இறைவனின் திருப்பெயரால்....

Pages

Thursday, February 24, 2011

தி.மு.க., முன்னணி நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசனை: காங்கிரஸ் நிபந்தனைகள் குறித்து விவாதம்

சென்னை : "கூட்டணியில் தொடர காங்கிரஸ் தொடர்ந்து நிபந்தனை விதிக்கும் பட்சத்தில், தற்போது நம்மிடம் உள்ள கூட்டணிக் கட்சிகளைக் கொண்டே வெற்றி பெறுவோம்' என, முதல்வர் கருணாநிதி நடத்திய ஆலோசனையில், அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இந்நிலையில், சோனியாவை காங்கிரசின் ஐவர் குழுவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

தொகுதிப் பங்கீட்டுப் பேச்சின் போது, ஆட்சியில் பங்கு, குறைந்தபட்ச செயல் திட்டம், அதை செயல்படுத்த ஒருங்கிணைப்புக் குழு என்று மூன்று நிபந்தனைகளை காங்கிரஸ் முன் வைத்தது. இதனால், பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டு, பிரச்னையை சோனியாவிடம் தி.மு.க., கொண்டு சென்றுள்ளது.

இந்நிலையில், தி.மு.க., இரண்டாம் கட்டத் தலைவர்கள் மட்டத்தில் காங்கிரசுக்கு எதிராக ஏற்பட்டுள்ள கோபம், அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமண விழாவில் கலந்து கொள்ள நேற்று திருவண்ணாமலை சென்ற முதல்வர் கருணாநிதி, கட்சியின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளிடம், இது தொடர்பாக கருத்துக்களை கேட்டார்.கூட்டணியில் இருக்கும் எதார்த்த நிலையை கருத்தில் கொள்ளாமல், 80 சீட் வேண்டும், 90 சீட் வேண்டும் என காங்கிரசின் அனைத்து மட்டத் தலைவர்களும் கூறி வந்தது, தி.மு.க.,வுக்கு தேவையற்ற நெருக்கடியை உருவாக்கியதாகக் கூறும் தி.மு.க., நிர்வாகிகள், லோக்சபா தேர்தலில் அதிக இடங்களைப் பெற இது போன்ற அணுகுமுறையை காங்கிரஸ் பின்பற்றியதை சுட்டிக் காட்டினர்.

"லோக்சபா தேர்தலில், 16 இடங்களைப் பெற்ற காங்கிரசால், தங்கபாலு, மணிசங்கர் அய்யர், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பிரபு, கார்வேந்தன் போன்ற முக்கிய தலைவர்களையே வெற்றி பெறச் செய்ய முடியவில்லை. கோஷ்டி பூசல், மாவட்ட ஒன்றிய அளவில் தேர்தல் பணி செய்ய காங்கிரசுக்கு ஆள் இல்லாதது. தேர்தல் செலவுக்கு கொடுத்த பணத்தை காங்கிரசார் செலவிடாதது போன்றவையால் எதிர் அணி தான் லாபம் அடைந்தது. சட்டசபை தேர்தலிலும் இதே நிலை தான் காங்கிரசால் ஏற்படும்' என்றும் தலைமையிடம் கூறினர்.

"கூட்டணியின் பெரிய கட்சி என்ற வகையில் காங்கிரசின் செயல்பாடுகள் கடந்த காலத்தில் இல்லை. தி.மு.க.,வுக்கு நெருக்கடியையும், அவமானத்தையும் உருவாக்குதிலேயே அதன் கவனம் இருந்துள்ளது. காங்கிரசின் முன்னாள் தலைவர்கள், இளைஞர் அணி நிர்வாகிகளின் பேச்சுக்களும், செயல்பாடுகளும் இதற்கு சான்றாக அமைந்துள்ளன' என்றும் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக காங்கிரஸ் தலைமையிடம் தி.மு.க., தலைமை எடுத்துச் சொல்லியும், அதற்கு கட்டாய கடிவாளம் போடாத காங்கிரஸ் தலைமையால், தி.மு.க., தலைமை தனிப்பட்ட அவமானங்களை சந்தித்ததை வரிசைப்படுத்தினர்.
சி.பி.ஐ.,யை கையில் வைத்துக் கொண்டு தனது சொந்த லாபங்களுக்காக காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது. முலாயம் சிங், மாயாவதி போன்ற தலைவர்களை இதுபோல மிரட்டியுள்ள காங்கிரஸ், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சோதனை என்ற பெயரில் அறிவாலயம் வரை சி.பி.ஐ.,யை அனுப்பி மிரட்டுவது சரியல்ல என்று குறை கூறிய தி.மு.க., தலைவர்கள், "இதே காங்கிரசால், மிசா நெருக்கடியையும் கடந்து வந்துவிட்டோம், தோழமை என்ற நிலையில் காங்கிரசுடன் அனைத்து உறவுகளையும் தொடரலாம், மிரட்டலுக்கு பணிந்து கூட்டணியை தொடர வேண்டிய அவசியமில்லை' என, கருணாநிதியிடம் கூறினர்.

"பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் மூலம் வட மாவட்டங்களிலும், கொங்கு நாடு மக்கள் கட்சி மூலம் மேற்கு மாவட்டங்களிலும், மூவேந்தர் முன்னணி, முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் மூலம் தென்மாவட்டங்களிலும் தேர்தலை எதிர்கொள்ளலாம். தி.மு.க.,வின் திட்டங்கள், அனைத்து தரப்பு மக்களிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. இவை முழுமையாக நமக்கு கை கொடுக்கும். காங்கிரசால் நமக்கு பயனில்லை; சுமை தான்' என்று தலைமையிடம் வாதிட்டனர்.

இந்நிலையில், காங்கிரசின் ஐவர் குழு மற்றும் தமிழகத்துக்கான பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் ஆகியோரை அழைத்து, சோனியா நேற்று டில்லியில் ஆலோசனை நடத்தினார். காங்கிரஸ் எடுக்கும் முடிவைப் பொறுத்தே, அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் என கூறப்படுகிறது.

மேலும் அரசியல் செய்திகள்:

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.