தமிழகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் நடித்து, முன்னணி இயக்குனர்களில் ஒருவரான முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியானது. இப்படம் வெளியாகி இரண்டொரு காட்சிகளுக்குள்ளே தமிழகம் முழுவதிலும் முஸ்லிம்கள் மத்தியில் கொந்தளிப்பு உண்டானது.
இப்படத்தைத் தடை செய்தாக வேண்டும் என்று நாட்டின் பல பாகங்களில் இருந்தும் தமுமுக தலைமை அலுவலகத்திற்கு தொலைபேசி அழைப்புகள் துருதுருத்தன. படம் பற்றிய சர்ச்சை "விஸ்வரூபம்' எடுத்துக்கொண்டே வந்ததால் தமுமுக தலைமை, திரைப்படத்தைப் பார்த்துவிட்டுத்தான் ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று முடிவு செய்தது.
இந்தச் சூழ்நிலையில், மமக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி முயற்சியில், படக்குழுவினர் தமுமுக தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்களைத் தொடர்புகொண்டு, "உங்கள் மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?'' என்று கேட்டார்கள். "படத்தைப் பார்த்துவிட்டுத்தான் ஒரு முடிவுக்கு வருவோம்'' என்று கூறினார். "அப்படியானால் படம் பார்க்க நாங்களே ஏற்பாடு செய்கிறோம்'' என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, 24 முஸ்-ம் அமைப்புகள் மற்றும் கட்சிகளை உள்ளடக்கிய அனைத்து முஸ்லிம் கூட்டமைப்புடன் தொடர்புகொண்டு, திரைப்படத்தைப் பார்த்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இந்த ஆய்வுக்குழுவில் தமுமுக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது உட்பட 13 பேர் கலந்துகொண்டனர். 14ஆம் தேதி, ஆய்வுக்குழுவினர் இத்திரைப்படத்தை ஆய்வு செய்தனர்.
மறுநாள் (நவம்பர் 15) அன்று ராயல் ரீஜென்சி ஓட்டலில் வைத்து படத்தின் சர்ச்சைகள் குறித்து ஆய்வுக் குழுவினருடன் கூட்டமைப்பு தலைவர்கள் விவாதித்தனர். இதில் தமுமுக தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ, பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, மக்கள் உரிமை ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ஜி.அத்தேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். படம் பற்றிய சர்ச்சை விவாதிக்கப்பட்டதுடன், அதில் சில காட்சிகள், வசனங்கள் நீக்கப்பட வேண்டும் என்றும், படக்குழுவினர் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதுபற்றி படக்குழுவினருடன் பேசுவதற்காக 10 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டு, சர்ச்சைக்கு காட்சிகள், வசனங்கள் தொகுக்கப்பட்டன. பின்னர் மாலை சுமார் 7 மணியளவில் ஓட்டல் சவேராவுக்கு படக்குழுவினர் வந்து, 10 பேர் குழுவை சந்தித்தனர். படக்குழுவில் இயக்குனர் முருகதாஸ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, நடிகர் விஜய்யின் அப்பா சந்திரசேகர் ஆகியோர் ஒரு குழுவுடன் வந்தனர்.
அனைத்து முஸ்லிம் கூட்டமைப்பின் முஸ்லிம் பிரதிநிதிகள் படக்குழுவினரிடம் தங்களுடைய கண்டனத்தையும், ஆதங்கத்தையும், ஆட்சேபனையையும் பதிவு செய்தனர். படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் நுட்பமான புரிதலுடனும், உள்ளார்ந்த அர்த்தங்களுடனும், தீவிரவாதிகள் என்ற பிம்பத்தைத் தாண்டி எவ்வாறு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் பாதிக்கச் செய்கிறது என்பதை விளக்கிக் கூறினர்.
பத்து, பதினைந்து வருடங்கள் தீவிரவாதி என்ற முத்திரையுடன் முஸ்லிம்கள் சிறையில் இருந்து வந்துள்ள நிலையில், தற்போது அவர்கள் குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். ஹேமந்த் கர்கரேயின் புலனாய்வு வழியாக குண்டுவெடிப்புகளின் பின்னணியில் செயல்பட்ட "அபினவ் பாரத்' என்ற இந்து அமைப்பைச் சேர்ந்த பிரக்யாசிங் தாக்கூர், இராணுவ அதிகாரி ஸ்ரீகாந்த் புரோகித் ஆகியோர் கைதாகி சிறையில் இருக்கின்றனர் என்ற விஷயங்களையும் விளக்கிக் கூறினர்.
