத்தைக் குவித்து, சச்சின் முதலிடத்தில் இருந்தார்; இப்போது தோனி அந்த இடத்தைப் பிடித்துள்ளார்.இப்படி கோடிக்கணக்கில் வரும் வருமானத்தில், வரிச் சலுகை கோரியதே தவறு; அதை அந்தத் துறை அனுமதித்தது இமாலயத் தவறு.ஒரு சாதாரண லைட்பாய் கூட, வருமானவரி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்ட இக்காலத்தில், சச்சினுக்கு வரிச்சலுகை தந்ததை யாராலும் ஜீரணிக்க முடியாது. இதை, அத்துறையும், அரசும் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

உண்ணாவிரதம், அறப்போர் வேண்டும்: த.நெடுஞ்செழியன், செங்கோட்டையிலிருந்து எழுதுகிறார்: மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களுக்கு படகு கவிழ்ந்து, இலங்கை கடற்கரையில் கரை ஒதுங்கி, இலங்கை கடற்படையினரால், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த கருணாநிதி ஆட்சியில், இலங்கை ராணுவத்தினரால், தமிழக மீனவர்கள் துண்டு, துண்டாக வெட்டி கொல்லப்பட்டனர். அன்றைய தமிழக அரசு, இலங்கை ராணுவத்தின் அராஜகப் போக்கை கண்டு கொள்ளாமல் விட்டதால், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த, மீனவ சமுதாய மக்கள் ஓட்டளித்தனர். தற்போது, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை உடனே விடுவிக்க, மத்திய அரசை, தமிழக அரசு வற்புறுத்த வேண்டும். அவர்கள் தாமதித்தால், உண்ணாவிரதம், அறப்போராட்டம் நடத்தி, மத்திய அரசின் தூக்கத்தை கலைக்கவும், தமிழக முதல்வர் தயங்கக் கூடாது. தன் ஆட்சிக் காலத்தில், ஒரு தமிழக மீனவர் கூட கொல்லப்படாமல், முதல்வர் ஜெயலலிதா பார்த்துக் கொண்டால், "பொற்கால ஆட்சி' என, மீனவ சமுதாயம் கொண்டாடும். "எண்ணெய் செலவொழிய, பிள்ளை பிழைத்தபாடில்லை' என்ற பழமொழிக்கேற்ப, இந்திய கடற்படை செயல்படாது உள்ளது. இந்திய கடற்படைக்கு, கோடிக் கணக்கில் மத்திய அரசு செலவழிக்கிறது. ஆனால், இந்திய கடற்படையால், தமிழக மீனவர்களை, சிங்கள கடற்படை சுட்டு வீழ்த்துவதை தடுக்க முடியவில்லை. இலங்கையில், இனப்போர் முடிந்து, இரண்டாண்டுகளுக்கு மேலாகப் போகிறது. விடுதலைப் புலிகளுக்கு, மண்ணெண்ணெய், ஆயுதம் கடத்த உதவுகின்றனர் என்ற பழியை, தமிழக மீனவர்கள் மீது, இலங்கை இனிமேலும் போட முடியாது. விரலில் அடிபட்டு புரையோடினாலும், மொத்த உடம்பையும் பாதிக்கும். தமிழக மீனவர்கள் பாதுகாப்பு விஷயத்தில், மத்திய அரசு அசட்டைத்தனமாக, மெத்தனமாக செயல்படக்கூடாது.

சமச்சீர் பதவித் திட்டம்!கே.சம்பத்குமார், சரவணப்பட்டியிலிருந்து எழுதுகிறார்: சமச்சீர் கல்வித் திட்டத்தைப் போல, குடும்பத்தில் எல்லாருக்கும் பதவி என்ற சமச்சீர் பதவித் திட்டத்தை, வெற்றிகரமாகக் கொண்டு வந்தவர் கருணாநிதி. இந்த அளவுக்கு,வேறு எந்தக் கட்சியாலும் சாதித்துக் காட்ட முடியவில்லை; முடியாது. பொதுவாக, மக்கள் தொண்டு செய்து, மக்களுக்கு அறிமுகமாகி, அதற்குப் பின் பதவிக்கு வருவர். ஆனால், கருணாநிதியோ, முதலில், தன் குடும்ப உறுப்பினர்களை, தன் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, பதவியில் அமர்த்துவார். இதுதான் தயாநிதி மாறனும், கனிமொழியும் அரசியலுக்கு வந்த கதை. சொல்லி வைத்த மாதிரி, இந்த இருவருமே, ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியது, விதியின் விளையாட்டு. விதை ஒன்று போட, சுரை ஒன்று முளைக்குமா? இன்று, சன் "டிவி'யும், கலைஞர் "டிவி'யும் கோலோச்சுவதற்குக் காரணமே, குடும்பத்தினரின் அரசியல் பதவிகளே. கருணாநிதி, முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கக்கூடாது. உண்மைகள் தன்னால் வெளிவரும்.

