அதிரையிலிருந்து பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதியில் முஸ்லிம் MLA சாத்தியமா? என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக எழுதப்பட்டது.
தற்போதுள்ள அரசியல் நிலவரப்படி நம்மவர்கள் கொஞ்சம் கவனம் செலுத்தினால் பட்டுக்கோட்டை தொகுதியில் முஸ்லிம் M.L.A வுக்கு வாய்ப்பு உள்ளதாகக் கருதுகிறேன்.
1) அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் (தற்போதைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது) பட்டுக்கோட்டை தொகுதியின் பெயர் இடம்பெறச்வில்லை. ஏனெனில் அதிமுக கூட்டணியில் மதிமுக தொடரும் பட்சத்தில் அக்கட்சிக்காக விட்டுக்கொடுக்கப்பட்டிருக்கும்.
2) கூட்டணியில் எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கப்படாத காரணத்தால், தற்போதைய நிலவரப்படி மதிமுக 2011 சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.
3) கடந்த தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிட்டு இரண்டாம் இடம்பெற்ற திரு.சு.விசுவநாதன் சென்றவருடம் காலமானதைத் தொடர்ந்து,பட்டுக்கோட்டையில் மதிமுக போட்டியிட்டாலும் வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகத் தெரியவில்லை.
3) திமுக-காங்கிரஸ் ஒரேகூட்டணியிலிருப்பதால் மீண்டும் பட்டுக்கோட்டை காங்கிரஸுக்கே ஒதுக்கப்படும் என்பதும் உறுதியாகத் தெரிகிறது.
4) கடந்த தேர்தலில் புதிதாகக் களமிறங்கிய தேமுதிக வேட்பாளர் மூன்றாம் இடம் பெற்றிருந்தார். தேமுதிக தற்போது அதிமுக கூட்டணியிலிருப்பதால், பட்டுக்கோட்டை தொகுதியில் தேமுதிக போட்டியிட வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை.
5) தொகுதி நிலவரம், கட்சிகளின் அணுமுறைகளைப் பார்க்கும்போது காங்கிரஸ் தவிர வேறு பெரிய கட்சிகள் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பில்லை என்றாலும் அதிமுக தொகுதிகளை மறுபரிசீலனை செய்யும்பட்சத்தில் பட்டுக்கோட்டை தொகுதியில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு போட்டியிடக்கூடும் சாத்தியம் உள்ளது.
6) சிட்டிங் MLA, N.ரங்கராஜன்மீது சொல்லிக்கொள்ளும்படியான குற்றச்சாட்டு/அதிருப்திகள் ஏதும் இல்லை என்றாலும் அதிராம்பட்டினம் பகுதியில் அல்-அமீன் பள்ளி,காலனி வழக்குகள்,அகல ரயில் பாதைபோன்ற நீண்டகால பொதுவிசயங்களில் இப்பகுதி மக்களுக்குச் சாதகமாகவோ அல்லது தீர்த்து வைக்கவோ நடவடிக்கை எதையும் செய்யவில்லை என்ற குறைகள் உள்ளன.
7) திமுக-அதிமுக கட்சிகளின் கோட்டையாக இருந்த பட்டுக்கோட்டை கூட்டணி காரணமாக காங்கிரஸுக்குப் போயிருப்பதால் பல ஆண்டுகளாக திமுக-அதிமுக ஆகிய இருகட்சியினரும் சோர்வடைந்துள்ளனர்.
8) காங்கிரஸுக்குப் பக்க பலமாக இருந்த அதிரை காங்கிரஸ் பிரமுகர்கள் M.M.S.அபுல் ஹசன், M.M.S. அப்துல் வஹாப் (சாச்சா) ஆகியோரது மறைவு,காங்கிரஸுக்கு இத்தொகுதியில் மிகுந்த பின்னடைவு என்பதையும் மறுக்க முடியாது.
9) இதுவரை நடந்த தேர்தல்களில் திமுக,அதிமுக,காங்கிரஸ் என்று மாறிமாறி நமது வாக்குகளை வழங்கி வந்தாலும் மேற்கண்ட எந்தக்கட்சியுமே இத்தொகுதியில் முஸ்லிம் வேட்பாளரை மருந்துக்குக்கூட நிறுத்தவில்லை.
10) அதிராம்பட்டினம், மதுக்கூர், பட்டுக்கோட்டை முஸ்லிம்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறும் வேட்பாளரே வெற்றிபெற முடியும்.
11) தற்போது அதிமுக கூட்டணியில் மதிமுக இடம்பெறவில்லை என்பதோடு 2011 தேர்தலிலும் போட்டியிடவில்லை. அதிமுகவின் பட்டியலிலும் பட்டுக்கோட்டை இடம்பெறவில்லை.
12) திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு மாற்றாக பட்டுகோட்டை தொகுதியை மனிதநேய மக்கள் கட்சிக்கு அதிமுக ஒதுக்கும்பட்சத்தில்வெற்றிவாய்ப்புள்ள ஒரு தொகுதி அதிமுகவுக்கு நிச்சயம் என்பதோடு, முஸ்லிம்களுக்கு அதிமுக மற்றும் கூட்டணியில் மிகக்குறைவான தொகுதிகளே ஒதுக்கப்பட்டிருப்பதால் அதிமுக தலைமைமீது அதிருப்தி கொண்டுள்ள சொற்ப முஸ்லிம்களின் முழு ஆதரவும் தொகுதியளவிலும் மாநில அளவிலும் அதிமுகவுக்கு ஆதரவாக அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.
இவற்றைக் கவனத்தில்கொண்டு, மனிதநேய மக்கள் கட்சி அதிமுக தலைமையிடம் காய் நகர்த்தினால் இன்ஷா அல்லாஹ், பட்டுக்கோட்டை தொகுதியில் முதன்முறையாக முஸ்லிம் வேட்பாளரைப்பெற்ற பெருமை அதிமுக மற்றும் மமக கட்சிகளுக்குக் கிடைக்கும்.
சம்பந்தப்பட்ட கட்சிகள் இதைக் கவனத்தில் கொள்வார்களா?
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.