மதுரை, மார்ச் 5: அதிமுக - தேமுதிக கூட்டணி வரவேற்கத்தக்கது என தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். மதுரையில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியதாவது: திமுக அரசை வீழ்த்த தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் இணைந்து செயல்படவேண்டும் என கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே பாஜக சார்பில் வலியுறுத்தி வந்தோம். இந்நிலையில் தற்போது அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளதாலும், பள்ளித் தேர்வுகள் நடைபெறுவதாலும் தேர்தல் தேதியைத் தள்ளிவைக்க வேண்டும். கேரளத்தில் இதுபோல பல ஆண்டுகளுக்கு முன் திருவிழாக் காலத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதை அங்குள்ள அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் சுட்டிக்காட்டிய நிலையில் தேர்தல் தேதி மாற்றியமைக்கப்பட்டது. ஆகவே, தமிழகத் தேர்தல் தேதியையும் மாற்ற தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும். விலைவாசி உயர்வு, ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆகியவை தேர்தலில் எதிரொலிக்கும். திமுக - காங்கிரஸ் கூட்டணி மீது மக்களிடம் அதிருப்தியே உள்ளது. பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் சிறுபான்மையினர் வாக்கு கிடைக்காது என பல கட்சியினரும் நினைக்கின்றனர். இது சரியல்ல. நாட்டு நலனுக்கு நல்லதும் அல்ல. எனினும் இப்போது பாஜக தனித்து அனைத்துத் தொகுதியிலும் போட்டியிடும். தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு பாஜக சார்பில் போட்டியிடுவோர் நேர்காணல் நடைபெற்று, அந்தப் பட்டியல் வரும் 10-ம் தேதி புது தில்லியில் கட்சியின் உயர்நிலைக் குழுவில் சமர்ப்பிக்கப்படும். அன்றே வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர். இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தவறிவிட்டன. இதுதொடர்பாக பாஜக சார்பில் தலைவர் கட்கரி தலைமையில் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இப்புகாரே வழக்குக்கான மனு போன்றதுதான். தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க மீனவர், பொதுமக்கள் கூட்டுக்குழு அமைக்கப்பட வேண்டும். தொடர்ந்து மீனவர்கள் தாக்கப்பட்டால் பாஜக சார்பில் கடல் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
Sunday, March 6, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.