ஒண்ணும் தெரியாத பாப்பா! கே.குப்புசாமி, குனியமுத்தூரிலிருந்து எழுதுகிறார்: 2004ல், மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக்கிய தயாநிதிமாறனை, கருணாநிதி தான், 2007ல், பதவியில் இருந்து நீக்கினார்; பிறகு, அந்த துறையை ஏன் ராஜாவுக்கு வழங்கினார்? கலாநிதி மாறன் சரணாகதி அடைந்தபோது, "இதயம் இனித்தது; கண்கள் பனித்தன' எனக் கூறி, 2009ல் அதே தயாநிதிமாறனை ஏன் அமைச்சர் ஆக்கினார்? உளவுத் துறையை கையில் வைத்திருந்த கருணாநிதிக்கு, நிரா ராடியா டேப் விவகாரம் தெரியாமல் போனது எப்படி? தயாநிதி மாறன் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது, அவருக்கும், ரத்தன் டாடாவுக்கும் ஏன் உரசல் ஏற்பட்டது? அதன் காரணமாக, 2009ல், தயாநிதிமாறன் மீண்டும் தொலைத்தொடர்பு அமைச்சராக வந்துவிடக் கூடாது என, கருணாநிதி குடும்பத்திடம், ரத்தன் டாடா பேரம் பேசியது ஏன்? இதற்கெல்லாம் என்ன விடை? ஒண்ணும் தெரியாத பாப்பாவாம், போட்டுக்கிட்டா தாப்பாளாம். கருணாநிதி நினைப்பது போல, தமிழக மக்கள் முட்டாள்கள் அல்ல.

வழக்கு போடுவது ஏன்? கே.இளம்செழியன், இருகூர், கோவையிலிருந்து எழுதுகிறார்: அரசியல்வாதிகளின் ஊழல்களை, ஊடகங்கள், குறிப்பாக பத்திரிகைகள் அம்பலப்படுத்தினால், அரசியல்வாதிகள் உடனே, ஏகத்துக்கு எரிச்சல் அடைகின்றனர். அவர்கள் மீது மானநஷ்ட வழக்கு, அவதூறு வழக்கு போடுகின்றனர். பொது வாழ்வில் ஈடுபடுகிறவர்கள், விமர்சனங்களுக்கு தயாராகத்தான் இருக்க வேண்டும். தாங்கள் குற்றமற்றவர்கள் என, அவர்களே சொல்லக்கூடாது. அதை நீதிமன்றங்களும், மக்கள் மன்றங்களும் தான் கூற வேண்டும். நெருப்பில்லாமல் புகையாது. எனவே, ஆத்திரப்பட்டு எதையாவது செய்ய முற்பட்டால், எங்கள் அப்பன் குதிருக்குள் இல்லை என சொல்வது போல ஆகிவிடும். எதையாவது செய்து, எப்படியாவது குறுக்கு வழியில் பதவிக்கு வந்து, சம்பாதிக்க வேண்டும் என்பது தான், இன்றைய ஜனநாயக அரசியலில் எழுதப்படாத விதி. சீதையின் கற்புக்கே, ராமர் அக்னி பரீட்சை வைக்கவில்லையா? அதனால், தாங்கள் தவறு செய்யவில்லை என்பதை, தக்க ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். அதாவது, பத்திரிகைகள் மீது மானநஷ்ட வழக்கு
போடுவதில் அர்த்தம் இல்லை.

நடவடிக்கை எடுக்காவிட்டால்...: வீ.சுந்தர மகாலிங்கம், கேரளாவிலிருந்து எழுதுகிறார்: முன்னாள் அமைச்சர் ராஜாவும், "ஊழல் புகாரில் உண்மை இல்லை; பிரதமர் அனுமதியுடன், விதிப்படி ஒதுக்கீடு செய்யப்பட்டது' எனக் கூறினார். பதவி விலகிய பின், சி.பி.ஐ., விசாரணையில் ஆதாரம் இருந்ததால், கைது செய்யப்பட்டு, சிறையில் விசாரணையில் இருக்கிறார். அது போலவே, காமன்வெல்த் விளையாட்டுக் குழுமத் தலைவராக இருந்த சுரேஷ் கல்மாடியும், "தவறு செய்யவில்லை' எனக் கூறினார். சி.பி.ஐ., ரெய்டு மற்றும் விசாரணையில் ஆதாரம் இருப்பது கண்டு, கைது செய்யப்பட்டு, சிறையில் விசாரணையில் இருக்கிறார். கலைஞர் "டிவி'க்கு, சினியுக் நிறுவனம் தந்த பணம், 200 கோடி கடனாகப் பெற்றது என்றும், அதை, வட்டி, 30 கோடியுடன் திருப்பித் தந்துவிட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் அதில், 20 சதவீதம் பங்கு உள்ள கனிமொழியும் கைது செய்யப்பட்டு, சிறையில், விசாரணையில் இருக்கிறார். இவர்களைப் போல, தயாநிதி மாறனையும் பதவி விலகச் செய்து, சி.பி.ஐ., விசாரணை செய்தால், உண்மை வெளிப்படும். நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும், 2014ல் நடக்க இருக்கும் லோக்சபா தேர்தலில், தமிழகத்தில், தி.மு.க.,வை படுதோல்வியடையச் செய்தது போல், மக்களின் எதிர்ப்பு அலைகளால், இந்தியா முழுவதும், காங்கிரஸ் கூட்டணிக்கு படுதோல்வி ஏற்படும் என்பது நிச்சயம்!





0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.