ம.தி.மு.க.வில் பிளவு ஏற்படுத்த முயற்சி?
சென்னை, மார்ச் 21: சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ள நிலையில், அக் கட்சியில் பிளவு உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது.அ.தி.மு.க. அணியில் தங்களுக்குக் கெüரவமான எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கப்படாத நிலையில், கட்சியின் உயர்நிலைக் குழு, மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கட்சி அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் வைகோ தலைமையில் சென்னையில் கட்சியின் தலைமையகத்தில் கடந்த சனிக்கிழமை நடந்தது.சுயமரியாதையை விட்டுக்கொடுத்து தேர்தல் கூட்டணியில் பங்கேற்க விரும்பவில்லை என்று கூறி இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் மட்டும் ம.தி.மு.க. பங்கேற்பதில்லை என முடிவு செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த முடிவு குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வருத்தம் தெரிவித்துள்ளார்.முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு இடதுசாரிக் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதற்கிடையில் வைகோ சொந்த ஊரான கலிங்கப்பட்டிக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை சென்றுவிட்டார்.தி.மு.க.வுக்கு வைகோ ஆதரவு தர வேண்டும் என திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீரமணி திங்கள்கிழமை அறிக்கை விடுத்தார்.ம.தி.மு.க. மீண்டும் தேர்தலில் போட்டியிட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதியும்கூட ஒன்றுபட்டு உழைப்போம் என மறைமுகமாக வைகோவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.ம.தி.மு.க. தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்றும், பா.ஜ.க. அணிக்கு வந்தால் வரவேற்போம் என்றும் மாநில பா.ஜ.க. தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 2006-ல் தி.மு.க. அணியில் இருந்து அ.தி.மு.க. அணிக்கு வைகோ சென்றதால்தான், தி.மு.க.வுக்கு அந்தத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பலம் கிடைக்காமல் போனது என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.இப்போது அதேபோல அ.தி.மு.க.வுக்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்த தி.மு.க. தரப்பில் சிலர் முயற்சிப்பதாகச் சொல்லப்படுகிறது.இதற்கிடையில், தங்கள் முடிவில் இம்மியளவும் மாற்றம் இல்லை என்று கலிங்கப்பட்டியில் திங்கள்கிழமை காலை வைகோ கூறினார்.இதற்கு ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்பதற்காகத்தான் அரசியலில் இருக்கிறோம் என்ற நிலையில், தேர்தலைப் புறக்கணிப்பது சரியான முடிவாக இருக்காது என்று அவர்கள் கூறுகின்றனர்.தேர்தலில் போட்டியிடுவது இல்லை என்று தொடங்கப்பட்ட அமைப்புகள் பின்னாளில் கட்சியாக மாறி, தேர்தலில் நின்று சட்டப் பேரவை, நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்களை அனுப்பும் நிலையில், ஏற்கெனவே தேர்தலைச் சந்தித்து வந்த ம.தி.மு.க., இப்போது ஒதுங்கி நிற்பது சரியாக இருக்காது என்று அவர்கள் கூறுகிறார்கள்.""ஊரெல்லாம் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும்போது, தேர்தல் பிரசாரத்தில் எல்லா அரசியல் கட்சிகளும் முனைப்புடன் ஈடுபட்டிருக்கும்போது நாங்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க முடியுமா? எங்களால் தி.மு.க.வுக்கோ, அ.தி.மு.க.வுக்கோ, தே.மு.தி.க.வுக்கோ போக முடியாத சூழ்நிலை. நாங்கள் ஏதாவது ஓர் அணியைச் சார்ந்து தேர்தல் பணியில் ஈடுபடா விட்டால் எங்கள் எதிர்காலம் அஸ்தமனமாகிவிடும்'' என்று ஆரம்ப காலத்திலிருந்து ம.தி.மு.க.வில் இருக்கும் தொண்டர்கள் கூறுகிறார்கள். ம.தி.மு.க. தனித்துப் போட்டியிட்டால் தி.மு.க. அணிக்கு அது சாதகமாக அமையலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனித்து நின்று, ஏதாவது ஓர் அணியின் வெற்றிக்குக் காரணமாக அமைந்துவிட்டோம் என்ற அவப்பெயர் வந்துவிடக் கூடாது என்பதாலும், தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுப்பதாக ம.தி.மு.க. தீர்மானம் கூறுகிறது.இருந்தாலும் ம.தி.மு.க.வை பிளவுபடுத்தி எப்படியும் தேர்தலில் நிற்க வைக்க வேண்டும் என்பதற்காக சில சக்திகள் முயற்சிப்பதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.அக் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் தனியாக ஒரு கூட்டம் நடத்தி, வைகோவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி, தங்களை உண்மையான ம.தி.மு.க. என்று அறிவித்துக் கொள்ளக்கூடும் என்றும் தெரிகிறது. இதற்கான வேலைகளைச் சிலர் தொடங்கிவிட்டதாகவும், ம.தி.மு.க. முக்கியஸ்தர்களை அவர்கள் தொடர்பு கொள்வதாகவும் தெரிகிறது. அதைத் தொடர்ந்து தங்களது ஆதரவு யாருக்கு என்பதையும் அந்தக் கூட்டத்தில் அறிவிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.இந்தத் தேர்தலைப் புறக்கணித்துவிட்டால் 2014 மக்களவைத் தேர்தல் வரையில்கூட தொண்டர்களைக் காப்பாற்றி வைக்க முடியாது என்பதால் இப்படியொரு முயற்சி செய்கிறோம் என சில மாவட்ட நிர்வாகிகள் கூறுகின்றனர்.இன்னும் இரண்டு, மூன்று நாள்களில் இதற்கான கூட்டம் நடக்கும் என்று தெரிகிறது.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.