இறைவனின் திருப்பெயரால்....

Pages

Friday, February 25, 2011

அ.தி.மு.க., - தே.மு.தி.க., கைகோர்ப்பு: கூட்டணி பேச்சுவார்த்தை துவங்கியது

சென்னை: சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன், தே.மு.தி.க., கூட்டணி அமைத்துள்ளது. தே.மு.தி.க., நிர்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், சுதீஷ், சுந்தர்ராஜன் ஆகியோர், நேற்று மாலை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், அக்கட்சி நிர்வாகிகளை சந்தித்து, தொகுதிப் பங்கீடு குறித்து முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.

அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., இடம்பெறும் என, ஆரம்பத்தில் இருந்தே பேசப்பட்டு வந்தது. இதை உறுதி செய்யும் வகையில், இரு கட்சி நிர்வாகிகளும், திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். முதல் முறையாக, நேற்று நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், நேற்று மாலை இந்த சந்திப்பு நடந்தது. தே.மு.தி.க., அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி செயலர் சுதீஷ், பொருளாளர் சுந்தர்ராஜன் ஆகியோர், நேற்று மாலை 5.30 மணிக்கு, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை, அ.தி.மு.க., நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வரவேற்று, அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்றனர். அதன்பின், இரு கட்சி நிர்வாகிகளும் 6.45 மணி வரை பேச்சுவார்த்தை நடத்தினர்.

அங்கிருந்து தே.மு.தி.க., நிர்வாகிகள் புறப்படும்போது, பண்ருட்டி ராமச்சந்திரன், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக மக்கள் விரும்பியபடி, இரு கட்சிகளும் சட்டசபை தேர்தலில் இணைந்து போட்டியிட முடிவு செய்துள்ளன. வரும் தேர்தலில், தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த ஓரணியில் திரண்டு இந்த கூட்டணியை உருவாக்க வேண்டும் என்பதில், விஜயகாந்த் பெரிதும் அக்கறை காட்டினார். மக்களின் விருப்பமும் நிறைவேறி உள்ளது. இந்தக் கூட்டணி, வெற்றிக் கூட்டணி. இரு கட்சியினரும், இன்று ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளோம். இன்றைய பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்தது. மீண்டும் பேசி முடிவெடுக்க திட்டமிட்டுள்ளோம். வரும் தேர்தலில், ஒரு மாற்றத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அந்த மாற்றம் நிறைவேறும் வகையிலும், மக்கள் உணர்வுக்கு வடிவம் கொடுக்கும் வகையிலும், மக்கள் மீது அக்கறை கொண்ட அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்ற எண்ணம், அ.தி.மு.க., தலைமைக்கும், விஜயகாந்துக்கும் ஏற்பட்டுள்ளது. அதன்படி, இந்த கூட்டணி ஏற்பட்டுள்ளது. இது மக்கள் கூட்டணி; வெற்றிக் கூட்டணி, என்றார்.

பின்னர், நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியதாவது:

* ஆட்சியில் பங்கு கேட்பீர்களா?
ஆட்சியில் இடம்பெறும் ஆசையில்லை.

* அடுத்தகட்ட பேச்சுவார்த்தை எப்போது?
விரைவில் பேசுவோம்.

* எத்தனை இடங்கள் கேட்டிருக்கிறீர்கள்?
பேசி முடிவெடுப்போம்.

* இதுவரை, "மக்களுடன் கூட்டணி; தெய்வத்துடன் கூட்டணி' என்று மட்டுமே விஜயகாந்த் கூறி வந்தார். தற்போது அ.தி. மு.க.,வுடன் கூட்டணி வைத்திருக்கிறீர்களே?
மக்கள் குரலே மகேசன் குரல். இந்த ஆட்சியை ஒழித்துக்கட்டி புதிய ஆட்சி மலர, மக்கள் குரலும், தெய்வத்தின் குரலும் ஒன்றாக ஒலிக்கிறது. அதன்படி தான், இந்த கூட்டணி அமைந்துள்ளது. விஜயகாந்த், ஜெயலலிதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பூங்கொத்து அனுப்பினார். அதை, கார்டனில் வழங்கியுள்ளோம். தொகுதி பங்கீடு முடிவை, இரு தலைவர்களும் ஒன்றாக அறிவிப்பர். இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.