அ.தி.மு.க கூட்டணி கட்சிகள் கொந்தளிப்பு விஜயகாந்த் தலைமையேற்க அழைப்பு
சென்னை : கூட்டணி கட்சிகளை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக அதிமுக தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியலை ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து, அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் கொந்தளித்துள்ளன. கூட்டணியில் இருந்து வெளியேறி 3வது அணி அமைப்பது குறித்து ஆலோசித்து வருகின்றன. இந்த அணிக்கு விஜய்காந்த் தலைமையேற்க அழைப்பு விடுத்துள்ளன.
கூட்டணி கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியதை தொடர்ந்து பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா தன் பிரசார சுற்றுப்பயணத்தை திடீரென ரத்து செய்து விட்டார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், பார்வர்டு பிளாக், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜெயலலிதா நேற்று முன்தினம் இரவு கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் எவை, எவை என்று அறிவிக்காமல், அதிமுக 160 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும், அந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களையும் அறிவித்தார். இது தேமுதிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காரணம், விஜயகாந்த் விரும்பி கேட்ட பல தொகுதிகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியில் தற்போது எம்எல்ஏக்களாக உள்ள பல தொகுதிகளையும் ஜெயலலிதா அதிமுகவுக்கு எடுத்துக் கொண்டார்.
இதையடுத்து, நேற்று அதிமுக கூட்டணி கட்சியின் தலைவர்கள் தனித்தனியே கூடி ஆலோசனை நடத்தினர். அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறி 3வது அணி அமைக்கலாமா? என்பது குறித்து ஆலோசனை நடத்தினர். குறிப்பாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 8 மணியில் இருந்தே வெளியூரில் இருந்து தொண்டர்கள் வரத் தொடங்கினர். மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் விஜயகாந்தின் அவசர அழைப்பை ஏற்று சென்னை வந்தனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலை 10.40 மணிக்கு கட்சி அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அங்கு கூடிய தொண்டர்கள், ஜெயலலிதாவுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதையடுத்து மாநில நிர்வாகிகளுடன் அதிமுக கூட்டணியில் நீடிப்பதா, தனித்து போட்டியிடுவதா என்பது குறித்து விஜயகாந்த், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் காலை 12.10 மணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன், மகேந்திரன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவன தலைவர் டாக்டர் சேதுராமன், பார்வர்டு பிளாக் மாநில தலைவர் கதிரவன் ஆகியோர் தேமுதிக தலைமை அலுவலகம் வந்தனர்.
இவர்கள் அனைவரும் விஜயகாந்துடன் 1 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். மதியம் 1.10 மணிக்கு ஆலோசனை முடிந்து வெளியே வந்த இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன் நிருபர்களிடம் கூறும்போது, “மத்திய, மாநில அரசின் தவறான பொருளாதார கொள்கையை எதிர்த்துதான் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகிறோம். எங்கள் நடவடிக்கை அதை நோக்கித்தான் இருக்கும். மீண்டும் சந்தித்து பேசுவோம்’’ என்றார்.
விஜயகாந்த் தலைமையில் 3வது அணி அமைப்பது குறித்து பேசினீர்களா? என்று நிருபர்கள் கேட்டபோது, ‘மீண்டும் சந்தித்து பேசும்போது முடிவு தெரியும்’ என்றார். அதிமுகவுடன் சமரசம் செய்து கொள்வீர்களா என்று கேட்டபோது, “நீங்கள் வேண்டுமென்றால் சமரசம் செய்து கொள்ளுங்கள். அவர்களுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை’’ என்றார்.
இதையடுத்து புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி விஜயகாந்தை மதியம் 1.30 மணிக்கு சந்தித்தார். பின்னர் நிருபர்களிடம் கூறும்போது, “விஜயகாந்த் தலைமையில் 3வது அணி அமைந்தால் அதற்கு முழு ஆதரவு தருவதாக உறுதி அளித்துள்ளேன். கம்யூனிஸ்டு கட்சிகளும் விஜயகாந்த் தலைமையில் 3வது அணி அமைய ஆதரவு தெரிவித்துள்ளது’’ என்றார்.
பிற்பகல் 2.40 மணிக்கு தேமுதிக மாநில நிர்வாகிகளிடம் ஆலோசனை முடித்து வெளியே வந்த விஜயகாந்தை நிருபர்கள், அதிமுக சமரசத்துக்கு வந்தால் பேசுவீர்களா? உங்கள் தலைமையில் 3வது அணி அமையுமா? என்று கேட்டனர். அதற்கு பதில் அளித்த விஜயகாந்த், “எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கிறோம். எந்த முடிவாக இருந்தாலும் நாளைக்குத்தான் (இன்று) சொல்வேன். தயவுசெய்து அவசரப்படாதீர்கள்’’ என்றார்.
நேற்று மாலையில் அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி நிறுவனர் வி.எஸ்.ஐசக் மற்றும் ஜான்பாண்டியன் உள்ளிட்ட பலர் விஜயகாந்த் தலைமையில் 3வது அணி அமைக்க வேண்டும் என்றும், அதற்கு தங்கள் ஆதரவை தருவதாக உறுதி அளித்து சென்றனர். தேமுதிக தொண்டர்களும், தானாக அழிவை தேடிக்கொண்ட ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைக்க வேண்டாம். 3வது அணி அமைத்து போட்டியிட்டு தன்மானம் காப்போம் என்று தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன் ஆகியோர் நேற்று இரவு 7.30 மணிக்கு ஒன்றாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்குச் சென்றனர். அங்கு விஜயகாந்த், பன்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோருடன் பேச்சுநடத்தினர். 15 நிமிடத்தில் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் தலைவர் சேதுராமன், பார்வர்டு பிளாக் தலைவர் கதிரவன் ஆகியோர் வந்து பேச்சில் கலந்து கொண்டனர்.
ஜெயலலிதா கொடும்பாவி எரிப்பு
கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் முன் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து இருந்தனர். இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மதியம் 12.10 மணிக்கு திடீரென தேமுதிக கொடியுடன் கோஷம் எழுப்பி வந்த சில இளைஞர்கள் ஜெயலலிதா கொடும்பாவியை தேமுதிக தலைமை அலுவலகம் முன் தீயிட்டு கொளுத்தி, செருப்பால் அடித்து, ஜெயலலிதாவுக்கு எதிராக கோஷம் போட்டு தொண்டர்கள் அதிருப்தியை வெளியிட்டனர். சுமார் 15 நிமிடம் கழித்து ஜெயலலிதா கொடும்பாவி எரிந்த நிலையில் கிடந்த உருவபொம்மைக்கு சிலர் பால் ஊற்றி ஒழிக கோஷம் எழுப்பினர்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.