இறைவனின் திருப்பெயரால்....

Pages

Sunday, March 20, 2011

கடத்தலுக்கு புது டெக்னிக்: அரசியல் கட்சிகளிடம் விளையாடும் பணம்

தேர்தல் கமிஷன் "கறார்' காட்டினாலும், அரசியல் கட்சிகள் பணத்தை கடத்துவதற்கும் புதிது, புதிதாக யோசித்து களம் இறங்கி வருகின்றன.

தேர்தலில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படுவதை தடுக்க, தேர்தல் கமிஷன் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார் கொண்ட தொகுதிக்கு ஒரு பறக்கும் படை, நிழல் செலவு தணிக்கை குழு உட்பட பல்வேறு குழுக்கள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறது.அதிகாரிகளின் வாகன சோதனையில் பல கோடி ரூபாய் வரை சிக்கினாலும், இதுவரை சிக்கியதில் பெரும்பாலானவை வியாபாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் பணமாகவே உள்ளது. அரசியல்வாதிகள் மற்றும் வேட்பாளர்களின் பணம் சிக்கியதாக இல்லை.கண்காணிப்பையும் மீறி அரசியல்வாதிகள் பணத்தை கடத்தும் வழிமுறைகளை மாற்றி யோசித்து கடத்தி வருவதே காரணம். பரந்து விரிந்த தொகுதியில், ஒரு குழு அதிகாரிகள் மட்டுமே முழுமையாக கண்காணிக்க முடியாது; வழித்தடங்கள் அத்தனையும் அரசியல்வாதிகளுக்கு அத்துப்படி.வாகனங்களில், சூட்கேஸ் மற்றும் "பேக்'களில் ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் பணம் இருந்தால் மட்டுமே அதிகாரிகள் பறிமுதல் செய்வர். அரசியல்வாதிகள் தற்போது மொத்தமாக பணம் கொண்டு செல்வதில்லை.

கடந்த காலங்களில் வேட்பாளரின் பணத்தை கையாள்வதற்கு என தனியாக ஒருவர் நியமிக்கப்பட்டு, அவர் மொத்தமாக பணத்தை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு பகுதிக்கும் சென்று வினியோகித்தனர். ஆனால், தற்போது பணம் இருக்கும் இடத்துக்கு அந்தந்த பகுதி நிர்வாகிகள் வரவழைக்கப்படுகின்றனர்.ஒரு வாகனத்தில் 10 பேருக்கு மேல் வருகின்றனர். ஆளுக்கு ஒருவரிடம் ஒரு லட்சம் ரூபாய் வரை பணம் இருக்கும். அதுவும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள், பிரித்து
பாக்கெட்களில் வைத்து கொண்டு வரப்படுகிறது. ஒரு வாகனம் சோதனையை தாண்டினால் கடத்தப்படும் பணம் 10 லட்சம் ரூபாய். 10 வாகனங்கள் கடந்தால் ஒரு கோடி ரூபாய். ஒவ்வொரு கிராமத்திற்கும் செல்ல வேண்டிய வாகனங்கள் முன்னதாகவே தயார் செய்யப்பட்டு, அந்த பகுதி நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது.

வரும் நிர்வாகி கொண்டு செல்லும் பணத்திற்கு ஏற்ப தொண்டர்களை அழைத்து வந்தால் போதும். தலைமையகத்தில் வாங்கும் பணத்தை அங்கேயே பிரித்து, ஆளுக்கு கொஞ்சம் பாக்கெட்களில் வைத்துக்கொண்டு காரில் ஏறிக்கிளம்பி விடுகின்றனர். தற்போது முக்கிய அரசியல் கட்சிகள் , முதல் கட்ட தேர்தல் பணிக்காக "பூத்'திற்கு 10 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை இம்முறையில் வினியோகம் செய்து விட்டன.இந்த வாகனத்தில் கொடியும் இருக்காது; கட்சி கரை வேட்டியும் இருக்காது. சோதனைக்கு வாகனம் நிறுத்தப்பட்டாலும், வாகனத்தில் எங்கும் பணம் இருக்காது. அமர்ந்திருப்பவர்கள் பாக்கெட்களில்தான் பணம் இருக்கும். அதிகாரிகளும் சூட்கேஸ், பேக் உள்ளதா என ஆய்வு செய்துவிட்டு அனுப்பி விடுகின்றனர்.வாகனத்தில் கொடியும், பிரசார வாசகங்களும் இல்லாததால் வாகனமும் தேர்தல் செலவின கணக்கில் வராது. இவ்வாறு நூதன முறையில் ஒவ்வொரு தொகுதியிலும் முதல்கட்ட செலவுகளுக்கான பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. தற்போது பணம் கடத்துவதற்காகவே வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. அடுத்தகட்டமாக மக்களுக்கு பணம் வழங்கவும் இதேமுறையில் கூடுதல் வாகனங்கள் இயக்கினால் போதும் என திட்டமிட்டுள்ளனர். அரசியல்வாதிகளுக்கு இதில் உள்ள ஒரே பிரச்னை அழைத்து வரும் ஆட்கள் இறங்கியதும் மாயமாகிவிடக்கூடாது, அவ்வளவுதான்!

