இறைவனின் திருப்பெயரால்....

Pages

Monday, June 27, 2011

ஆம்னி பஸ் கட்டணம் உயர்வு:"ஏசி' பஸ்களுக்கு 50; மற்ற பஸ்களுக்கு 30

டீசல் விலை உயர்வு எதிரொலியாக, ஆம்னி பஸ்களில் வரும் ஜூலை 1ம் தேதி முதல் பயணக் கட்டணம் உயருகிறது. அதிகபட்சமாக,"ஏசி' பஸ்களில் 50 ரூபாயும், "ஏசி' வசதியில்லாத சாதாரண பஸ்களில் 30 ரூபாயும் உயர்த்தப்படுகிறது.


மத்திய அரசு, சமையல் காஸ் விலையில் 50 ரூபாய், டீசல் லிட்டருக்கு 3 ரூபாய், மண்ணெண்ணெய் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது. இதையடுத்து, சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 43.16 ரூபாயாக உயர்ந்தது. இந்த டீசல் விலை உயர்வால் ஆட்டோக்கள், கால்டாக்சிகள் உள்ளிட்ட பொதுமக்கள் செல்லும் வாகனங்களில் பயணக் கட்டணம் உயரும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், ஆம்னி பஸ்களில் பயணக் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக, கோயம்பேடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்து ஆலோசித்தனர். அப்போது, டீசல் உயர்வை சமாளிக்கும் வகையில் பயணக் கட்டணத்தை உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது.

ஆலோசனையின் முடிவில், கோயம்பேடு ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அப்சல் கூறியதாவது:டீசல் விலை உயர்வால் ஆம்னி பஸ்களில் பயணக் கட்டணத்தை உயர்த்துவது தவிர்க்க முடியவில்லை."ஏசி' வசதியுள்ள பஸ்களுக்கு அதிகபட்சமாக 50 ரூபாய் வரையிலும்,"ஏசி' வசதியில்லாத சாதாரண பஸ்களுக்கு அதிகபட்சமாக 30 ரூபாய் வரையிலும் உயர்த்துவது என முடிவு செய்துள்ளோம்.கிலோ மீட்டருக்கு ஏற்றாற்போல் கட்டண உயர்வை நிர்ணயித்துள்ளோம். வரும் ஜூலை 1ம் தேதி முதல், இந்த பயணக் கட்டண உயர்வு நடைமுறைக்கு வரும். அடுத்த மாதத்திற்கு இப்போதே முன்பதிவு செய்பவர்களுக்கும் இக்கட்டண உயர்வு பொருந்தும். இவ்வாறு அப்சல் கூறினார்.

அரசு பஸ்களில் கட்டண உயர்வு இல்லை : ஆம்னி பஸ்களில் பயணக் கட்டணம் உயர்ந்துள்ள நிலையில், அரசு பஸ்களில் பயணக் கட்டணம் விலை உயர்வு இல்லை என்று போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

இது குறித்து அவர் கூறும்போது, "மத்திய அரசு டீசல் விலையில் மூன்று ரூபாய் அதிகரித்துள்ளது. ஏற்கனவே, பொதுமக்கள் விலைவாசி உயர்வால் அவதிப்படும் நிலையில், அரசு பஸ்களில் பயண கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது' என்றார்

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.