அ.தி.மு.க., கோட்டையாக தொடருமா தூத்துக்குடி?
தூத்துக்குடி: பெரியதுறைமுகம், அனல்மின் நிலையம், கனநீர் ஆலை, ஸ்பிக் உர ஆலை, பல தனியார் ஆலைகளைக் கொண்ட தொகுதி. தி.மு.க., எம்.எல்.ஏ., கீதாஜீவன், சமூகநலத்துறை அமைச்சராகவும் உள்ளார். இம்முறையும் இவருக்கே வாய்ப்பு கிடைக்குமென தெரிகிறது.
"தினமும் குடிநீர் சப்ளை செய்யப்படும்; கட்டமைப்பை மேம்படுத்தி, குட்டி சிங்கப்பூராக மாற்றுவேன்' என, வாக்குறுதியளித்தார். தற்போது, ஆறு நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. தேர்தலையொட்டி அவசர அவசரமாக சாலைகள் போடப்பட்டன.
மாநகராட்சியாக்கப்பட்டும், அதற்கு ஏற்றாற்போல் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படாதது ஏமாற்றமே. கடந்த கால தேர்தல்களில், தி.மு.க., - அ.தி.மு.க., மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன. இம்முறை, கீதாஜீவன் கடுமையாக தேர்தல் பணி செய்ய வேண்டியிருக்கும்.
ஒட்டப்பிடாரம் (தனி): இத்தொகுதி எம்.எல்.ஏ., ஆக, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த மோகன் உள்ளார். "வறட்சியான இப்பகுதிக்கு தொழிற்சாலை கொண்டுவந்து, மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பேன்' என, கடந்த தேர்தலில் மோகன் வாக்குறுதி அளித்தார். ஆனால், தி.மு.க., அரசு அதற்கு ஒத்துழைக்கவில்லை என, இவரது தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணிகள் சமபலத்தில் உள்ளன.
கோவில்பட்டி: தொழிலாளர்கள் நிறைந்த இங்கு, எம்.எல்.ஏ., ஆக இருப்பவர் எல்.ராதாகிருஷ்ணன். கடந்த தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட இவர், "குடிநீர் பிரச்னையை தீர்ப்பேன்' எனக் கூறி வெற்றி பெற்றார். மத்திய அமைச்சர் அழகிரி மூலம் முதல்வர் கருணாநிதியைச் சந்தித்ததால், அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டார். குடிநீர் பிரச்னை தீரவே முதல்வரிடம் மனு கொடுத்ததாக தெரிவித்தார்; ஆனால், இப்பிரச்னை தீர்ந்தபாடில்லை.
தற்போது, கட்சி சார்பில்லா எம்.எல்.ஏ.,ஆக, தி.மு.க., கரை வேட்டியுடன் வலம் வருகிறார். தி.மு.க., சார்பில் இவர் போட்டியிட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. கம்யூனிஸ்ட்களுக்கு சாதகமான இத்தொகுதியை, அக்கட்சிக்கு விட்டுக் கொடுக்க அ.தி.மு.க., தயாராகவுள்ளது.
விளாத்திகுளம்: அ.தி.மு.க.,வைச் சேர்ந்த சின்னப்பன் எம்.எல்.ஏ.,ஆக உள்ளார். கடந்த தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி, விளாத்திகுளம் வைப்பாறில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், மீனவர்களுக்கு உறுதியளித்தபடி, வேம்பாரில், தூண்டில் வளைவு அமைக்கப்படவில்லை. தி.மு.க.,வை விட, அ.தி.மு.க., கூட்டணி இத்தொகுதியில் செல்வாக்கு மிக்கதாக விளங்குகிறது.
ஸ்ரீவைகுண்டம்: காங்.,கைச் சேர்ந்த சுடலையாண்டி எம்.எல்.ஏ.,ஆக உள்ளார். உறுதியளித்தபடி, வாழைக்காய் பவுடர் தயாரிப்பு நிறுவனம் கொண்டுவராதது, அணைகள், கால்வாய்களை தூர்வாராதது, ஆளுங்கட்சி கூட்டணிக்கு எதிராக உள்ளது. நெல்லை, கல்லிடைக்குறிச்சி கன்னடியன் அணைக்கட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவரால், தங்கள் விவசாயம், குடிநீருக்கு போதுமான தண்ணீர் கிடைக்காது எனக் கூறி, சுவரை அகற்ற இப்பகுதியினர் போராட்டம் நடத்தினர். காங்.,கிற்கு சாதகமான தொகுதி.
திருச்செந்தூர்: விவசாயிகள், வியாபாரிகள் நிறைந்த இத்தொகுதியின் தற்போதைய தி.மு.க., எம்.எல்.ஏ., அனிதா ராதாகிருஷ்ணன். வாக்குறுதியளித்தபடி, பல கிராமங்களில் குடிநீர்ப் பிரச்னையை முழுமையாகத் தீர்க்கவில்லை. உடன்குடி அனல்மின் நிலைய பணியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இம்முறையும் தி.மு.க., சார்பில் இவரே போட்டியிடுவார் எனத் தெரிகிறது. தொகுதியில் தனிப்பட்ட செல்வாக்கு இருந்தாலும், வியாபாரிகள் - விடுதலைச் சிறுத்தைகள் மோதல் உள்ளிட்ட சில பிரச்னைகளால், இடைத்தேர்தலைப் போல எளிதாக வெற்றி பெற முடியாத நிலை. இவருக்கு எதிராக, பலம் மிக்க வேட்பாளரை நிறுத்த, அ.தி.மு.க., கூட்டணி முடிவெடுத்துள்ளது.
கடந்த சட்டசபை பொதுத்தேர்தலில் இருந்த ஏழு தொகுதிகளில் நான்கை, அ.தி.மு.க.,வும், இரண்டை, காங்.,கும், ஒன்றை தி.மு.க.,வும் கைப்பற்றின. அ.தி.மு.க.,வின் கோட்டையாக இந்த மாவட்டம் கருதப்படுகிறது. இந்தத் தேர்தலிலும் அது தொடருமா அல்லது இக்கோட்டையை தி.மு.க., தகர்க்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
முக்கியத் தொழில் : உப்பு, விவசாயம், தீப்பெட்டி உற்பத்தி
நீண்டகால கோரிக்கைகள் : வாழைக்காய் பவுடர் தயாரிப்பு நிறுவனம், உடன்குடி அனல் மின் நிலையம், குடிநீர் பிரச்னை.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.