இறைவனின் திருப்பெயரால்....

Pages

Sunday, March 6, 2011

அமைச்சரவையில் இருந்து விலகும் முடிவு ஏன்? திமுக விளக்கம்



சென்னை, மார்ச் 5: தொகுதிப் பங்கீடு தொடர்பான காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் திமுகவை கூட்டணியில் இருந்து அகன்றுவிடச் செய்வதற்கான காரியமாக இருப்பதாக திமுக தெரிவித்துள்ளது.  மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக விலகுவதற்கான தீர்மானத்தை விளக்கி, திமுக உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் முதல்வரும், கட்சித் தலைவருமான கருணாநிதி வெளியிட்ட அறிக்கை:  "கடந்த ஏழு ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியுடனும், மற்ற தோழமைக் கட்சிகளுடனும் நல்லுறவு கொண்டு நாடாளுமன்றம், சட்டப் பேரவை ஆகியவற்றில் நற்பணியாற்றி வருகிறது. ஜனநாயக ரீதியில் நடைபெறும் தேர்தல்களிலும் அணி சேர்ந்து போட்டியிடும் கட்சிகளில் ஒன்றாக திமுக இயங்கி வருகிறது.  அந்த வகையில், வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் புதுவிதமான சில பிரச்னைகள் உருவாக்கப்பட காங்கிரஸ் கட்சி காரணமாகியது என்பதே திமுகவை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.  காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் வழிகாட்டியுமான சோனியா காந்தியை ஒவ்வொரு தேர்தலின்போதும் நான் சந்தித்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதைப் போன்று இந்தச் சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டும் என் உடல் நிலையைக் கூடப் பொருட்படுத்தாமல் தில்லிக்கே சென்றேன்.  அங்கு இரண்டு நாள் தங்கியிருந்து சந்தித்து உரையாடியபோது அவர்கள் விரும்பியவாறு முதலில் திமுக-காங்கிரஸ் பேச்சுவார்த்தையை நடத்த தீர்மானித்தது.  காங்கிரஸ் கட்சியின் சார்பில் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த வருவதற்குக் காலதாமதம் ஆகிய நிலையில் திமுக, பாமக மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கியது.  மற்ற கட்சிகளுடன் கலந்து பேசி அதுவரையில் இறுதி முடிவாக எத்தனை தொகுதிகள் - எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது பற்றி தீர்மானிக்காமல் இருந்து அதன்பிறகே, சென்னையில் கடந்த மாதம் 20-ம் தேதி காங்கிரஸ் கட்சியின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.  காங்கிரஸ் கட்சிக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் எந்தவிதமான முடிவும் எய்தாத நிலையில் இறுதி முடிவெடுக்க காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் சென்னை வந்து பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார். அவர் முன்னிலையிலே நான் இருந்து நடத்திய பேச்சுவார்த்தையின் போது 57 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்வதென ஒப்புதல் கொடுத்தோம். அதுபற்றி தில்லி சென்று மேலிடத்தைக் கலந்து கொண்டு உடனடியாக அறிவிப்பதாக குலாம் நபி ஆசாத் கூறி விட்டுச் சென்றார்.  பின்னர் தில்லியில் இருந்து பேசிய குலாம் நபி ஆசாத் 60 தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்குத் தேவை என்றும், அப்போதுதான் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என்றும் அறிவித்தார்.  இதைத் தொடர்ந்து, திமுக சார்பில் 60 தொகுதிகள் அளிக்கவும் ஒப்புக் கொண்டு, சென்னைக்கு வந்து கையெழுத்திட்டு ஒப்பந்தத்தை நிறைவு செய்யலாம் என்று கேட்டுக் கொண்டேன். ஒப்பந்தத்தில் கையெழுத்திட வருவார்கள் என எண்ணியிருந்த நிலையில், அங்கேயிருந்து தொலைபேசியில் 60 இடங்கள் போதாது, 63 இடங்கள் ஒதுக்க வேண்டும் என்றும், அந்தத் தொகுதிகளும் அவர்களால்தான் நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறினர்.  மேலும், எத்தனை இடங்கள் என்று ஒப்பந்தம் செய்யும்போதே, எந்தெந்த தொகுதிகள் என்பதும் குறிப்பிட வேண்டுமென்றும் நிபந்தனைகள் கூறப்பட்டது.  சட்டப் பேரவைத் தேர்தல் ஆனாலும், நாடாளுமன்றத் தேர்தல் ஆனாலும் இதுவரையில் நடைபெற்ற எந்தவொரு தொகுதி பங்கீட்டுப் பேச்சுவார்த்தையிலும் இப்படியொரு நிலையை நானோ, திமுக தலைமையோ சந்தித்தது இல்லை.  இதைக் காணும்போது முதலில் கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட 48 தொகுதிகளில் தொடங்கி இப்போது 63 தொகுதிகள் என்பதும், தொகுதிகளை அவர்களே நிச்சயிப்பார்கள் என்பதும் அதிர்ச்சி தரக் கூடியவைகளாக இருக்கின்றன.  இரு கட்சியின் தொண்டர்கள்: இதை நானோ கட்சியின் மூத்த தலைவர்களோ முடிவெடுத்து அறிவிப்பதாக இருத்தல் ஆகாதென கருதி, கட்சியின் உயர் நிலை செயல் திட்டக் குழுவில் விவாதித்து முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டது. ú  தர்தல் உடன்பாட்டுக்காக தொடக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட முயற்சிகளையும், உருவாக்கப்பட்ட பிரச்னைகளையும் எண்ணிப் பார்க்கும்போது, இரு கட்சிகளின் முன்னணி செயல் வீரர்களும், தொண்டர்களும் மன வேறுபாடு இன்றி நேச மனப் பான்மையோடு பணியாற்றும் நிலைக்கு, குந்தகம் ஏற்படுத்தி தேர்தல் முடிவைப் பாதிப்பதற்கு இது போன்ற பிரச்னைகள், செயல்பாடுகள், இழுத்தடிப்புகள் காரணமாகி விடக் கூடாது.  மேலும், காங்கிரஸ் கட்சியின் இந்தப் போக்கு தேர்தல் உடன்பாட்டை சுமுகமாகச் செய்து கொள்ள வேண்டுமென்பதற்குப் பதிலாக இதையே சாக்காக வைத்து திமுகவை அணியில் இருந்தே அகன்று விடச் செய்வதற்கான காரியமோ என சந்தேகப்பட வேண்டியுள்ளது.  எனவே, மத்திய அமைச்சரவையில் இருந்து விலகுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது' என கருணாநிதி கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.