தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் திடீர் தடை
வக்கீல்கள் தியாகராஜன், ஸ்ரீனிவாசன்: சோதனை என்ற பெயரில் தமிழகத்தில் தொடர்ந்து பொதுமக்களிடம் இருந்து பணத்தை தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. வியாபாரிகளால் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் கமிஷன் வக்கீல் ராஜகோபால்: ரூ.1 லட்சத்துக்கும் கூடுதலாக எடுத்துச் செல்லும் பணத்தைதான் பறிமுதல் செய்கிறோம். நிறைய இடங்களில் ரூ.10 லட்சத்துக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புகார் அடிப்படையில்தான் பறிமுதல் செய்கிறோம். பணத்தை பறிமுதல் செய்ய சட்டப்படி தேர்தல் கமிஷனுக்கு முழு அதிகாரம் உள்ளது.
அமைச்சர் கே.பி.பி.சாமி வக்கீல் ஆர்.விடுதலை: எதிர்க்கட்சியினர் கொடுத்த புகார் அடிப்படையில் எந்த ஆதாரமும் இன்றி ஒரு அமைச்சர் வீட்டிலேயே சோதனை நடத்தியுள்ளனர். இது அடிப்படை உரிமையை பறிப்பதாக உள்ளது. தேர்தல் கமிஷன் வரம்பு மீறி செயல்படுகிறது. நியாயமாகவும் நேர்மையாகவும் தேர்தலை நடத்துவதாக கூறிக்கொண்டு அதிகார துஷ்பிரயோகம் செய்கிறார்கள். அமைச்சர் வீட்டில் நடந்த சோதனையில் எதையும் கைப்பற்றவில்லை. அரசு அதிகாரிகளையும் இஷ்டத்துக்கு இடமாற்றம் செய்கின்றனர். குறிப்பிட்ட வேட்பாளர்களை குறிவைத்து நடவடிக்கை எடுக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் உள்நோக்கத்துடன் கொடுக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள்.
வக்கீல் ராஜகோபால்: இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன்: தேர்தல் கமிஷனுக்கு எதிராக நிறைய புகார்கள் வந்துள்ளன. திருமணத்துக்கு நகை வாங்க செல்பவர்களிடம் இருந்தும் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் கமிஷனுக்கு தலைமைச் செயலர் கடிதம் எழுதியுள்ளார். பணத்தை பறிமுதல் செய்யும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள், வருமானவரித்துறை விசாரணைக்கு பிறகு பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்கின்றனர். வக்கீல் ராஜகோபால்: தலைமைச் செயலரின் கடிதம் கிடைத்தவுடன் நாங்களே புதிய விதிமுறை வகுத்துள்ளோம். சந்தேகம் ஏற்படும் நபர்களிடம் இருந்து மட்டும் பணத்தை பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளோம். சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி பணத்தை பறிமுதல் செய்ய முழு அதிகாரம் உள்ளது.
நீதிபதிகள்: தேர்தல் கமிஷன் செயல்பாடுகள் எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. இஷ்டப்படி நீங்கள் சோதனை நடத்துவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைக்குகூட பணம் கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. ரியல் எஸ்டேட் வியாபாரிகள் பத்திரப்பதிவுக்காக பணம் எடுத்துச் செல்வதை எவ்வாறு தடுக்கலாம். (பத்திரிகைகளில் வெளிவந்த முதல்வர் கருணாநிதியின் கடிதத்தை நீதிபதிகள் படித்துக் காட்டினர்).
இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை வரும் 28ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அன்று தேர்தல் கமிஷன் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், முதல்வரின் கடிதத்தை தாமாக முன்வந்து வழக்காக எடுத்துக் கொள்வதாக அறிவித்தனர். இந்தக் கடிதத்துக்கும் பதில் அளிக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டனர். வரும் 28&ம் தேதி வரை சந்தேகத்தின் அடிப்படையில் பொதுமக்களிடம் சோதனை நடத்தக்கூடாது என்றும் நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் சோதனை நடத்தலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பெரியார் சிலை மூட எதிர்ப்பு
இந்த வழக்கு விசாரணை முடிந்தவுடன் வக்கீல் வீரசேகரன் ஆஜராகி, ‘தமிழகம் முழுவதும் பல இடங்களில் பெரியார் சிலைக்கு துணி போட்டு மூடப்பட்டுள்ளது. இதை உடனே அகற்ற வேண்டும் என திராவிடர் கழக பொதுச்செயலாளர் கனியன் பூங்குன்றனார் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும். துணியை அகற்ற உத்தரவிட வேண்டும்’ என்றார். இதைக் கேட்ட நீதிபதிகள், இன்றே இந்த வழக்கை விசாரிப்பதாக தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.