மதுரையில் இரவில் வீடு தேடி வருது பணம் : மதுரையில் வாக்காளர்களின் மொபைல் போன், வங்கி கணக்கு எண் போன்ற விபரங்களை தி.மு.க.,வினர் சேகரிப்பதாக போலீசார் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். நேற்று கீழவைத்தியநாதபுரத்தில் முன்னாள் பெண் கவுன்சிலர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கணக்கெடுத்ததாக கூறி, அ.தி.மு.க.,வினர் ஒன்றரை மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர்.

தேர்தல் கமிஷனின் கடும் நடவடிக்கைகளால், வாக்காளர்களுக்கு நேரடியாக பணம் கொடுக்க கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன. "பூத் சிலிப்' கொடுப்பதுபோல் பணம் பட்டுவாடா செய்வதற்கும் தேர்தல் கமிஷன் வாய்ப்பு அளிக்கவில்லை. இதனால் வீடு வீடாக சென்று, வாக்காளர்களின் மொபைல் போன், வங்கி கணக்கு போன்ற விபரங்களை சிலர் சேகரிக்கின்றனர். இதுதொடர்பாக, தி.மு.க.,வைச் சேர்ந்த சிலரை ஜெய்ஹிந்த்புரம், தெப்பக்குளம், எஸ்.எஸ்.காலனி போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில், நேற்று முன் தினம் கீழவைத்தியநாதபுரத்தில் இரவு 11 மணிக்கு மின்தடையை ஏற்படுத்தி, முன்னாள் பெண் கவுன்சிலர் மற்றும் அவரது ஆதரவாளர்கள், வீடு வீடாக சென்று "கணக்கெடுத்தாகவும்', அவரது வீட்டை சோதனையிட வேண்டும் என்றும் வலியுறுத்தி அ.தி.மு.க.,வினர் நேற்று காலை 10 மணி முதல் 11.30 மணி வரை தத்தநேரி மெயின் ரோட்டில் மறியல் செய்தனர்.

அவர்கள் கூறுகையில், ""பணம், இலவச பொருட்கள் கொடுப்பதாக போலீசிற்கு தகவல் தெரிவித்தபோது, பெயரளவிற்கு விசாரித்துவிட்டு சென்றுவிட்டனர். இதை பயன்படுத்தி மீண்டும் இரவு ஒரு மணிக்கு மின்தடை செய்து பணம் கொடுத்தனர். தேர்தல் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து, வீடுகளை சோதனையிட கூறினோம். அவர்களோ "தங்களுக்கு "பவர்' இல்லை; கலெக்டர்தான் முடிவு செய்ய வேண்டும்' என்றுக்கூறி சென்றுவிட்டனர். இதை பயன்படுத்தி, இலவச பொருட்களை கடத்திவிட்டனர்,'' என்றனர்.இவர்களை போலீசார் சமரசம் செய்து கொண்டிருந்தபோது, தி.மு.க., நிர்வாகிகள் அங்கு வந்தனர். வீடுகளில் சோதனை செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க.,வினரை போலீசார் சமரசம் செய்து அனுப்பினர். "கணக்கெடுப்பு', பணம் பட்டுவாடா குறித்து நேற்று மாலை வரை போலீசில் புகார் செய்யப்படவில்லை.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.