இந்தக் கருத்துக்களையும், விமர்சனங்களையும் கேட்டு படக்குழுவினர் துவண்டும், நெகிழ்ந்தும் போயினர். இப்படம் எடுப்பதில் தனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்றார் முருகதாஸ். தன் குழந்தைகள் மீதும், குடும்பத்தார் மீதும் சத்தியமிட்டு கலங்கினார். என்னைப் பற்றிய இந்த எண்ணத்தை தயவுசெய்து மாற்றிக் கொள்ளுங்கள் என்று வேண்டினார்.
தயாரிப்பாளர் தாணு, முஸ்லிம்கள் தனக்கு பலமுறை உதவியிருப்பதையும், அதற்கு தான் நன்றிக்கடன் பட்டுள்ளதாகவும், அதனால் முஸ்லிம்களை வேதனைப்படுத்தும் நோக்கம் தனக்கு சிறிதும் இல்லை என்றும், இபபடம் இஸ்லாமிய சமுதாயத்துக்கு ஏற்படுத்திய காயத்தைப் போக்கும் வண்ணம், முஸ்தபா என்ற வேறு ஒரு படம் தயாரித்து வெளியிடுவதாகவும் கூறினார்.
விஜய்யின் தந்தையும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான எஸ்.சந்திரசேகர் பேசுகையில், அனைத்து சமூகத்தினரின் மனதிலும் விஜய் இடம்பெற வேண்டும் என்றுதான் கதைகளைத் தேர்வு செய்கிறோம். யாரையும் காயப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் கடுகளவும் எனக்கோ என் மகனுக்கோ இல்லவே இல்லை. இந்தக் கதையின் காட்சி அமைப்புகளில் இவ்வளவு பெரிய தாக்கம் இருப்பது எங்களுக்கே நீங்கள் சொல்லத்தான் புரிகிறது. இந்தப் படத்தில் என் மகன் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன் என்றார். தணிக்கைக் குழுவில் உங்களின் சார்பாக பிரதிநிதிகள் மூன்று பேரை சேர்க்கவும் பரிந்துரைக்கப் போகிறேன் என்றார்.
இதன்பின்னர், நீக்கப்பட வேண்டிய காட்சிகள் மற்றும் வசனங்களை முஸ்லிம்கள் தரப்பு சொன்னபோது, அதில் சாத்தியமானவைகள் பற்றி பேசப்பட்டது. மிகவும் ஆட்சேபனைக்குரிய இடங்களை நீக்க இயக்குனர் முருகதாசும் தயாரிப்பாளர் தாணுவும், எஸ்.சந்திரசேகரும் ஒப்புக்கொண்டனர்.
பின்னர் அங்கேயே பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இரவு சுமார் 8.30 மணியளவில் பத்திரிக்கையாளர் முன்னிலையில், இயக்குனர் முருகதாஸ் மன்னிப்புக் கேட்டதுடன், காட்சிகள், வசனங்கள் நீக்கப்படுவதையும் அறிவித்தார். சில காட்சிகள் இரண்டு நாட்களில் நீக்கப்படும் என்றும், சில காட்சிகள் படிப்படியாக நீக்கப்படும் என்றும் கூறினார்.
எஸ். தாணுவும், சந்திரசேகரனும் வருத்தம் தெரிவித்ததுடன், மாற்றுப் படம் செய்து முஸ்லிம்களின் மனக்குறையைப் போக்கப் போவதாக பத்திரிக்கையாளர்கள் முன்பு தெரிவித்தனர்.
இதுபோன்ற படங்கள் இனி தமிழில் எடுக்கப்படக்கூடாது என்ற கருத்தை கூட்டமைப்பின் தலைவர் அனிபா தெரிவித்தார். அத்துடன் பத்திரிக்கையாளர் கூட்டம் நிறைவடைந்தது. 50க்கும் அதிகமான பத்திரிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.