இறைவனின் திருப்பெயரால்....

Pages

Wednesday, February 16, 2011

சமுதாய கண்மணிகளே! தேர்தல் நிதி தாரிர்


சமுதாய கண்மணிகளே...! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
நீங்கள் எல்லோரும் பெரும் மகிழ்ச்சியில் இருப்பீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும்.

எழுச்சியும், மகிழ்ச்சியும் பூத்துக் குலுங்கிய பொதுக்குழுவில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நாம் எல்லோரும் ஒன்றுகூடி, ஒருவரையொருவர் சந்தித்து, ஆரத்தழுவி, நலம் விசாரித்து சிலமணி நேரங்கள் ஒரு குடும்பமாய் கூடி நின்ற அந்த தருணங்களை விவரிக்காமல் இருக்க முடியாது!


அல்ஹம்துலில்லாஹ்...

நமது பொதுக்குழு என்பது நம் பேரியக்கத்தின் திருவிழாவாகும். நமது பலம் பன்மடங்குகளாகப் பெருகி, ஆயிரக்கணக்கான புதிய கிளைகள் உருவாகியிருப்பதால் இப்போதெல்லாம் நமது பொதுக்குழுக்கேற்ற மண்டபங்கள் எங்கும் அமையப் பெறுவதில்லை.

அதனாலேயே திடல்களைக் கண்டறிந்து அங்கே பந்தலை அமைத்து பொதுக்குழுவை நடத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இதனால் பெரும் செலவுகள் ஏற்படுகிறது என்றாலும், உங்களையெல்லாம் ஒன்றாக சந்திக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படுகிறதே எனும்போது, சிரமங்களும் செலவுகளும் ஒரு பொருட்டாகத் தெரிவதில்லை.

பொதுக்குழுவில் எங்களுக்கெல்லாம் அனுமதி இல்லையா? என ஏராளமான சகோதரர்கள் எழுப்பிய ஏக்கம் நிறைந்த கேள்விகளும், எங்களை இனிய சங்கடங்களுக்கு உள்ளாக்கியதையும் இந்நேரத்தில் நினைவுகூர வேண்டியிருக் கிறது.

அவர்களுக்கெல்லாம் ‘அனுமதி இல்லை’ என்ற இரண்டு வார்த்தைகளை எப்படிச் சொல்வது எனத் தெரியாமல் கனத்த இதயத்தோடு மறுத்தோம்.

எல்லோரும் நமது கொள்கை தங்கங்கள்தான். இயக்கத்தில் முழுநேரமாய் பணியாற்றியவர்கள்தான். மறுக்க முடியாது. ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளையும், மாவட்ட அளவில் நியமனம் செய்யப்பட்டவர்களையும் மட்டுமே கொண்ட பொதுக்குழுவின் விதிகளை தளர்த்தினால், அதனால் ஏற்படும் நிர்வாக சிக்கல்கள் எப்படியெல்லாம் இருக்கும் என்பதையும் தயவு கூர்ந்து எண்ணிப் பார்க்க வேண்டும்.

சிறப்பு அழைப்பாளர்களாகவாவது அனுமதியளியுங்கள் என்றும் பலர் வேண்டுகோள் விடுத்தனர். அதற்கும் ஒரு எண்ணிக்கை வரையறை உண்டு என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே, பொதுக்குழுவுக்கு வரமுடியாத, அல்லது அனுமதி மறுக்கப்பட்ட நமது தங்க மனமும், கொள்கை உரமும் கொண்ட சகோதரர்கள் இதையெல்லாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இனி அடுத்த பொதுக் குழுவில் பங்கேற்கும் வகையில், நிர்வாக ரீதியாக இடம்பெறும் வகையில் தங்களின் இயக்க ஈடுபாட்டை இன்னும் கூடுதலாக செய்திட வேண்டும் என இந்நேரத்தில் மிகுந்த பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

கண்மணிகளே...!

நாடே எதிர்பார்க்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல் மே மாதம் நடைபெறவிருக்கிறது. மார்ச் 1 முதல் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லா கட்சிகளும் தேர்தலுக்கு தங்களைத் தயார்படுத்தி வருகின்றன. நமது மனிதநேய மக்கள் கட்சி மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இத்தருணம் எதிர்பார்ப்புகள் நிறைந்ததாக இருக்கிறது.

