skip to main |
skip to sidebar
புதுதில்லி, மார்ச் 5: திமுகவுடனான தொகுதி உடன்பாட்டில் சில சிக்கல்கள் நீடித்தாலும் இன்னும் இரு தினங்களில் அவை அனைத்தும் தீர்க்கப்பட்டு சுமுகமான உடன்பாடு எட்டப்படும் என்று தில்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொகுதி உடன்பாடு பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஞாயிற்றுக்கிழமை சென்னை வர உள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. காங்கிரஸ் கட்சியுடனான உறவை திமுக முறித்துக்கொள்ளாது என தாம் நம்புவதாக மத்திய அமைச்சரும், கட்சியின் தமிழகப் பொறுப்பாளருமான குலாம் நபி ஆசாத் ஜம்முவில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை தெரிவித்துள்ளார். தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் உறவை திமுக முறித்துக்கொள்ளாது என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளை அடையாளம் காணும் பணி இன்னும் முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். கருணாநிதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு வெளியிட்ட அறிக்கையை காங்கிரஸ் கட்சி அவ்வளவாகக் கண்டு கொள்ளவில்லை என்றே தெரிகிறது. தமிழகப் பொறுப்பாளரான குலாம் நபி ஆசாத்தும் கருணாநிதியின் நள்ளிரவு அறிக்கை வெளிவந்த பிறகுதான் ஜம்முவுக்கு சனிக்கிழமை அதிகாலை சென்றதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில் தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற ரிசர்வ் வங்கி விழாவில் பங்கேற்க வந்த மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, தொகுதி உடன்பாடு காண்பதில் சில பிரச்னைகள் இருக்கின்றன என்றும் எனினும் அனைத்துப் பிரச்னைகளும் தீர்க்கப்படும் என்றும் கூறியுள்ளார். கூட்டணிக் கட்சிகளுடனான நட்புறவில் சில நேரங்களில் சில பிரச்னைகள் எழும். பிரச்னைகள் உருவாவதற்கும் நாம்தான் காரணமாக இருப்போம். அதுபோல, சிக்கல்களை தீர்க்கவும் நம்மால் இயலும் என்று பிரணாப் குறிப்பிட்டுள்ளார். அதாவது தொகுதிப் பங்கீடு தொடர்பாக எந்தவிதச் சிக்கல்கள் நீடித்தாலும் அவற்றைத் தீர்த்துவிடலாம் என்கிற விதத்தில்தான் பிரணாப் முகர்ஜியின் கருத்துகள் அமைந்துள்ளன. தி.மு.க. கூட்டணியில் 60 தொகுதிகள் தங்களுக்கு ஒதுக்கப்படுவதை ஏற்றுக்கொண்ட காங்கிரஸ் மேலிடம், அந்தத் தொகுதிகள் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக இருக்க வேண்டும் என அடுத்த கோரிக்கையையும் முன்வைத்துள்ளது. இந்த விவகாரத்தில், திமுகவுக்கு காங்கிரஸ் கட்சியின் நெருக்கடி தொடர்வதால்தான், தொகுதிப் பங்கீடு உடன்பாடு ஏற்படுவதில் இழுபறி நீடிக்கிறது. சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், திமுகவுடனான தனது 7 ஆண்டு கால உறவை அவ்வளவு சுலபமாக முறித்துக்கொண்டு செல்ல காங்கிரஸ் கட்சி தயாராக இல்லை. நட்புறவை எப்படியாவது காப்பாற்றியாக வேண்டும் என்றே காங்கிரஸ் விரும்புகிறது. தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் எத்தகைய பிரச்னைகள் வந்தாலும் அவை அனைத்தும் இரு தினங்களில் தீர்க்கப்பட்டுவிடும் என்றே தில்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.