சென்னை, ஜூலை 14: செங்கல், ஜல்லி ஆகியவற்றின் விலைகளைக் குறைப்பதாக அவற்றின் உற்பத்தியாளர்கள் முதல்வர் ஜெயலலிதாவிடம் வியாழக்கிழமை உறுதி அளித்தனர். இதனால் தமிழகத்தில் புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான செலவு இனி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமைச் செயலகத்தில் ஜல்லி தயாரிப்பு உரிமையாளர்களும், செங்கல் தயாரிப்பு உரிமையாளர்களும் முதல்வரைத் தனித்தனியே சந்தித்து விலை குறைப்பு செய்வதாக உறுதி அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, செங்கல் விலை ஒரு லோடுக்கு ரூ. 3 ஆயிரமும், ஜல்லி விலை ஒரு லோடுக்கு ரூ. 700 வரையிலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து, தமிழக அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
செங்கல் உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், முதல்வர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினர். அப்போது, அவர்களின் கோரிக்கைகளை முதல்வர் கேட்டறிந்தார்.
கட்டுமானப் பொருள்களின் விலை அதிகமாக உள்ள நிலையில் செங்கல் விலை உயர்வு ஏழை, எளிய, நடுத்தர மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது என்றும், அதனால் மக்களின் நலன் கருதி செங்கல் விலையைக் குறைக்க வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார்.
முதல்வரின் அறிவுரையை ஏற்று செங்கல் விலையை இப்போதைய விலையில் இருந்து உடனடியாக லோடுக்கு ரூ. 3 ஆயிரம் குறைப்பதாக உற்பத்தியாளர்கள் உறுதி அளித்தனர்.
ஜல்லி விலை: ஜல்லிகளை உற்பத்தி செய்யும், கல் குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களிடம் ஜல்லியின் விலையைக் குறைத்திட முதல்வர் ஜெயலலிதா அறிவுறுத்தினார். அதன்படி, கருங்கல் ஜல்லியின் விலையை லோடுக்கு ரூ. 700 வரை குறைக்க உற்பத்தியாளர்கள் ஒப்புதல் தெரிவித்தனர்.
செங்கல் விலை ஒரு லோடு ரூ. 21 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. முதல்வரின் தலையீட்டைத் தொடர்ந்து ஒரு லோடு செங்கல் விலை இனி ரூ. 18 ஆயிரத்துக்குக் கிடைக்கும். ஒரு லோடு ஜல்லி விலை ரூ. 4,400 வரை விற்கப்பட்டு வருகிறது. இதன் விலையும் குறையும் எனத் தெரிகிறது.
இதனால் புதிய கட்டடங்களுக்கான செலவில் சதுர அடிக்கு ரூ.100 வரை குறைய வாய்ப்பு உள்ளதாக கட்டட காண்ட்ராக்டர்கள் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
இத்துடன் மணல் விற்பனையில், தனி நபர்கள் தலையிட்டு மணலை கிடங்கில் சேமித்து விற்பதால், செயற்கையாக விலை ஏற்றம் இருக்கிறது என மணல் லாரிகள் சங்கத்தினர் கூறி வருகின்றனர்.
இதில் முதல்வர் தலையிட்டு நேரடியாக மணல் குவாரியிலேயே லாரிகளுக்கு மணல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஒரு லாரிக்கு அனுமதிக்கப்பட்ட 3 யூனிட் மணலை ஏற்றுவதில் தடை ஏதும் செய்யக் கூடாது என்றும் கோரி முதல்வருக்கு அவர்கள் மனு அனுப்பியுள்ளனர்.
இதனால் மணல் விலை பெரிதும் குறையும் என அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் கம்பி, சிமெண்ட் விலையும் குறைய அரசு நடவடிக்கை எடுத்தால், புதிய கட்டடங்கள் கட்டுவதில் நடுத்தர வர்க்கத்தினர் ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தகைய நடவடிக்கைகளால் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என தொழிலாளர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
Friday, July 15, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.