சமுதாய சிந்தனையாளர்கள், சகோதர அமைப்புகள், உலமாக்கள், ஜமாஅத்தார்கள் என பலரும் நமது சட்டமன்ற நுழைவை பெரும் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். எப்படியும் இம்முறை நமது பிரதிநிதிகள் சட்டமன்ற உறுப்பினர்களாக நுழைந்துவிட வேண்டும் என பிரார்த்தித்த வண்ணம் உள்ளனர்.

பலர் நமது கூட்டணி நிலைப்பாட்டை நேரடியாக ஆதரிக்கிறார்கள். இன்னும் பலர், நீங்கள் எந்தக் கூட்டணியில் இருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல; எப்படியாவது உங்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் வெற்றிவாகை சூடுங்கள் என வாழ்த்துகிறார்கள்.

நாம் முன்பே எடுத்த தேர்தல் நிலைப் பாடு, நமது பிரச்சாரப் பணிகளை எளிமையாக்கியிருக்கிறது என்பதை உணர்கி றோம். வெளிநாடுகளில் வாழும் நமது சகோதரர்களும் இதுபோன்ற அனுபவத்தையே செய்திகளாக நமக்குத் தந்தவண்ணம் உள்ளனர்.

கண்மணிகளே...!

நம்மைத் தோற்கடிக்க வீறுகொண்டு வேலை செய்வோம் என ஒரு சிறு கூட்டம் சபதம் செய்திருப்பதாக அறிகிறோம். ஒரு சிறு கூட்டம் என்பதைவிட, அவர்களை வழிநடத்தும் ஒருவரின் நிலைப்பாடுதான் அது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

நம்மைத் தோற்கடிக்க வேண்டும் என பாஜக, இந்துமுன்னணி போன்றவர்கள் சபதம் ஏற்றால் அது எதிர்பார்க்கக் கூடியது. ஆனால், தங்களையும் ‘கலிமா’ சொன்னவர்கள் என கூறிக்கொள்பவர்கள் இத்தகைய நிலைப் பாடுகளை மேற்கொள்வதுதான் பரிதாபத்துக் குரியதாக இருக்கிறது.

அவர்கள் நம்மை எதிர்ப்பதே நமக்கு கூடுதல் பலம் என்பதை பலரும் சுட்டிக் காட்டுகிறார்கள்.

இவர்களது நிலைப்பாட்டை நமது சமுதாய மக்கள் நிராகரிக்கப் போவது உறுதி என்பதை இன்ஷாஅல்லாஹ் தேர்தல் களம் உணர்த்தப் போகிறது. தூய எண்ணத்தோடு களமாடும் நமக்கு அல்லாஹ்வின் பேருதவி இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதற்காக ஒவ்வொரு தொழுகையிலும் அனைவரும் பிரார்த்திக்க வேண்டும்.

கண்மணிகளே...!

தேர்தலில் நாம் எத்தனைத் தொகுதிகளை பெறப் போகிறோம்? என அனைவரும் கேட்கிறார்கள். தொகுதிகளின் எண்ணிக்கைகள் குறித்து அதிமுக தலைமையுடன் பேசி வருகிறோம். தொகுதி எண்ணிக்கைகளில் ஏற்றம், இறக்கம் இருக்கலாம். நாம் நினைத்த தைவிட அதிகமாகவும் கிடைக்கலாம், குறைவாக வும் கிடைக்கலாம். நமது கூட்டணிக்கு பலம் வாய்ந்த புதிய கட்சிகள் எல்லாம் வரும் நிலையில் நாம் நிதானமாக செயல்பட வேண்டியுள்ளது. அரசியல் ராஜதந்திர த்துடன் நாம் அணுக வேண்டியுள்ளது.

கண்மணிகளே...!

