ஜப்பான் "சுனாமி' எதிரொலி: அணுமின் திட்டங்களுக்கு ஆதரவு குறைகிறது
புனே : ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம், சுனாமியால் அங்குள்ள அணு உலைகள் வெடித்து, கதிர்வீச்சு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஜப்பான் மட்டுமில்லாமல், அந்நாட்டை ஒட்டியுள்ள இதர நாடுகளும், கதிர்வீச்சு பயத்தில் சிக்குண்டுள்ளன. அணுமின் உற்பத்தியால் ஏற்பட்டுள்ள இடர்பாட்டை கருத்தில் கொண்டு, பல நாடுகள் தற்போது, மரபுசாரா எரிசக்தி திட்டங்கள் வாயிலாக, மின் உற்பத்தி மேற்கொள்வதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து சர்வதேச நிலையான எரிசக்தி பயிலகத்தின் தலைமை இயக்குனர் ஜி.எம்.பிள்ளை கூறியதாவது:அணுமின் உற்பத்தி குறித்து பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த போதிலும், இந்த மின் உற்பத்திக்கு பல நாடுகள், அதிக முக்கியத்துவம் அளித்து வந்தன. தற்போது, ஜப்பானில் ஏற்பட்டுள்ள அணு உலை வெடிப்பு சம்பவங்களால், உலக நாடுகள் மாற்று வழிகளில் மின் உற்பத்தி செய்வது குறித்து சிந்திக்க தொடங்கியுள்ளன. அனல் மின் உற்பத்தி திட்டங்களும், நிலக்கரி பற்றாக்குறையால், மின் உற்பத்தி இலக்கை எட்ட முடியாமல் உள்ளன. மேலும், நிலக்கரியின் விலை, தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் இருப்பு நிலை எத்தனை காலத்திற்கு வரும் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. அண்மைக்காலத்தில் இதன் விலை, 20 மடங்குக்கு மேல் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவிலுள்ள அணு மின் திட்டங்கள், மிகவும் பாதுகாப்பானது என்று கூறப்படுகிறது. ஆனால், சர்வதேச அளவில் மிகவும் பாதுகாப்பான முறையில் அணுமின் திட்டங்களை செயல்படுத்தி வந்த ஜப்பானின் நிலையே,மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் ஜப்பான் நாடே, அணுமின் திட்டங்களால் அதிக இடர்பாட்டை கண்டுவரும் நிலையில், இத்திட்டம் இந்தியாவில் எந்த அளவிற்கு பாதுகாப்பானது என்பது புலப்படவில்லை.மேற்கண்டவற்றை எல்லாம் வைத்து பார்க்கையில், அனைத்து விதத்திலும் மரபுசாரா வகையில் மேற்கொள்ளப்படும் மின் திட்டங்களே மிகவும் பாதுகாப்பானது என்பதுடன், சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக உள்ளது.கடந்த 10 ஆண்டுகளில், அணுமின் திட்டங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட மின் உற்பத்தி, 5,000 மெகாவாட் என்றளவில் தான் உள்ளது. அதேசமயம், காற்றாலைகள் வாயிலான மின் உற்பத்தியின் பங்களிப்பு 10 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது.இவ்வாறு பிள்ளை கூறினார்.
அணுமின் திட்டங்களுக்கான திட்ட செலவு குறித்து, இதுவரை எந்தவிதமான புள்ளி விவரங்களும் வெளியிடப்பட்டதில்லை. இதற்கான செலவினங்கள் குறித்தும் தெரியாமலேயே உள்ளது.மரபுசாராத வகையில், பல்வேறு வகைகளில் நம்மால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். குறிப்பாக, காற்றாலை திட்டங்கள் வாயிலாக, வரும் 2020ம் ஆண்டிற்குள், 50 ஜிகாவாட் அளவிற்கு மின் உற்பத்தி செய்ய முடியும்.
இதுகுறித்து, "காற்றாலை மின் திட்டங்கள் 2011' என்ற அமைப்பின் ஆலோசகரும், சுஸ்லான் எனர்ஜி நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான துள்சி டாண்டி கூறியதாவது :குறைந்த செலவில், அதிகளவில் மின் உற்பத்தி செய்யும் வகையிலான மரபுசாராத மின் திட்டங்களே நம் நாட்டிற்கு மிகவும்அவசியமாக உள்ளன.இதனால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதுடன், மக்களுக்கும் எவ்வித தீங்கும் ஏற்படுவதில்லை. இதுபோன்ற மின் திட்டங்களால், உலக வெப்பமயமாதலும் தடுக்கப்படுகிறது.சுற்றுச்சூழல் பாதிப்புகளால் இந்தியாவும், சீனாவும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றன. இச்சூழ்நிலையில், மரபுசாரா எரிசக்தி திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு துள்சி டாண்டி கூறினார்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.