இறைவனின் திருப்பெயரால்....

Pages

Tuesday, March 22, 2011

ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி

ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி



சென்னை, மார்ச் 21: அடுத்த மாதம் நடக்கவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்களின் பெயர்கள் அடங்கிய புதிய (திருத்திய) பட்டியலை அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா திங்கள்கிழமை அறிவித்தார். 160 வேட்பாளர்களின் பெயர்களை அவர் அறிவித்துள்ளார்.  புதுவைக்கு 30: புதுவை யூனியன் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளுக்கும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பின்னர் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் வாபஸ் பெறுவர் என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.  தமிழகத்துக்கான பட்டியலில் ஜெயலலிதா உள்பட 12 பெண்கள் உள்ளனர். 4 டாக்டர்களும் இடம் பெற்றுள்ளனர்.  கடந்த புதன்கிழமை வெளியான வேட்பாளர் பட்டியலில் இருந்து சில தொகுதிகளும், வேட்பாளர்களின் பெயர்களும் இதில் மாறியுள்ளன.  கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த இருமுறை அவர் ஆண்டிப்பட்டி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். 2001- செப்டம்பரில் ஜெயலலிதாவுக்காக தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்த தங்கதமிழ்ச்செல்வன் இந்த முறை அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  முதல்வர் கருணாநிதி போட்டியிடும் திருவாரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக குடவாசல் ராஜேந்திரன் போட்டியிடுகிறார். முந்தைய பட்டியலிலும் இவர் பெயர்தான் இடம் பெற்றிருந்தது.  துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் சைதை துரைசாமி அதிமுக சார்பில் களத்தில் நிறுத்தப்படுகிறார்.  நிதியமைச்சர் க. அன்பழகன் போட்டியிடும் வில்லிவாக்கம் தொகுதியில் அதிமுக சார்பில் ஜே.சி.டி. பிரபாகர் போட்டியிடுகிறார்.  வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் போட்டியிடும் சேலம் மாவட்டம் சங்ககிரியில் அவருடைய அண்ணன் மகள் விஜயலட்சுமி பழனிச்சாமி போட்டியிடுகிறார். இவர் அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்துள்ளார்.  வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜா போட்டியிடும் வீரபாண்டி தொகுதியில் களம் இறங்கும் எஸ்.கே. செல்வம், வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகன் ஆவார்.  விழுப்புரத்தில் அமைச்சர் பொன்முடியை எதிர்த்து முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் நிறுத்தப்படுகிறார்.  அதிமுக பொருளாளரும் முன்னாள் அமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.  அதிமுக முக்கிய தலைவர்கள் கே.ஏ. செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையம் தொகுதியிலும், பொள்ளாச்சி ஜெயராமன் உடுமலையிலும், இரா. விசுவநாதன் நத்தம் தொகுதியிலும், டி. ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியிலும்,சொ. கருப்பசாமி சங்கரன்கோவில் (தனி) தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.  கோவை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுச்சாமி இப்போதைய சட்டப்பேரவையிலும் உறுப்பினராக உள்ளார். கடந்த வாரம் வெளியான பட்டியலில் சூலூர் தொகுதியில் அவர் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. திருத்தப்பட்ட பட்டியலில் அவருக்கு இடம் ஒதுக்கப்படவில்லை. சூலூர் தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  கடந்த வாரம் வெளியான பட்டியலில், ஆர்.கே.நகர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் மதுசூதனன் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் பட்டியலில் அவருக்கு தொகுதி எதுவும் ஒதுக்கப்படவில்லை.  2001 முதல் 2006 வரையிலான அதிமுக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த சி. பொன்னையனுக்கு தொகுதி எதுவும் ஒதுக்கப்படவில்லை.  இந்த வேட்பாளர்கள் 24-ம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணிக்குள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என ஜெயலலிதா ஏற்கெனவே அறிவித்துள்ளார்.  ஜெயலலிதா இம் மாதம் 24-ம் தேதி திருச்சியில் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறார். ஏப்ரல் 11-ம் தேதி சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.