நாம் தேர்ந்தெடுத்து வேலை செய்து கொண்டிருக்கும் சில தொகுதிகளின் பெயர்களை பொதுக்குழுவில் அறிவித்தோம். அங்கெல்லாம் தொகுதி எழுச்சிப் பொதுக்கூட்டங்கள், கொடியேற்று நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, பூத் கமிட்டி அமைத்தல், சுவர்களை முன்பதிவு செய்தல் என வேலைகள் புயல் வேகத்தில் நடைபெற்று வருகின்றன.

இச்செய்திகள் எல்லாம் நமக்கு மகிழ்ச்சியளிக்கின்றன. ஆனால், ஒன்றை மட்டும் நினைக்கும் போது விழிகள் உறங்க மறுக்கிறது. நுரையீரல் பெருமூச்சை வெளிப்படுத்துகிறது. இதயம் பதற்றமடைகிறது. அது என்ன...? தேர்தல் செலவுக்கு என்ன செய்யப் போகிறோம்? என்பதுதான் அது. தலைமை நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை எழுப்பப்படும் கவலைக்குரிய கேள்வி இது. நேர்மையாளர்களுக்கு எப்போதும் பொருளாதாரப் பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கும் என்பது நமது அனுபவ உண்மை.

திருமங்கலம் இடைத்தேர்தலில் திமுகவினர் தொடங்கிவைத்த பணநாயக  விளையாட்டு ஜனநாயகத்தை உடைத்திருக்கிறது. வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தால்தான் ஓட்டு என்ற நிலையை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இதன்மூலம் நம்மைப் போன்ற ஜனநாயக சக்திகளை ஒழித்துவிட்டு ஒரு கட்சி சர்வாதிகார முறையை தமிழகத்தில் கொண்டு வருவதுதான் அவர்களது திட்டம்!

அவர்களுக்கென்ன... பணத்துக்கா பஞ்சம்? ஸ்பெக்ட்ரம் மூலம் பல்லாயிரம் கோடி; பாலங்கள், சாலைகள் மூலம் பல்லாயிரம் கோடி; இப்படி திரும்பிய பக்கமெல்லாம் கோடி, கோடியாய் சுருட்டிய பல லட்சம் கோடிகள் வைக்க இடமின்றி குவிக்கப்பட்டிருக்கிறது.

அவர்களது கூட்டணியில் உரசல்களும், குழிபறிப்புகளும் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்கள் மிகவும் பலவீனமாக இருக்கும் சூழலில் அவர்கள் நம்பியிருப்பது ஊழல் பணத்தைத்தான். தேர்தலின் இறுதி நாட்களில் வாக்காளர்களுக்கு வீடு, வீடாகப் பணம் கொடுத்தாவது; 50 அல்லது 60 தொகுதிகளிலாவது வெற்றிபெற வேண்டும் என துடிக்கிறார்கள். அவர்கள் தோல்வியடையப் போவது உறுதி தான் எனினும், ‘கௌரவமாக’ தோற்க வேண்டும் என்பதற்காக வெறிகொண்டு பணத்தை வாரி இறைப்பார்கள்.

அதை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும். அதற்காக, நாம் போட்டியிடும் தொகுதிகளில் நாம் முறைகேடான வழிகளில் செலவு செய்ய வேண்டியதில்லை. ஆனால், செலவு செய்ய வேண்டிய முக்கிய நிகழ்வுகளான விளம்பரம் அமைத்தல், பிரச்சாரம் செய்தல், வாகன செலவு, கூட்டணி கட்சியினரின் அடிப்படை வேலைகளுக்கான செலவுகள், பூத் கமிட்டிக்கான ஏற்பாட்டு செலவு, மீடியாக்களுக்கான செலவுகள் என பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம். இவையெல்லாம் தவிர்க்க முடியாத செலவுகள்.

கண்மணிகளே...!

நமது பேரியக்கம் சாமான்ய மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டது. விரல்விட்டு எண்ணக்கூடிய செல்வந்தர்கள் மட்டுமே நமது பட்டாளத்தில் இருக்கிறார்கள்.

நமது ஒவ்வொரு செயல்பாடுகளிலும், வெற்றிகளிலும் பொதுமக்களிடமிருந்து திரட்டும் நன்கொடைதான் பின்னணியாக இருக்கிறது.

