டில்லியில், தி.மு.க.,வின் மரியாதையை, ஸ்பெக்ட்ரம் ஊழல் நாறடித்துக் கொண்டிருக்கிறது. தற்போது, தயாநிதி மீதான சி.பி.ஐ., குற்றாச்சாட்டு, பிறகு ராஜினாமா என்று தி.மு.க.,வின் நிலை பரிதாபத்தில் உள்ளது. தி.மு.க., அமைச்சர்கள் டில்லி அலுவலகங்களுக்கு வரும் போது, இறுக்கமான முகத்துடனேயே வருகின்றனர். அதிகமாக யாருடனும் பேசுவதில்லை. பைலில் கையெழுத்து போடும் போது, ஒன்றுக்கு பல முறை அதிகாரிகளிடம் தீர ஆலோசித்த பிறகே கையெழுத்திடுகின்றனர். தற்போது தி.மு.க.,வின் ராஜாவும், கனிமொழியும் டில்லி திகார் சிறையில் உள்ளனர். குறைந்த பட்சம் இன்னும் நான்கு மாதங்களுக்கு, இவர்கள் சிறையில்தான் இருக்க வேண்டும். காரணம் இவர்கள் மீது கோர்ட் குற்றச்சாட்டுகளை பதிவு செய்த பிறகுதான் இவர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்யலாம் என்று சுப்ரீம்கோர்ட் கூறிவிட்டது. இதற்கு, நான்கு மாதங்களுக்கு மேல் ஆகும் என்று கூறப்படுகிறது.இந்நிலையில், ஒரு போன் விவகாரம் தி.மு.க., அமைச்சர்களை பாடாய் படுத்திக் கொண்டிருக்கிறது. சிறையில் உள்ளவரின் தாயார், தி.மு.க., அமைச்சர்களுக்கு அடிக்கடி போன் செய்கிறார். "அனைவரும் காலை வாரி விட்டனர். எப்படியாவது சிறையிலிருந்து வெளியே கொண்டு வர ஏற்பாடு செய்யுங்கள். உங்களுக்கு காபினட் பதவி வாங்கித் தர சிபாரிசு செய்கிறேன்' என்று சொல்கிறார் அவர்."சுப்ரீம் கோர்ட் கண்காணிப்பதால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது' என்று அமைச்சர்கள் சொன்னாலும், அந்த அம்மணி கேட்பதில்லை. ஒரு நாளைக்கு பத்து முறைக்கு மேல் போன் செய்கிறார். அந்த மேலிடத்திலிருந்து போன் வந்தாலே, தி.மு.க., அமைச்சர்கள் அலறுகின்றனர். போன் எண்ணைப் பார்த்ததுமே, போனை எடுக்கவும் மறுக்கின்றனர். பாவம் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதை மறந்தவர்கள்.
சபாநாயகர் மீது பா.ஜ., அப்செட் : மறைந்த தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் மறைந்த நாளன்று பார்லிமென்டில் உள்ள அவர்களது சிலைக்கோ, போட்டோவிற்கோ மாலை போட்டு மரியாதை செய்வது வழக்கம். இந்த நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் மற்றும் சபாநாயகர் கலந்து கொள்வர். பார்லிமென்ட்டில் சமீபத்தில் பா.ஜ.,வின் நிறுவனத் தலைவர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. பா.ஜ.,வின் சீனியர் தலைவர்கள் அனைவரும் முகர்ஜியின் போட்டோவிற்கு மாலை போட்டு மரியாதை செய்தனர். ஆனால், இந்த நிகழ்ச்சிக்கு சபாநாயகர் மீரா குமார் வரவில்லை. "பார்லிமென்ட் வளாகம் சபாநாயகரின் நிர்வாக ஆதிக்கத்தில் உள்ளது. அவருடைய அனுமதியில்லாமல் எதையும் செய்ய முடியாது. ஏன் மீரா குமார் வரவில்லை. பா.ஜ., தலைவர் விழாவை அவர் எப்படி புறக்கணிக்க முடியும்' என்று, பா.ஜ.,வினர் அப்செட் ஆகியுள்ளனர்.
