இறைவனின் திருப்பெயரால்....

Pages

Monday, June 13, 2011

இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு தீர்வு: பிரதமரிடம் முன்வைப்பார் முதல்வர்

சென்னை: முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக இன்று டில்லி செல்லும் முதல்வர் ஜெயலலிதா, பிரதமரை நேரில் சந்தித்து, இலங்கை பிரச்னையில் நிரந்தர தீர்வு காண உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தவுள்ளார்.


தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும், கவர்னர் உரைக்குப் பின் நடந்த முதல் சட்டசபை கூட்டத்தில், இலங்கை பிரச்னைக்கு தீர்வு காண, அதிரடி தீர்மானங்களை நிறைவேற்றினார். "இலங்கைத் தமிழர்களை இரக்கமின்றி கொன்று குவித்தவர்களை போர் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும்; இக்கொடுஞ்செயல் புரிந்த இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இந்த தீர்மானத்தையடுத்து, இலங்கை விவகாரம் சூடுபிடித்தது. இலங்கை பிரச்னையில் மத்திய அரசு விரைவு காட்டியது. இது தொடர்பாக, இலங்கை அதிபரை சந்தித்து பேச, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் தலைமையில், வெளியுறவுத் துறை செயலர் நிருபமா ராவ், பாதுகாப்புத் துறை செயலர் பிரதீப் குமார் உள்ளிட்ட குழுவினரை பிரதமர் மன்மோகன் சிங், அவசரம் அவசரமாக அனுப்பி வைத்தார்.

கடந்த 9ம் தேதி மாலை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசினார். அப்போது, "முகாம்களில் வைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு முழுமையான மறுவாழ்வு அளிக்க வேண்டும்; அவர்களுக்கு சம அதிகாரம் வழங்க வேண்டும்' என்பதை வலியுறுத்தினார்.முதல்வரிடம் ஆலோசனை நடத்திய பின்னர், சிவசங்கர் மேனன் தனது குழுவினருடன் இலங்கைக்கு புறப்பட்டுச் சென்று, அதிபர் ராஜபக்ஷேவை சந்தித்து பேசினார். ஆனால், இந்த சந்திப்பில் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை. "தமிழர்களுக்கு சுயாட்சி அதிகாரம் வழங்கப்பட மாட்டாது. போலீஸ், நில அதிகாரமும் வழங்க முடியாது' என அதிபர் ராஜபக்ஷே, இந்தியக் குழுவினரிடம் கூறியதாகத் தெரிகிறது.

ஆகவே, பிரதமரை முதல்வர் சந்திக்கும் போது இக்குழு தெரிவித்த முடிவுகளை ஒட்டி, இலங்கை பிரச்னையில் மத்திய அரசின் அணுகுமுறை குறித்து தெரிவிக்க வாய்ப்புகள் உள்ளன. அத்துடன், தமிழக மீனவர் தங்கள் தொழிலில் பாதிப்பின்றி செயல்பட வழி காணப்படும் என்று தெரிகிறது. கச்சத்தீவை மீட்பது குறித்த மத்திய அரசின் நிலைப்பாடும் தெரியவரும்.தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சூழ்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற பின்னர், முதல் முறையாக இன்று டில்லிக்குச் செல்கிறார். அங்கு, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கும் முதல்வர், தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களுக்கு கூடுதல் நிதி, கடும் மின்வெட்டை சமாளிக்க மத்திய தொகுப்பில் இருந்து கூடுதல் மின்சாரம், ஏழைகளுக்கு வழங்கப்படும் 20 கிலோ இலவச அரிசி திட்டத்திற்கு கூடுதல் அரிசி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கிறார்.

தமிழகத்தில் தி.மு.க.,வுடன் அணி சேர்ந்ததால் காங்கிரசும் தேர்தலில் அடி வாங்கியிருக்கிறது என்ற கருத்து, காங்கிரஸ் தலைவர்கள் பலரிடம் இருக்கும் நேரத்தில், முதல்வர் டில்லி பயணம், அரசியலில் முக்கியத்துவம் பெற்றதாகக் கருதப்படுகிறது. சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே, மத்தியில் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு தருவதாக ஜெயலலிதா அறிவித்திருந்தார். தொடர்ந்து தி.மு.க.,வுடன் உறவு நீடிக்கும் என்று காங்கிரஸ் தரப்பில் பதிலளித்தாலும், தமிழகத்தின் இன்றைய சூழ்நிலையை காங்கிரஸ் மேலிடம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.ஆகவே, முதல்வரின் டில்லி பயணமும், பிரதமருடன் அவர் சந்தித்து பேசுவதும், இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வழி காண உதவும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.முதல்வர் ஜெயலலிதா நாளை மாலையில் சென்னை திரும்புகிறார் என்று கூறப்பட்டது.





0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.