சென்னை, பிப்.17-
தமிழகம்- புதுச்சேரியில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றிக்கு ம.தி.மு.க. பாடுபடும் என்று பொதுக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ம.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் அண்ணாநகர் விஜயஸ்ரீமகாலில் இன்று காலை நடந்தது. கூட்டத்துக்கு அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்கினார்.
பொதுச்செயலாளர் வைகோ, பொருளாளர் டாக்டர் மாசிலாமணி, துணை பொதுச்செயலாளர்கள் நாசரேத் துரை, பாலகிருஷ்ணன், மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் வேளச்சேரி மணிமாறன், ஜீவன், மனோகரன், பாலவாக்கம் சோமு, செங்குட்டுவன் உள்பட அனைத்து மாவட்ட செயலாளர்கள் அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர்கள், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், உயர் நிலை குழு உறுப்பினர்கள், தணிக்கை குழு உறுப்பினர்கள் செய்தி தொடர்பாளர் நன்மாறன் உள்பட சுமார் 1200 பேர் பங்கேற்றனர்.
கூட்டம் தொடங்கியதும் கட்சியின் தலைமை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதன்படி பொதுச் செயலாளராக வைகோ 4-வது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அப்போது கூட்டத்தில் அனைவரும் கைதட்டி வரவேற்றனர். இதேபோல் அனைத்து நிர்வாகிகளும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தமிழகத்தின் வாழ்வா தாரமான காவிரி ஆறு, முல்லை பெரியாறு, பாம்பாறு, பாலாறு பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை காக்கும் கடமையில் இருந்து தி.மு.க. தவறி விட்டது. இதனால் விவசாயிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். மின்வெட்டால் தொழிற் சாலைகள் மூடப்பட்டு பலர் வேலை இழந்துள்ளனர். விலைவாசி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை தீவில் இனப்படுகொலை செய்த சிங்கள கடற்படையினர் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து தமிழக மீனவர்களை தாக்குவதும், படுகொலை செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை 500 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்களை காப்பாற்ற மத்திய- மாநில அரசுகள் தவறி விட்டன. 2ஜி ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகளில் பயன் அடைந்த பயனாளிகள் யார்? என்ற கேள்வி விசுவரூபம் எடுத்துள்ளது.நடைபெற இருக்கிற சட்டமன்ற தேர்தலில் தமிழகம்- புதுச்சேரியில் ம.தி.மு.க. அங்கம் வகிக்கும் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியை மகத்தான வெற்றி பெற செய்திடவும், அதற்காக முழு வேகத்துடன் பாடுபடவும் தீர்மானிக்கிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேறின.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.