திருவாரூரில் பிரமாண்ட பொதுக்கூட்டம் கருணாநிதி நாளை முதல் பிரசாரம்
திருவாரூர் : முதல்வர் கருணாநிதி நாளை திருவாரூர் தொகுதியில் இருந்து பிரசாரத்தை தொடங்குகிறார். அங்கு நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசும் அவர், அடுத்த நாள் அந்த தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்கிறார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் பட்டியல் போன்றவற்றை முக்கிய கட்சிகள் இறுதி செய்து வருகின்றன. வேட்புமனு தாக்கல் கடந்த 19ம் தேதி தொடங்கியது. 26ம் தேதி முடிகிறது. அடுத்த சில நாளில் முன்னணி கட்சிகளின் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.இதைத் தொடர்ந்து, பிரசாரத்தை தலைவர்கள் ஆரம்பிக்க உள்ளனர். முதல்வர் கருணாநிதி, திருவாரூரில் பிரசாரத்தை நாளை தொடங்குகிறார். சென்னையிலிருந்து கார் மூலம் முதல்வர் கருணாநிதி, நாளை மதியம் 1 மணிக்கு திருவாரூர் மாவட்ட எல்லையான திருவாரூர்& மயிலாடுதுறை சாலையில் உள்ள குமாரமங்கலத்திற்கு வருகிறார். அங்கு திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கின்றனர்.
பின்பு திருவாரூர் விளமல் கல்லுப்பாலம் அருகேயுள்ள பயணியர் மாளிகையில் தங்குகிறார். மாலையில் திருவாரூரில் நடைபெறும் தேர்தல் பிரசார துவக்க பொதுக் கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார். மறுநாள் (24ம் தேதி) திருவாரூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்கிறார். பின்னர், கொரடாச்சேரி, நீடாமங்கலம் வழியாக தஞ்சை சென்று அங்கு நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
திருவாரூரில் நாளை நடக்கும் வேட்பாளர் அறிமுக கூட்டம், தேர்தல் பிரசார துவக்க பொதுக் கூட்டத்திற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களான தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், எம்ஜிஆர் கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், திராவிடர் கழக தலைவர் வீரமணி, கொங்குநாடு முன்னேற்ற கழக தலைவர் பெஸ்ட் ராமசாமி, மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, தேசிய லீக் கட்சி தலைவர் பஷீர் அகமது, கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் பொன்.குமார், அருந்ததியர் மக்கள் கட்சி தலைவர் வலசை ரவிச்சந்திரன் மற்றும் நடிகர் வடிவேலு ஆகியோர் பேசுகின்றனர்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.