இறைவனின் திருப்பெயரால்....

Pages

Thursday, March 17, 2011

சட்டசபை தேர்தலில் வருகிறது மூன்றாவது அணி

சட்டசபை தேர்தலில் வருகிறது மூன்றாவது அணி
 

 


அ.தி.மு.க., அணியில் குறைந்த சீட்டுகளை ஒதுக்கும் முடிவில், எந்த மாற்றமும் ஏற்படாதபட்சத்தில், அங்கிருந்து ம.தி.மு.க., வெளியேறுவது உறுதியாகியுள்ளது. அதனால், பா.ஜ.,வுடன் கூட்டணி மலர்ந்து, மூன்றாவது அணியாக போட்டியிட வாய்ப்பு அதிகரித்துள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர பகைவரும் இல்லை' என்பது சாஸ்வதமான பழமொழி. தற்போதைய அரசியல் திருப்பங்களைப் பார்த்தால், புதிய பகைவர்கள் தோன்றுவதையும், பழைய நண்பர்கள் சேர்வதையும் தவிர்க்க முடியாது போலத் தான் தெரிகிறது.கடந்த சட்டசபைத் தேர்தலில் இருந்தே அ.தி.மு.க.,வின் உற்ற தோழமைக் கட்சியாகக் கருதப்பட்ட ம.தி.மு.க.,வுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக, அவர்கள் தரப்பில் குமுறல் எழுந்துள்ளது. ஆனால், அவர்கள் பழைய நினைப்பில் பிடிவாதம் காட்டுவதாக, அ.தி.மு.க., தரப்பில் புகார் கூறப்படுகிறது. யார் பக்கம் நியாயம் என்பது ஒரு புறம் இருந்தாலும், இதன் விளைவு என்ன என்பது தான் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., அணியில், கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட 35 தொகுதிகளை ம.தி.மு.க., கேட்டது. ஆனால், அ.தி.மு.க., தரப்பில் உறுதியான பதில் எதுவும் வரவில்லை. இதற்கிடையிலேயே, பிற கட்சிகளுக்கு ஒதுக்கீடு ஜரூராக நடந்து வந்தது.

"கூட்டணி பலமடைவது நமக்கும் நல்லது தானே' என, ஆறுதல் அடைந்திருந்த ம.தி.மு.க., மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், அ.தி.மு.க.,வின் நீண்ட அமைதியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தன. இழுபறிக்குப் பின், இடதுசாரி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு ஒரு வழியாக முடிந்தது.ம.தி.மு.க.,வைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளுக்கும் தொகுதி ஒதுக்கியாகிவிட்டது என்ற நிலையில் தான், அந்தக் கட்சிக்கு ஒற்றை இலக்கத்தில் தொகுதி ஒதுக்க அ.தி.மு.க., முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. "15 தொகுதிக்கு குறைவாகக் கொடுப்பதாக இருந்தால் பேசவே வேண்டாம்' என வைகோ தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

அதிகப்பட்சம் 10 தொகுதி வரை அ.தி.மு.க., ஒதுக்கும் என, போயஸ் தோட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், 15ல் இருந்து வைகோ இறங்கி வருவதாக இல்லை. இந்தத் தகவல்கள் ம.தி.மு.க., இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் காதுக்கு எட்டியதும், கடும் கொந்தளிப்பு எழுந்துள்ளது. தங்களை அ.தி.மு.க., அவமதிப்பதாக அவர்கள் கருதுகின்றனர். ஆனால், இருக் கட்சிகளும் இது பற்றி வெளிப்படையாகக் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் இது தொடர்பாக, சென்னையைச் சேர்ந்த, ம.தி.மு.க., இரண்டாம் கட்டத் தலைவர் ஒருவர் கூறியதாவது:
ஓட்டுப்பதிவின் போது அ.தி.மு.க., அணியில் தே.மு.தி.க.,வினர் மட்டும் தான் களத்தில் நிற்பர். சில பகுதிகளில் மட்டும் தான் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவர். ஆனால், தமிழகம் முழுவதும், அனைத்து கிளைகளிலும் ம.தி.மு.க.,வினர் உள்ளனர். இதனால், எதிரணியினரை எளிதாகச் சமாளிக்க முடியும்.ம.தி.மு.க.,வினர் இல்லையென்றால் அ.தி.மு.க., அணி நிற்கும் களத்தில், ஆள் பற்றாக்குறை ஏற்படும். ஸ்பெக்ட்ரம் ஊழல், முதல்வரின் குடும்ப ஆட்சியை விமர்சிப்பதில் வைகோவின் விமர்சனத்துக்கு நிகர் அவரே. வைகோவின் பிரசாரத்தால் அ.தி.மு.க., அணியின் பிரசார வியூகமும் பலப்படும்.

அதையும் தாண்டி, தங்கள் முடிவில் அ.தி.மு.க., உறுதியாக இருக்குமானால், இழப்பதற்கு எங்களிடம் ஒன்றும் இல்லை. கட்சி துவங்கி 17 ஆண்டுகளாக வேதனையை மட்டும் சந்தித்து வரும் எங்களுக்கு அ.தி.மு.க., அணியை விட்டு வெளியேறுவதால், புதிதாக எந்த பாதிப்பும் வந்துவிடப்போவது இல்லை.எனவே, துணிந்து முடிவெடுத்து, பா.ஜ.,வுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்க வேண்டும் என தலைவரிடம் சொன்னேன். "19ம் தேதி நடக்கவுள்ள உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்; பார்த்துக் கொள்ளலாம்' என வைகோ தெரிவித்தார்.இவ்வாறு அந்த பிரமுகர் கூறினார்.

இவர் மட்டுமின்றி, ம.தி.மு.க.,வின் பெரும்பாலான மாவட்டச் செயலர்களும் இதே கருத்தை எதிரொலிக்கின்றனர். பாரதிய ஜனதாவுடன் நீண்ட காலத் தொடர்பு உடையவர் வைகோ. 1998, 99ம் ஆண்டு லோக்சபா தேர்தல்களை பா.ஜ.,வுடன் தான் இணைந்து சந்தித்தார். பா.ஜ.,வின் அகில இந்தியத் தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி போன்றோரிடம் நேரடிப் பழக்கம் உடையவர். நாளை மறுதினம் நடக்கும் ம.தி.மு.க., உயர்மட்டக் குழுக் கூட்டத்தில், அ.தி.மு.க., அணியை விட்டு வெளியேறும் முடிவு எடுக்கப்படுமானால், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து மூன்றாவது அணியாக போட்டியிடும் வாய்ப்பு அதிகம்.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.