இறைவனின் திருப்பெயரால்....

Pages

Friday, February 25, 2011

"80 கேட்டால் 48 தான் தர முடியும் என்பதா?': தி.மு.க., பார்முலாவை ஏற்க சோனியா மறுப்பு

"சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு 48 "சீட்'கள் வழங்கப்படும்; ஆட்சியில் பங்கு என்ற காங்கிரசின் கோரிக்கையை தேர்தலுக்குப் பின் பரிசீலிக்கலாம்' என்ற தி.மு.க.,வின் திட்டத்தை, காங்கிரஸ் ஏற்க மறுத்து விட்டது. 80 தொகுதிகளை ஒதுக்குமாறு காங்கிரஸ் கேட்ட நிலையில், 48 தொகுதிகளை ஒதுக்குவதாக தி.மு.க., தெரிவித்தது காங்கிரசுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அடுத்த கட்ட முடிவெடுக்க, முன்னணி நிர்வாகிகளுடன் முதல்வர் கருணாநிதி நேற்று ஆலோசனை நடத்தினார்.
"தமிழகத்தில் ஆட்சியில் பங்கு வேண்டும்; குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்க வேண்டும்; அதை செயல்படுத்த ஒருங்கிணைப்புக் குழு அமைக்க வேண்டும்' என, தி.மு.க.,வுடன் நடந்த தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையின் போது, காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதற்கு தி.மு.க., மறுப்பு தெரிவித்ததால், பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாமல் முட்டுக்கட்டை ஏற்பட்டது. இந்நிலையில், இரு கட்சிகளுக்கிடையே நடந்த பேச்சுவார்த்தை குறித்து காங்கிரசின் ஐவர் குழு உறுப்பினர்களான மத்திய அமைச்சர்கள் சிதம்பரம் மற்றும் வாசன், தங்கபாலு, ஜெயந்தி நடராஜன், ஜெயக்குமார் ஆகியோர் சோனியாவிடம் விளக்கினர். தி.மு.க.,வின் நிலை குறித்து, சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் மூலம் சோனியாவுக்கு தெரிவிக்கப்பட்டது. அப்போது, "காங்கிரசுக்கு கூட்டணியில் 48 தொகுதிகள் வழங்கப்படும். கம்யூனிஸ்டுகள் தற்போது கூட்டணியில் இல்லாததால், கடந்த முறை அவர்கள் போட்டியிட்ட 23 தொகுதிகள் கைவசம் உள்ளன. இதில், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட இதர கூட்டணிக் கட்சிகளுக்கு இடங்கள் வழங்கியது போக, மீதமுள்ள இடங்கள் காங்கிரசுக்கு கொடுக்கப்படும். ஆட்சியில் பங்கு குறித்த பேச்சு தற்போது எழவில்லை. தேர்தலுக்கு பின்னர் அவசியம் ஏற்படும்போது, அது குறித்து பேசிக் கொள்ளலாம்' என்று, சோனியாவிடம் தி.மு.க., சார்பில் தெரிவிக்கப்பட்டது.
காங்கிரசுக்கு 80 தொகுதிகளை ஒதுக்குமாறு வலியுறுத்திய நிலையில், 48 தொகுதிகள் மட்டும் ஒதுக்குவதாக தி.மு.க., தெரிவித்ததால் காங்கிரஸ் கோபமடைந்துள்ளது. எனவே, புதிய மாற்றுத் திட்டத்துடன் அணுகுமாறு தி.மு.க.,வை காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து, முதல்வர் கருணாநிதி தலைமையில் தி.மு.க., நிர்வாகிகள் சென்னையில் நேற்று அவசர ஆலோசனை நடத்தினர். மத்திய அமைச்சரும், தி.மு.க.,வின் தென் மண்டல பொறுப்பாளருமான அழகிரி, தென் மாவட்டங்களின் சார்பில், தி.மு.க.,வின் நிலையை முதல்வரிடம் தெரிவித்தார். அப்போது, கடந்த ஐந்தாண்டுகளில் அரசின் திட்டங்களால் கட்சிக்கு ஏற்பட்டுள்ள செல்வாக்கு, கூட்டணிக் கட்சிகளினால் ஏற்படும் கூடுதல் பலம் ஆகியன குறித்து கட்சி தலைமையிடம் விவரித்தார். வட மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய மாவட்டச் செயலர்களுடன், துணை முதல்வர் ஸ்டாலின் கருத்து கேட்டார். இதுதவிர, கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் கருத்துக்களையும் ஸ்டாலின் கேட்டார். இந்த ஆலோசனைகள் மூலம், காங்கிரஸ் கேட்டுள்ள புதிய மாற்றுத் திட்டத்தை தி.மு.க., வகுத்து வருகிறது. இத்திட்டம், காங்கிரஸ் ஏற்றுக் கொள்ளும் வகையில் இருக்குமா? என்பது விரைவில் தெரியும். மத்திய அரசில் தி.மு.க., அங்கம் வகிக்கும் நிலையில், கூட்டணியை முறித்துக் கொள்வது தி.மு.க.,விற்கு சாதகமாக இருக்காது என்பதால், கூட்டணியை தொடருவதற்கான முயற்சிகளை தி.மு.க., எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.