தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தாருங்கள்: வைகோவுக்கு வீரமணி வேண்டுகோள்
Last Updated :
சென்னை, மார்ச் 21: தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வைகோ எடுக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு அவர் திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளார். "தொகுதிப் பங்கீட்டை சாக்காக வைத்து அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து ம.தி.மு.க. வெளியேற்றப்பட்டதால் உங்களுக்கும், உங்களை நம்பி வந்தவர்களுக்கும் ஏற்பட்டுள்ள அவமரியாதை கண்டு எங்கள் மனம் வேதனைப்படுகிறது. தொகுதிகளைக் குறைத்து கொடுத்ததைவிட உங்களை அவமானப்படுத்தி இரவெல்லாம் பேசி முடிவெடுக்க வைத்ததை உணர்ந்த எங்களைப் போன்றவர்களுக்கு வியப்போ, ஆச்சரியமோ ஏற்படவில்லை. இதுபோல நடைபெறும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், அப்படி நடக்க வேண்டும் என்று விரும்பியதில்லை. வெளியிலிருந்து முதலாளித்துவ சக்திகள் தங்களை வெளியேற்ற எந்த அளவுக்கு முயற்சி எடுத்தார்கள் என்கிற செய்திதான் அதிர்ச்சியாக உள்ளது. ம.தி.மு.க. போட்டியிட்ட திருமங்கலம் தொகுதியை அ.தி.மு.க.வுக்கு விட்டுக் கொடுத்தீர்கள். இடைத் தேர்தல் புறக்கணிப்பு, சட்டப் பேரவையில் வெளிநடப்பு என்று அ.தி.மு.க.வோடு இணைந்து செயல்பட்டீர்கள். அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உங்களுக்கு இழைக்கப்பட்ட "பொடா' கொடுமையை அரசியல் காரணமாக நீங்கள் மறந்திருக்கலாம். ஆனால், இன உணர்வுள்ள நாங்கள் என்றும் மறந்ததில்லை. சகோதர பாசம் என்பது தேவை வரும்போது பீறிட்டுக் கிளம்பும் என்பது இயல்பானதே. அரசியலில் இன்னொரு தேர்தல் வரும்வரை சும்மா இருப்போம் என்ற நிலைப்பாடு சரியானதுதானா என்பதை சற்று நிதானமாக யோசியுங்கள். ம.தி.மு.க.வின் எதிர்காலத்தைப் பற்றி உணர்ச்சி வயப்படாமல் யோசியுங்கள். அரசியல் கட்சி நடத்துவோர் ஜனநாயகத்தில் வாக்களிக்காமல் புறக்கணிப்பது நல்லதா? சுயமரியாதையோடு தீர்மானம் நிறைவேற்றியுள்ளீர்கள் என்றாலும் தங்களது அரசியல் பாதையை தீர்மானியுங்கள். தி.மு.க.வோடு ஒன்றாக இணைந்துவிட வேண்டும் என்று கூட சொல்ல மாட்டேன். தனித்தனி அரசியல் கட்சிகளானாலும் தாய்க் கழகமான தி.மு.க.வின் கொள்கைகளும், லட்சியங்களும், ம.தி.மு.க.வின் லட்சியங்களும் ஒன்றுதான். ஆயிரம் கோபதாபங்கள் நமக்குள் இருப்பினும் நீரடித்து நீர் விலகாது என்ற பழமொழிக்கேற்ப நாம் அனைவரும் ஓர் அணியில் நிற்க வேண்டும். எனவே, தி.மு.க. கூட்டணியை ஆதரிக்கும் நிலைப்பாட்டினை எடுங்கள். நிதானமாக யோசியுங்கள். தோழர்களுடன் கலந்து துணிந்து முடிவெடுங்கள். ஆட்சிக்கு வரும் முன்னரே இப்படி அலட்சியப்படுத்தும் ஜெயலலிதா, தப்பித்தவறி ஆட்சிக்கு வந்தால் எப்படி விஸ்வரூபம் எடுத்து அழிக்க முற்படக்கூடும் என்பதையும் எண்ணிப்பாருங்கள். எந்த உள்நோக்கமோ, அரசியல் லாபங்களோ இல்லாமல் விடுக்கப்படும் வேண்டுகோள் இது. தங்களது மனப் புண்ணுக்கு மருந்து என்று கருதியே இந்த யோசனை. நாம் தொலைநோக்குப் பார்வையோடு சிந்திக்க கடமைப்பட்டவர்கள் என்பதால்தான் இந்த வேண்டுகோள்' என்று கி. வீரமணி கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.