இறைவனின் திருப்பெயரால்....

Pages

Friday, February 25, 2011

தமிழக மீனவர்களை இலங்கை சுடுவது சரியல்ல: மன்மோகன்

இலங்கையில் தமிழர்களின் பிரச்னைக்கு அரசியல் தீர்வு தான் ஒரே வழி. இதை அந்நாட்டு அரசிடம் இந்தியா அடிக்கடி வலியுறுத்தி வருகிறது. இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்த கூடாது. கடலில் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்ய வேண்டுமே தவிர, சுட்டு கொல்வதை எந்த வகையிலும் ஏற்க முடியாது,'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
பார்லிமென்டில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளித்த பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது: அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன என்பதை ஒப்புக் கொள்கிறேன். 2009ல் கடும் வறட்சியும், வெள்ளமும் நாட்டில் ஏற்பட்டது. அப்போது விலைகள் ஏறின. சர்வதேச விலை நிலவரங்களும் அதிகமாக இருந்ததால், அதிக விலை கொடுத்து தான் இறக்குமதி செய்ய நேர்ந்தது. அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருட்களை இந்திய உணவுக் கழகம் மூலமாக கொள்முதல் செய்ததால், இவற்றின் விலையை ஓரளவுக்கு கட்டுக்குள் வைக்க முடிந்தது. விலையும் அதிகரிக்கவில்லை. ஆனாலும், காய்கறிகள், பழங்கள் மற்றும் பாலின் விலைகளை கட்டுப்படுத்த முடியவில்லை. பணவீக்கத்தை குறைக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. அதேசமயம் வளர்ச்சியும் பாதிக்க கூடாது என்பதில், கண்ணும், கருத்துமாக உள்ளது. இதுவே விலைவாசியை குறைப்பதில், தாமதம் ஏற்படுவதற்கு காரணம். எனினும், மார்ச்சுக்குள் பணவீக்கம் 7 சதவீதத்திற்குள் குறைந்து விடும். உணவுப்பொருள் பணவீக்கம் குறைய சற்று நாளாகும்.

விவசாயத் துறையில் உற்பத்தியை பெருக்குவதே இதற்கு நீண்ட கால தீர்வு. அதற்காக நிறைய முதலீடு செய்ய அரசு தயாராக உள்ளது. பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்புகள் இடம் பெறும். பொது வினியோக திட்டம் மிக முக்கியமானது. அதை சீரமைக்க எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. உணவுப் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வருவதில் அரசு உறுதியாக உள்ளது. இதன் மூலம், வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் சாதாரண மக்களுக்கு, அரிசியும், கோதுமையும் சகாய விலையில் கிடைக்கும். ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் மத்திய அரசு வழங்குகிறது. இந்த நிதியும், சலுகை விலையில் அரிசி, கோதுமையும் கிடைத்துவிட்டால் சாதாரண மக்களின் உணவு பிரச்னை தீர்ந்து விடும் என்று நம்புகிறேன். அரசு துறைகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து பதிலளிப்பதில், அரசு தயக்கம் காட்டுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. குறிப்பாக ஸ்பெக்ட்ரம் மற்றும் காமன்வெல்த் விவகாரங்கள் சமீப நாட்களில் சர்ச்சையாகி வருகின்றன.

