பா.ஜ., புகாருக்கு பிரதமர் பதிலடி: விக்கிலீக்ஸ் விவகாரம் அனல்
புதுடில்லி: "ஓட்டுக்கு நோட்டு விவகாரம் தொடர்பாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவலுக்கு, பிரதமர் அளித்த விளக்கம் சரியாக இல்லை. உண்மையை மறைக்கிறார்; அடுத்தவர் மீது குறை கூறுவதையே மன்மோகன் சிங் வாடிக்கையாக கொண்டுள்ளார்' என்று, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் கடுமையாக சாடினார். அதற்கு பதிலடியாக, "இதில் உண்மை ஏதும் இல்லை' என்றார்.
கடந்த 2008ம் ஆண்டு பார்லிமென்டில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, எம்.பி.,க்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவரத்தை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டது. இது குறித்து பிரதமர் அளித்த விளக்கத்தில் எதிர்க்கட்சிகள் திருப்தியடையவில்லை. நேற்று லோக்சபா கூடியதும், பிரதமர் மீதான உரிமை மீறல் விவாதத்திற்கு சபாநாயகர் மீரா குமார் அனுமதியளித்தார். இதையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் குருதாஸ் தாஸ் குப்தா, இந்த பிரச்னை தொடர்பான விவாதத்தை துவக்கி வைத்தார். அப்போது, அவர் குறிப்பிடுகையில், "ஓட்டுக்கு நோட்டு விவகாரம் தொடர்பாக பார்லிமென்ட் குழு பொருத்தமான ஏஜன்சியை கொண்டு இது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. இன்னும் விசாரணை கமிஷன் அமைக்காதது ஏன். இந்த விவகாரத்தில், சில உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளனர். இந்த வழக்கு பார்லிமென்ட்ரி திருட்டு சம்பந்தப்பட்டது. இதில், அரசியல் கொள்ளைக் கூட்டம் ஒன்று செயல்பட்டுள்ளது' என்று குறிப்பிட்டார். இதனால், வாக்குவாதம் எழுந்தது.
பின், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் பேசிய போது, பிரதமருக்கு எதிராக அவர் கடுமையாக குற்றச்சாட்டுகளை கூறினார். அவர் கூறியதாவது: ஓட்டளிக்க எம்.பி.,க்களுக்கு பணம் கொடுத்ததன் மூலம், இவ்விஷயத்தில் பெரும் ஆதாயத்தைப் பெற்றது, அப்போதைய அரசின் தலைவராக இருந்த பிரதமர் தான். ஆனால், இவ்விஷயத்தில் கைகழுவும் போக்கில் பிரதமர், "தனக்கு எதுவும் தெரியாது' என்று பேசுவது ஆச்சரியமளிப்பதாக உள்ளது. விலைவாசி உயர்ந்தால், சரத்பவார் பொறுப்பு; ஸ்பெக்ட்ரம் ஊழல் என்றால் ராஜா பொறுப்பு; காமன்வெல்த் ஊழல் என்றால் கல்மாடி பொறுப்பு என அடுத்தவர் மீதே குற்றம் சாட்டுவது பிரதமரின் வழக்கமாக உள்ளது. தவறு நடந்துவிட்டால், அரசின் தலைவர் என்ற முறையில் பிரதமரே பொறுப்பு ஏற்க வேண்டும். இவ்வாறு சுஷ்மா ஆவேசமாக கூறினார். அவர் பேசும்போது, சபையில் பிரதமர் மன்மோகன் சிங் அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்தார். சுஷ்மா பேசிக் கொண்டு இருந்த போது, காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவித்து, கூச்சல் போட்டபடி இருந்தனர்.
ராஜ்யசபா: ராஜ்யசபாவிலும் இந்த பிரச்னை குறித்து எதிர்க்கட்சிகள் பிரச்னையை கிளப்பின. இதன் மீதான விவாதத்தின் போது, எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி பேசுகையில், "விக்கிலீக்ஸ் தகவல்கள் சட்டப்பூர்வமாக நம்பகத் தன்மை வாய்ந்தவை. ஆனால், இது குறித்து பிரதமர் எழுப்பியிருக்கும் சந்தேகம், இந்த விவகாரத்தை அரசு திசை திருப்புவதையே காட்டுகிறது' என்றார். பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், "இவ்விஷயம் தொடர்பாக டில்லி போலீசார் நடத்தும் விசாரணை முடிவு இதன் உண்மைகளை வெளிப்படுத்தும்' என்றார். பின்பு, உரிமை மீறல் பிரச்னைக்கு பதிலளித்த பிரதமர் மன்மோகன், "ஏதோ அத்வானிக்கு பிரதமர் பதவி பிறப்புரிமை போல நினைத்து குற்றம் சாட்டுகிறார். ஓட்டு வாங்க பணம் தரப்பட்டது என்ற குற்றச்சாட்டு அர்த்தமற்றது. அதற்கு போதுமான ஆதாரமில்லை. மக்கள் ஆதரவில் அமைந்த இந்த அரசை அகற்ற இன்னும் மூன்றரை ஆண்டுகள் எதிர்க்கட்சிகள் காத்திருக்க வேண்டும்' என்று பதிலடியாக பதிலளித்தார்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.