நமக்கு டாட்டாக்களையும், அம்பானிகளையும் தெரியாது. ஆலைகள் நடத்தும் பெரு முதலாளிகளையும் தெரியாது. அன்னிய நாடுகளில் நிதிபெறக் கூடாது என்பதைக் கொள்கையாக வைத்திருப்பவர்கள். வெளிநாடுகளுக்குச் சென்று உழைக்கும் இந்திய சொந்தங்களிடமிருந்து மட்டுமே நன்கொடை களை பெறக்கூடியவர்கள் என்பதெல்லாம் ஊர் அறிந்த உண்மைகள்.

இந்நிலையில் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தேர்தல் நிதியைத் திரட்ட வேண்டியது மிகமிக அவசரமான பணியாகும். தேர்தல் நேரத்தில் செலவுக்கு பணமிருந்தால் மட்டுமே நிம்மதியாக, சிந்தனை சிதறாமல் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த முடியும்.

எனவே, பிப்ரவரி 15 முதல் மார்ச் 15 வரை ஒருமாத காலத்தை தேர்தல் நிதி வசூலிக்கும் காலமாக வரையறை செய்து எல்லோரும் மக்களிடம் செல்லுங்கள். மக்களுக்காகப் பணியாற்றும் நமக்கு, மக்களிடமிருந்து பெறும் நிதிதான¢தோணியாகவும், ஏணியாகவும் இருக்க வேண்டும்.

கிளைகள், வார்டுகள், வட்டங்கள் என அடிப்படை நிர்வாக அமைப்புகள் ஒவ்வொன்றும் தங்கள் சார்பில் 10 ஆயிரம் ரூபாய்க்கு குறையாமல் தேர்தல் நிதி சேகரிக்க வேண்டும். இவர்களை மிஞ்சும் விதத்தில் நகரம், மாநகரம், பகுதி, ஒன்றியம் சார்பில் ஒருமடங்கு கூடுதல் நிதி சேகரிக்க வேண்டும். இவர்களோடு மாவட்ட நிர்வாகங்கள் போட்டிபோட்டு நிதி சேகரிக்க வேண்டும்.

சொந்தத் தொழில் நடத்துபவர்களிடமும் செல்வந்தர்களிடமும், அவர்களது சக்திக்கேற்ப 10 நாள் வருவாயைக் கேட்கலாம். அரசு ஊழியர்களிடம் தங்களின் ஒரு வார ஊதியத்தைக் கேட்கலாம். நல்ல வேலைகளில் உள்நாடுகளிலும், வெளிநாடுகளிலும் இருப் பவர்களிடம் ஐந்து நாள் ஊதியத்தைக் கேட்கலாம். நடுத்தர வர்க்க பாட்டாளிகளிடம் இரண்டு நாள் ஊதியத்தைக் கேட்கலாம். தினக்கூலிகளிடம் அவர்கள் விரும்பினால், அவர்கள் தரக்கூடிய ஒரு சிறிய தொகையைப் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், யாரையும் நிர்பந்தப்படுத்துவது கூடாது என்பதை நான் சொல்லி நீங்கள் தெரிய வேண்டியதில்லை. மனம் கசந்து யாரும் நமக்கு தேர்தல் நிதியளிக்க வேண்டியதில்லை.

நமது நிதிநிலை அறிந்து, சமுதாயத்தின் அரசியல் நிலை புரிந்து, மனமுவந்து யார் யார் தருகிறார்களோ அவர்களிடம் மட்டுமே தேர்தல் நிதியைத் திரட்டுங்கள். வீடு வீடாக செல்லுங்கள். வீதி வீதியாக செல்லுங்கள். உண்டியல் குலுக்கியாவது நிதி திரட்டுங்கள்.

நீங்கள் திரட்டும் ஒவ்வொரு ரூபாயும் சமுதாயத்தின் அரசியல் தலைநிமிர்வுக்கு, ஹலாலான முறையில் செலவு செய்யப்படும் என்பதை இந்நேரத்தில் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நமது எண்ணங்களையும், எதிர்பார்ப்பு களையும் அந்த வல்ல இறைவன் பொருந்திக் கொண்டு, வெற்றியை நல்க பிரார்த்திப்போம்.!

அன்புடன்
எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.