சென்னை அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை நடைபெற்ற திமுக உயர்நிலை செயல் திட்டக் குழு கூட்டத்தில் முதல்வர் கருணாநிதியுடன் ஆலோசனையில் ஈடுபட்ட துணை முதல்வர்
சென்னை,மார்ச் 5: தமிழக சட்டப் பேரவை பொதுத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் சுமுகமான முடிவு ஏற்படாமல் இழுத்துக் கொண்டே போவதாலும் ஏற்க முடியாத அளவுக்கு நிபந்தனைகளை காங்கிரஸ் விதிப்பதாலும் மத்திய அமைச்சரவையிலிருந்து விலகிக்கொண்டு, பிரச்னைகளின் அடிப்படையில் மட்டும் அரசுக்கு ஆதரவு தருவது என்ற முடிவை திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு எடுத்துள்ளது. சென்னை அறிவாலயத்தில் சனிக்கிழமை மாலை நடந்த கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து திமுக - காங்கிரஸ் இடையிலான 7 ஆண்டு கூட்டணி முறிவுக்கு வரும் நிலை ஏற்பட்டுவிட்டது. 2004 முதல் உறவு: 2004 மக்களவைத் தேர்தலில் இருந்து இரு கட்சிகளும் ஒரே அணியில் இருந்து வருகின்றன. மத்திய ஆட்சியில் திமுக அங்கம் வகிப்பதால் தமிழகத்திலும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் சில ஆண்டுகளாகவே வலியுறுத்தி வந்தனர். ஆட்சியில் பங்கு கிடைக்காது என்று தெரிந்த நிலையில், 2011 தேர்தலின்போது இதுகுறித்து வாக்குறுதியைப் பெற வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் வற்புறுத்தி வந்தனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியும் தமிழகத்தில் காங்கிரஸ் தன் பலத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்று பேசி வந்தார். இளைஞர் காங்கிரஸ் தேர்தல் சமயத்திலும், அதற்குப் பிறகும் தமிழகத்திற்கு வந்தபோதுகூட அவர் கருணாநிதியைச் சந்திக்கவில்லை. தமிழகத்துக்கு வரும் காங்கிரஸ் அமைச்சர்கள் பெரும்பாலும் கருணாநிதியை மரியாதை நிமித்தமாகவேனும் சந்திப்பது வழக்கமாக இருந்த சூழ்நிலையில், ராகுல் காந்தி அவ்வாறு சந்திக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இளைஞர் காங்கிரஸ் வளர்ச்சிக்காக வருவதால், கருணாநிதியைச் சந்திக்க வேண்டிய தேவை எதுவும் எழவில்லை என ராகுல் காந்தி அப்போது கூறினார். ஜனவரியில் தொடங்கிய பேச்சு: சட்டப் பேரவைத் தேர்தலுக்கு திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுகள் ஜனவரி மாதத்திலேயே தொடங்கின. ஜனவரி 30-ம் தேதி முதல்வர்கள் மாநாட்டுக்காக கருணாநிதி தில்லி சென்றார். 31-ம் தேதி சோனியாவுடன் பேசி, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் எண்ணிக்கையை முடிவு செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போதே சோனியாவுடனான சந்திப்பு பல மணி நேரம் தள்ளிப் போனது. சந்திப்பிலும்கூட தொகுதிப் பங்கீடு குறித்து முடிவாகவில்லை. இதற்காக காங்கிரஸில் அமைக்கப்படும் குழுவுடன் பேசி முடிவு செய்யப்படும் என முதல்வர் அப்போது தெரிவித்தார். ஐவர் குழு: அதைத் தொடர்ந்து சென்னையில் காங்கிரஸ் அமைத்த ஐவர் குழுவினருடன் பேச்சு நடந்தது. 90 தொகுதிகள், ஆட்சியில் பங்கு, குறைந்தபட்ச பொது செயல் திட்டம் என்பவை உள்ளிட்ட நிபந்தனைகள் திமுகவுக்கு அதிர்ச்சி தருவதாக இருந்தன. இரு சுற்றுப் பேச்சுகளுக்குப் பிறகு, தில்லி தலைவர்களுடன் பேசிக் கொள்வதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து கட்சியின் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் சென்னை வந்து முதல்வர் கருணாநிதி முன்னிலையில் பேச்சு நடத்தினார். அப்போதும் முடிவு எதுவும் ஏற்படவில்லை. அதேசமயம் அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் கொங்குநாடு முன்னேற்ற கழகத்துக்கு திமுக அணியில் 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. எனவே இந்த அணியில் மீதி 182 தொகுதிகள் மட்டுமே உள்ளன. 60 தொகுதிகள்: இந்த நிலையில் காங்கிரஸ் வற்புறுத்தலால் 60 தொகுதிகள் வரை தருவதாக பேசி முடிவு செய்யப்பட்டுவிட்டது என்று வெள்ளிக்கிழமை செய்திகள் வெளியாயின. எந்தெந்த தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் என்ற பேச்சு நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வெள்ளிக்கிழமை நள்ளிரவு கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், காங்கிரஸ் கட்சி 63 இடங்கள் கேட்பதாகவும், தாங்கள் கேட்கும் தொகுதிகளைத் தர வேண்டும் என கூறுவதாகவும் தெரிவித்திருந்தார். இவ்வாறு கேட்பது நியாயம்தானா என்று யோசிக்க வேண்டும் எனவும் கருணாநிதி கூறியிருந்தார். இதுகுறித்து சனிக்கிழமை திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். இருந்தாலும், பிரச்னைகள் தீர்க்கப்படும் என்று நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரணாப் முகர்ஜி தில்லியில் சனிக்கிழமை காலை கூறினார். இந் நிலையில் சனிக்கிழமை மாலை சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் நடந்த திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: 2011 தேர்தலுக்காக திமுகவும் காங்கிரஸ் கட்சியும் நடத்திய பேச்சில் உடன்பாடு காண முடியவில்லை. 2006-ல் 48 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் இப்போது 60 இடங்கள் கேட்டு, அதற்கு திமுகவும் ஒப்புக்கொண்ட பிறகு தற்போது 63 இடங்கள் வேண்டும் என்று கேட்டுள்ளது. அந்த இடங்களையும் தாங்களே நிர்ணயிப்பார்கள் என்றும் கேட்கிறார்கள். இந்த அணியில் அவர்கள் தொடர விரும்பவில்லை அல்லது நம்மை விரும்பவில்லை என்பதையே இந்த கோரிக்கை தெளிவாகக் காட்டுவதாக திமுக உணர்கிறது. இந்தச் சூழ்நிலையில் மத்திய ஆட்சியில் திமுக தொடர வேண்டுமா என்பதை எண்ணிப் பார்த்து, மத்திய ஆட்சிப் பொறுப்பிலே இடம் பெற விரும்பாமல் திமுக தன்னை விடுவித்துக் கொண்டு, பிரச்னை அடிப்படையில் மட்டும் ஆதரவு அளிக்கலாம் என்று தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. Sunday, March 6, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.