இறைவனின் திருப்பெயரால்....

Pages

Sunday, February 6, 2011

தமுமுக பொதுக்குழு தீர்மானங்கள்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுக்குழு 29.01.2011 அன்று தாம்பரத்தில் கூடியது. தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்குழுவில் தமிழகம் முழுவதிலிருந்தும் இருந்தும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர் கள் கலந்து கொண்டனர். அதில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

--------------------------------------------------------------------------------


தீர்மானம் 1 : தலைமை நிர்வாகிகள்


புதிய தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோரைத் தேர்வு செய்ய கூட்டப்பட்ட பொதுக்குழுவில் வருகின்ற சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி மன்றத் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு அமைப்பு நிர்ணய சட்டம் விதி 27, பிரிவு 5ன்படி, தற்போதுள்ள தலைமை நிர்வாகத்திற்கு ஓராண்டு காலம் பதவி நீட்டிப்பு செய்ய ஒருமனதாக பொதுக்குழு உறுப்பினர்களால் தீர்மானிக்கப் பட்டது.


தீர்மானம் 2 : ரங்கநாத் மிஸ்ரா ஆணையப் பரிந்துரைகளை நிறைவேற்றுக


காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 2004ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தல், முஸ்லிம்களுக்கு கேரளாவிலும், கர்நாடகாவிலும் வழங்கப்பட்டது போல தேசிய அளவில் கல்வி, வேலை வாய்ப்புகளில் தனி இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்தது. அதன்பிறகு முஸ்-லிம்களின் சமூகப் பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ராஜேந்தர் சச்சார் உயர்நிலைக் குழுவும், அதைத் தொடர்ந்து நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையமும் அமைக்கப்பட்டன. ராஜேந்தர் சச்சார் குழு, இந்திய முஸ்-லிம்களின் அவல நிலையைத் தெள்ளத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டியது. மிகவும் ஒடுக்கப்பட்டுள்ள தலித் சமூகத்தை விடவும் மோசமான பின்னடைவில் இந்திய முஸ்லிம்கள் இருப்பதாக ராஜிந்தர் சச்சார் அறிக்கை கூறியுள்ளது.


இதற்குப் பரிகாரம் காணும் தீர்வுகளை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகள் தந்தன. தேசிய அளவில் சிறுபான்மையினருக்குக் கல்வி, வேலை வாய்ப்புகளில் 15 சதவீத இடஒதுக்கீடு, அதில் 10 சதவீதம் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக் கப்பட்டு, விவாதங்கள் முடிந்த பிறகும் அவற்றை நிறைவேற்றாமல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு காலந்தாழ்த்திக் கொண்டிருப்பதை இப்பொதுக்குழு வன்மை யாகக் கண்டிக்கிறது. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையப் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் 3 : தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு & வெள்ளை அறிக்கை வேண்டும்


முஸ்லிம்களின் ஜீவாதாரக் கோரிக்கையான தனி இடஒதுக்கீட்டை வலியுறுத்தி தமுமுக நடத்திய நீண்ட நெடிய போராட்டத்தின் பயனாக தமிழக அரசு முஸ்லிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் 3.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியது. முஸ்லிம்களின் பிற்பட்ட நிலையை உயர்த்த 3.5 சதவீதம் போதுமானதல்ல என்றாலும், அதை ஒரு துவக்கமாகக் கருதி தமுமுக வரவேற்றது. நன்றி தெரிவித்தது. எனினும் 3.5% இடஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.


அதேநேரம் 3.5 சதவீத தனி இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்தாமல், பல்வேறு குளறுபடிகள் செய்யப்பட்டன. இதை அரசின் கவனத்திற்கு தமுமுக எடுத்துச் சென்றது. குறைபாடுகள் சரிசெய்யப்படும் என்று முதல்வர் வாக்குறுதி அளித்த பிறகும் குறைபாடுகள் சரிசெய்யப்படவில்லை.


4.5 லட்சம் பேருக்கு வேலை வழங்கியுள்ளதை தமிழக அரசு தனது சாதனையாகக் கூறுகிறது. இதில் முஸ்லிம்கள் 3.5 சதவீதம் இடம்பெறவில்லை என்பது வேதனையான உண்மை. தனி இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்த பிறகு முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட அரசு வேலை வாய்ப்புகள் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. இந்த 3.5 சதவீத இடஒதுக்கீடு எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை கவனிக்க கண்காணிப்புக்குழு ஒன்று அமைக்க வேண்டுமென இப்பொதுக்குழு கோருகின்றது.

