இறைவனின் திருப்பெயரால்....

Pages

Monday, March 21, 2011

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி

தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் இலவச பஸ் பயணம்? போக்குவரத்து ஊழியர் கடும் அதிர்ச்சி
 



   


"முதியவர்களுக்கு பஸ்சில் பயணிக்க இலவச அனுமதி வழங்கப்படும்' என தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது, போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகம்(எஸ்.இ.டி.சி.,), மாநகர போக்குவரத்து கழகம் (எம்.டி.சி.,), அரசு போக்குவரத்து கழகங்களின் விழுப்புரம், கும்பகோணம், சேலம், மதுரை, கோவை, திருநெல்வேலி கோட்டங்கள் என எட்டு போக்குவரத்து கழகங்கள் இயங்குகின்றன. இப்போக்குவரத்து கழகங்கள் 1,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் சிக்கி தத்தளிக்கின்றன. போக்குவரத்து அமைச்சராக இருந்த நேரு, இதை சட்டசபையில் வெளிப்படையாக தெரிவித்திருந்தார். இந்த நிதி நெருக்கடி காரணமாக போக்குவரத்துக் கழகங்களில் டீசல் வாங்குவதற்கும், பஸ்களுக்கு தேவையான டயர், உதிரிபாகங்கள் வாங்குவதற்கும் முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்புக்கான ஊதியம் மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்க முடியாத சூழல் நிலவுகிறது. ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய சில சலுகைகள் இதுவரை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வி.ஐ.பி.,க்கள் உள்ளிட்ட பலதரப்பட்டவர்களுக்கும் இலவச பாஸ்கள் வழங்கியது தான் போக்குவரத்துக் கழகம் நஷ்டத்தில் மூழ்கியுள்ளதற்கு முக்கிய காரணம் என தெரிகிறது.

இந்நிலையில், முதியவர்கள் பஸ்சில் பயணிக்க இலவச அனுமதி வழங்கப்படும் என தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போக்குவரத்துக் கழக ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கூறியதாவது: கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க., ஆட்சியில் புதிதாக பஸ்கள் விடப்பட்டன. ஆனால் அவற்றை முழுமையாக பராமரிக்கவில்லை. இதனால், பஸ்கள் "மைலேஜ்' கொடுக்காமல் டீசல் குடித்தன. ஆயில் மாற்றாததால் இன்ஜின் உள்ளிட்ட பாகங்களும் அடிக்கடி சேதமடைந்தன. இவற்றை வாங்குவதற்கே அதிக பணம் செலவழிக்கவேண்டிய நிலை போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்பட்டது. இலவசமாக வழங்கப்பட்ட வி.ஐ.பி., பாஸ்களில் பலர் அதிகளவில் பயணம் செய்தனர். அரசு சார்பில் நடத்தப்பட்ட விழாக்களில் கூட்டம் சேர்ப்பதற்காக அடிக்கடி இந்த பஸ்களில் பொதுமக்கள் இலவசமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.இதுபோன்ற காரணங்களால்தான், அரசு போக்குவரத்துக் கழகங்கள் 1,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் சிக்கி தத்தளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தற்போது பழைய பஸ்கள் மட்டுமின்றி புதிதாக வாங்கிய பல பஸ்கள், உதிரி பாகங்கள் இல்லாததால் இயக்கப்படாமல் போக்குவரத்து பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலைமையை சரி செய்வதற்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் எவ்வித முயற்சியும் எடுக்கப்படவில்லை. நிலைமை இப்படி இருக்கும்போது, முதியவர்களுக்கு இலவச பயண செய்ய அனுமதிக்கப்படும் என, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு செய்தால், நஷ்டத்தில் மூழ்கியுள்ள போக்குவரத்துக் கழகத்தை முழுவதுமாக மூடவேண்டிய நிலை ஏற்படும். நஷ்டம் அதிகமானால், போக்குவரத்துக் கழகம் தனியாருக்கும் தாரை வார்க்கப்படும். இதன் மூலம், போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் நிலைமை கேள்விக்குறியாகும்.இவ்வாறு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அதிர்ச்சியுடன் கூறினர்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.