இரண்டாவது விக்கெட் : சென்ற வாரம் டில்லி அரசியலை கலக்கியது தி.மு.க., விவகாரம். சுப்ரீம்கோர்டில் தயாநிதிக்கு எதிராக சி.பி.ஐ., அறிக்கை தாக்கல் செய்த பிறகு, எந்த நேரமும் அவர் பதவி விலகலாம் என்ற பரபரப்பு இருந்தது. ஆனால், பதவி விலகல் வருகிற மாதிரி தெரியவில்லை. ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் எப்போது இரண்டாவது விக்கெட் விழும் என்று அரசியல் வட்டாரங்களிலும், அதிகாரிகள் மத்தியிலும் கிண்டலடித்துக் கொண்டிருந்தனர். இந்த அறிக்கை தாக்கலன்று இரவு, பிரதமர் உட்பட காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். தயாநிதி பதவியிலிருந்து விலக வேண்டும் என்று பிரதமர் முடிவெடுத்தார். சரத் பவாரிடம், "நீங்கள் அந்த ஆளிடம் சொல்லிவிடுங்கள். அவர் பதவியில் நீடிக்கக் கூடாது. நீடிக்க முடியாது' என்று. பிறகு பவார் இதை தயாநிதியிடம் தெரிவித்தார். "பதவி விலக மாட்டேன். சி.பி.ஐ., குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை' என்று, வீம்பாக பேசிக் கொண்டிருந்த அமைச்சர், கடைசியில் ராஜினாமா கொடுத்துவிட்டு, டில்லி மீடியாவிடமிருந்து ஒளிந்துக் கொண்டார். "இதற்கு ராஜா எவ்வளவோ மேல். பதவி விலகியதுமே மீடியா முன் வந்து தன் கருத்தை பகிரங்கமாக சொன்னார். இவரும் அப்படி சொல்வதை விட்டு, மீடியாவை திட்டுகிறாரே' என்கின்றனர் தி.மு.க.,வினர்.இன்னொரு பக்கம் அழகிரியின் துறை மாறுமா என்றும், டில்லியில் பேச்சு அடிபடுகிறது. மரபு சாரா எரிசக்தி துறையின் அமைச்சராக இருப்பவர் பரூக் அப்துல்லா. இந்த துறையில் அதிக வேலை இல்லை. நல்ல துறையாக மாற்றிக் கொடுங்கள் என்று பிரதமரை நச்சரித்துக் கொண்டிருக்கிறார் இவர். அழகிரி வசம் உள்ள, உரம் மற்றும் ரசாயனத்துறை, அப்துல்லாவிற்கு கொடுக்கப்படலாம் என்கின்றனர். காரணம் அழகிரி அமைச்சரவை கூட்டங்களுக்கு வருவதில்லை. அவருடைய துறையை நன்றாக கவனிப்பதும் இல்லை என்று அதிகாரிகள் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
தெலுங்கு தேசம் குடைச்சல் : அரசியல் கட்சிகள், பார்லிமென்டில் இருந்து செயல்பட, அவர்களுக்கு அலுவலகம் ஒதுக்கப்படுகிறது. ஒன்பது எம்.பி.,க்களை கொண்ட கட்சிக்கு, ஒரு அறை என்ற கணக்கில், கட்சிக்கு அலுவலகம் ஒதுக்குவார் சபாநாயகர் . அதிகமான எம்.பி.,க்களைக் கொண்ட கட்சிக்கு, இரண்டு அல்லது மூன்று அறைகளை உள்ளடக்கிய பெரிய அறை ஒதுக்கப்படும். வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, தெலுங்கு தேசம் கட்சியில், 28 எம்.பி.,கள் இருந்ததால், அப்போதைய சபாநாயகர் பாலயோகி மூன்று அறைகள் உள்ளடக்கிய பெரிய அறையை அளித்தார். பாலயோகியும் தெலுங்கு தேசத்தைச் சேர்ந்தவர்.பின், 2009 தேர்தலில் தெலுங்கு தேச கட்சியில் ஆறு எம்.பி.,க்களே வெற்றி பெற்றனர். ராஜ்ய சபா எம்.பி.,க்கள் நான்கு பேரையும் சேர்த்து, தெலுங்கு தேசம் கட்சியில் 10 எம்.பி.,க்கள். இதனால், இவர்களுடைய பெரிய அறை பறிக்கப்பட்டு சிறிய அலுவலகம் ஒதுக்கப்பட்டது.இவர்கள் இருந்த இடம் தற்போது தி.மு.க.,விற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. லோக்சபா, ராஜ்யசபா இணைந்த தி.மு.க.,வில், 25 எம்.பி.,க்கள் உள்ளனர். அறை ஒதுக்கப்பட்டு பல மாதங்களாகியும், தெலுங்கு தேசம் காலி செய்யவில்லை. வெறுத்துப் போன தி.மு.க., எம்.பி.,க்கள் ஒதுக்கப்பட்ட அலுவலகத்தை ஆக்ரமித்துக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அதிரடியாக செயல்பட திட்டமிட்டு வருகின்றனர்.
Friday, July 15, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.