தமிழக காங்கிரஸ் பட்டியலை நிராகரித்தார் சோனியா
சென்னை, மார்ச் 21: தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் பரிந்துரைக்கப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை கட்சித் தலைவர் சோனியா காந்தி நிராகரித்துவிட்டார்; இதனால் தமிழக காங்கிரஸ் வட்டாரங்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன என்று தெரிகிறது. இரண்டு முறைக்கு மேல் எம்.எல்.ஏ.க்களாக இருந்தவர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு இல்லை என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தொகுதிகளில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து மார்ச் 16, 17 தேதிகளில் விருப்ப மனுக்கள் பெறபட்டன. 63 தொகுதிகளிலும் போட்டியிட 2 ஆயிரத்து 160 பேர் விருப்ப மனு அளித்திருந்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு தலைமையிலான 20 பேர் கொண்ட மாநில தேர்தல் குழு மார்ச் 17-ம் தேதி விருப்ப மனுக்களை ஆய்வு செய்து ஒவ்வொரு தொகுதிக்கும் 3 முதல் 5 பேர் கொண்ட பரிந்துரைப் பட்டியலை இறுதி செய்தது. காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுவில் இடம் பெற்றுள்ள வயலார் ரவி, ஆஸ்கர் பெர்னாண்டஸ், குலாம் நபி ஆசாத் ஆகியோரிடம் பரிந்துரைப் பட்டியலை வழங்கினார் தங்கபாலு . திங்கள்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணி வரை வயலார் ரவி, ஆஸ்கர் பெர்னாண்டஸ், குலாம் நபி ஆசாத், தங்கபாலு ஆகியோர் பரிந்துரைப் பட்டியலை ஆய்வுசெய்து வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ததாகக் கூறப்படுகிறது. லண்டனில் இருந்து தில்லி திரும்பிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் இந்தப் பட்டியலை அவர்கள் திங்கள்கிழமை இரவு வழங்கியதாகவும், அதனை நிராகரித்த அவர், இரண்டு முறைக்கு மேல் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.க்களாக இருந்தவர்களுக்கு வாய்ப்பு இல்லை என்றும் புதியவர்களுக்குதான் வாய்ப்பு என்று கூறியதாகவும் தெரிகிறது. புதிய பட்டியல் தயாரித்துக் கொண்டுவருமாறு சோனியா கேட்டுக் கொண்டதாகவும், செவ்வாய்க்கிழமை காலை புதிய பட்டியலுடன் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சோனியாவைச் சந்திப்பர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சோனியாவின் நிபந்தனையின்படி பார்த்தால், இப்போது எம்.எல்.ஏ.க்களாக இருக்கும் டி. யசோதா (ஸ்ரீபெரும்புதூர்), பீட்டர் அல்போன்ஸ் (கடையநல்லூர்), ஞானசேகரன் (வேலூர்), டி. அமரமூர்த்தி (அரியலூர்), கோபிநாத் (ஓசூர்), எஸ். சிவராஜ் (ரிஷிவந்தியம்), கோவை தங்கம் (வால்பாறை), ஜெயக்குமார் (நாமக்கல்), ஆர். ராம்பிரபு (பரமக்குடி), கே.ஆர். ராமசாமி (திருவாடனை), சுந்தரம் (காரைக்குடி), வேல்துரை (சேரன்மாதேவி), டாக்டர் இ.எஸ்.எஸ். ராமன் (பள்ளிப்பட்டு), என்.ஆர். ரங்கராஜன் (பட்டுக்கோட்டை) ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இவர்களில் நாமக்கல் ஜெயக்குமார், திமுகவுடனான பேச்சுவார்த்தைக் குழுவில் இடம் பெற்றுள்ளார். வாய்ப்பு பறிபோகும் என்ற தகவலால் இவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக அவர்களது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இதுதவிர இரண்டு முறைக்கு மேல் எம்.பி., எம்.எல்.ஏ.க்களாக இருந்த எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், பி.வி. ராஜேந்திரன், குமாரதாஸ், டாக்டர் செல்லக்குமார், ராம்பிரபு உள்ளிட்டோரும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது, இவர்களில் பெரும்பாலானவர்கள் ஜி.கே. வாசனின் ஆதரவாளர்கள். சோனியா காந்தியின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தில்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு காங்கிரஸôர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட திóட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.