அதிமுக தன்னிச்சையாக பட்டியல் வெளியிட்டது : தேமுதிக, கம்யூனிஸ்ட் அதிர்ச்சி!
சென்னை : சட்டப் பேரவை தேர்தலில் 160 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. அந்த தொகுதிகள் எவை என்பதையும், அவற்றுக்கான வேட்பாளர்களின் பெயர்களையும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று மாலை வெளியிட்டார். ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடுகிறார். கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்கள் நிற்கும் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது சட்ட மன்ற உறுப்பினர்களாக இருக்கும் பெரும்பாலானவர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பளிக்கவில்லை.
வைகோ தலைமையிலான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சிக்கு அதிமுக கூட்டணியில் இடமில்லை என்பதை இந்த பட்டியல் மூலம் அறிய முடிகிறது. கடந்த தேர்தலில் இருந்து தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இருந்துவரும் மதிமுக, சென்ற முறை போட்டியிட்ட 35 தொகுதிகளை தனக்கு வழங்குமாறு கேட்டிருந்தது. போட்டியிட்ட தொகுதிகள் முக்கியமல்ல, ஜெயித்த தொகுதிகள் எத்தனை என்பதுதான் முக்கியம் என அதிமுக தரப்பில் கூறப்பட்டது.
35 இடங்களில் நின்றாலும் 6 இடங்களில் மட்டுமே மதிமுக ஜெயிக்க முடிந்தது. இதே போல கம்யூனிச்ட் கட்சிகளுக்கு அவர்கள் ஜெயித்த இடங்களுக்கு மேல் கூடுதலாக 3 இடங்கள் ஒதுக்கியது போல மதிமுகவுக்கும் 3 போட்டுக் கொடுத்து 9 தொகுதிகள் தருவதாக அதிமுக கூறியது. அவ்வளவு குறைவான தொகுதிகளை ஏற்பது தங்கள் தன்மானத்துக்கு இழுக்கு என வைகோ நினைத்ததால், கூட்டணியில் நீடிப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்ய உயர்நிலை குழுவை கூட்டியுள்ளார். இதை ஜெயலலிதா ரசிக்கவில்லை. எனவே மதிமுகவை கழற்றிவிட தீர்மானித்தார்.
கூட்டணியில் உள்ள தங்களுடன் ஆலோசனை நடத்தாமலும் தங்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்யாமலும் அதிமுக தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டுள்ளதால் அதிமுக கூட்டணியில் உள்ள இதர கட்சிகளும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளன. தாங்கள் கேட்டிருந்த தொகுதிகளுக்கும் சேர்த்து அதிமுக வேட்பாளர்களை அறிவித்திருப் பதாக அவற்றின் தலைவர்கள் கூறுகின்றனர். தங்களை வெளியேற்றுவதற்காகவே இப்படி ஒருதலைப் பட்சமாக அதிமுக செயல்படுவதாக அவர்கள் சந்தேகிக்கின்றனர். இந்த பின்ன ணியில், அதிமுக கூட்டணியில் நீடிப்பதா வேண்டாமா என்பதை முடிவு செய்ய அக்கட்சிகள் சென்னையில் இன்று அவசர ஆலோசனை நடத்துகின்றன. (தனித்தனி தேர்தல் செய்திகள் உள்ளே)
ஸ்ரீரங்கத்தில் ஜெயலலிதா போட்டி
சென்னை : அதிமுக சார்பில் போட்டியிடும் 160 வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று மாலை வெளியிட்டுள்ளார். அவர் ஸ்ரீரங்கத்தில் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் மதிமுகவை தவிர இதர கூட்டணிக் கட்சிகளுக்கு 74 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மீதமுள்ள 160 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுகவில் உள்ள முன்னணித் தலைவர்கள் பலருக்கும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதேநேரத்தில் அதிமுகவில் தற்போது எம்எல்ஏக்களாக உள்ள 26 பேருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ஏற்கனவே 61 பேர் எம்எல்ஏக்களாக உள்ளனர். அதில் 4 பேர் திமுகவுக்குச் சென்று விட்டனர். மதுரையைச் சேர்ந்த எம்எல்ஏ சண்முகம் அதிருப்தியில், கட்சியில் இருந்து ஒதுங்கியிருந்தார். பின் அவர் மரணமடைந்தார். அதனால், மீதம் 56 பேர் இருந்தனர். அதில் 30 பேருக்கு சீட் வழங்கப்படவில்லை.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.