தொலைத்தொடர்பு கொள்கை என்பது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி காலத்திலிருந்து கடைபிடிக்கப்பட்டு வருவதாகும். இதுதான் இந்த அரசியலும் அடிப்படை கொள்கையாக இருந்து வருகிறது. தொலைத்தொடர்பு கொள்கையை அமல்படுத்துவதில் சில தவறுகள் நடந்திருக்கலாம். அதேசமயம் தொலைத்தொடர்பு அடர்த்தி என்பது கடந்த 2004ம் ஆண்டில் 7.2 சதவீதமாக மட்டுமே இருந்தது. நகர்புறம் மற்றும் கிராமப்புறம் இரண்டையும் சேர்த்தே இவ்வளவாக இருந்த தொலைத்தொடர்பு அடர்த்தி, 2010ம் ஆண்டில் 66 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்று. ஊழல் நடந்துள்ளது. அதை சும்மாவிடப் போவதில்லை. உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடைபெற்ற ஊழல்கள் குறித்தும், உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது. விண்வெளி துறையில் 2005ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தம் அமல்படுத்தப்படவில்லை. அந்த தேவாஸ் கம்பெனிக்கு ஸ்பெக்ட்ரமும் கூட ஒதுக்கப்படவில்லை. சர்ச்சைக்குரிய அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் தற்போது 8.5 சதவீதம் வரை உள்ளது. இதை 10 சதவீதம் வரை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து தான், முக்கிய மக்கள் நல திட்டங்களை அரசு நிறைவேற்றி வருகிறது. உள்நாட்டு பாதுகாப்பு சிறப்பாக உள்ளது. அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை குறைந்து வருகிறது. காஷ்மீரிலும் நிலைமை முன்னேறியுள்ளது. அங்குள்ள இளைஞர்களுக்கு ஒரு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இலங்கையை பொறுத்தவரை, அந்நாட்டில் வசிக்கும் தமிழர்களின் பிரச்னைக்கு ஒரே வழி அரசியல் தீர்வு காண்பது தான். இதை இலங்கை அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அங்குள்ள தமிழ் மக்கள் மரியாதையுடனும், கண்ணியத்துடனும் நடத்த வேண்டும். அவர்களின் நலன்கள் பாதுகாக்க வேண்டும். அதற்குண்டான வழிவகைகளை அந்நாட்டு அரசு எடுக்க வேண்டும். இந்திய மீனவர்களை இலங்கை ராணுவம் தாக்குவது தொடர்கிறது. எல்லை தாண்டி மீன்பிடிக்க போனால், இந்திய மீனவர்களை கைது செய்ய வேண்டுமே தவிர, அவர்களை சுட்டுக் கொல்வது போன்ற காரியங்களில் ஈடுபடக் கூடாது. அதை இந்தியாவால் ஏற்கவும் முடியாது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

கறுப்பு பணம் தொடர்கதை: ""கறுப்புப் பணத்தை, வெளிநாட்டு வங்கிகளில் டிபாசிட் செய்வது, கடந்த நான்கைந்து ஆண்டுகளாக நடக்கும் செயல் அல்ல. அது, பல ஆண்டுகளாக நடந்து வருகிறது,'' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

அவர் கூறியதாவது: ஒரு விஷயத்தில் ஊழல் நடந்திருந்தால், அதை, இந்த மண்ணின் சட்டத்தைக் கொண்டு கடுமையாக கையாள வேண்டும். தவறு செய்தவர்களை இந்த மண்ணின் சட்டம் தண்டிக்கும். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளில் யார் ஊழல் செய்திருந்தாலும், அவர்கள் தண்டிக்கப்படுவர். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு மோசடி விவகாரத்தில் உண்மையை வெளிக்கொண்டு வர, விசாரணை நிறுவனங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கும். கறுப்புப் பண விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்று நடத்தப்படும். அதில், கறுப்புப் பணத்தை கையாள்வது தொடர்பான அவர்களின் யோசனைகள், உதவிகள் கேட்கப்படும். ஆக்கப்பூர்வமான வகையில் தெரிவிக்கப்படும் ஆலோசனைகள் பரிசீலிக்கப்படும். நாட்டில் பிரிவினைவாதிகளுக்கு இடமே கிடையாது. காஷ்மீர் மாநில அரசை பலப்படுத்த தேவையான அனைத்தும் செய்யப்படும். இந்தியாவின் எண்ணற்ற சாதனைகளைப் பார்த்து, உலக நாடுகள் வியப்படைகின்றன. நமது அதிசயிக்கத்தக்க செயலுக்கு மரியாதை செலுத்துகின்றன. நாட்டின் இந்த கவுரவத்தை மேலும் அதிகரிக்க, உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.