தீர்மானம் 4: குண்டுவெடிப்பு சதிகாரர்களைக் கைது செய்க


நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடைபெற் றுள்ள குண்டுவெடிப்புகளுக்கு சுவாமி அசிமானந்தா போன்ற சங்-பயங்கரவாதிகள் தான் காரணம் என்பது இப்போது வெட்டவெளிச்சமாகியுள்ளது. இந்திய ராணுவத்தில் பணியாற்றிய ஸ்ரீகாந்த் புரோகித் போன்றவர்களுக்கெல்லாம் குண்டுவெடிப் புகளில் பங்குள்ளது நிரூபணமாகி யுள்ளது. இவரைத் தவிர மேலும் பல பணியாற்றும் இராணுவ அதிகாரிகளுக்கு குண்டுவெடிப்பில் பங்குள்ளதும் அம்பலமாகியுள்ளது. எனவே மத்திய அரசு இன்னும் ஆழமான விசாரணை மேற்கொண்டு இந்த பயங்கரவாதிகளைக் கைது செய்ய வேண்டும் என்றும், சங்பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்புகளுக்காக கைது செய்யப் பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்ய வேண்டுமெனவும் இப்பொதுக்குழு கோருகின்றது.


தீர்மானம் 5: மனித உரிமைப் போராளியை விடுதலை செய்க


சமூக சேவையாளர், மனித உரிமை ஆர்வலர், உலகப் புகழ்பெற்ற மருத்துவர் எனப் பல்வேறு சிறப்புகளுக்குரிய டாக்டர் பினாயக் சென்னுக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு என்ற காரணம் கூறி மாவட்ட நீதிமன்றம் அளித்துள்ள ஆயுள் தண்டனையை இப்பொதுக் குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இத்தீர்ப்பு உலகளாவிய அளவில் அறிஞர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்களிடையே இந்திய நீதித் துறையின் மதிப்பை சிதைத்துள் ளதையும் இப்பொதுக்குழு சுட்டிக் காட்டுகிறது.


டாக்டர் பினாயக் சென்&ஐ விடுவிக்க மத்திய அரசு உடனே ஆவன செய்ய வேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.


தீர்மானம் 6: தீஸ்தாவுக்கு பாராட்டு


குஜராத் முஸ்லிம் இனப்படு கொலையையும், சங்பரிவாரத்தின் மனிதகுல விரோத அராஜகங்களையும் அம்பலப்படுத்தியதோடு, அவற்றை ஐ.நா.வின் மனித உரிமைப் பிரிவின் கவனத்திற்கும் கொண்டு சென்ற தீஸ்தா செட்டல்வாட்டை இப்பொதுக்குழு பாராட்டுகிறது. அவரது முயற்சிகளுக்கு தார்மீக ஆதரவையும் தெரிவிக்கிறது. அதே நேரம், தீஸ்தாவின் நடவடிக்கை களைக் கண்டித்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதியின் கருத்து திரும்பப்பெற வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.



தீர்மானம் 7: சிறைவாசிகள் விடுதலை


விசாரணைக் கைதிகளாகவும், தண்டனைக் கைதிகளாகவும் பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிவரும் கைதிகளுக்கு, பொது மன்னிப்பு வழங்கி முன்னதாக விடுதலை செய்வதில் தமிழக அரசு நேர்மையைக் கடைப் பிடிக்கவில்லை என இப்பொதுக்குழு குற்றம் சாட்டுகிறது.

பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் முஸ்லிம் கைதிகளை வேண்டுமென்றே இந்த அரசு புறக்கணித்து வந்துள்ளது. பல்லாண்டுகளாக சிறையில் வாடும் கைதிகளில் நன்னடத்தை உடையோருக்கு, உடனடியாகப் பொது மன்னிப்பு வழங்கி அவர்களை விடுதலை செய்திட தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்து கின்றது.


தீர்மானம் 8: பூரண மதுவிலக்கு தேவை


தமிழக அரசு நடத்தி வரும் டாஸ்மாக் மதுக்கடைகளால், மது அடிமைகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் குடிகாரர்களின் சராசரி வயது 13 என்ற அதிர்ச்சி செய்தி, நிலைமையின் விபரீதத்தை உணர்த்து கிறது. சமூக விரோத சாராய வியாபாரத்தை தமிழக அரசு உடனடியாகக் கைவிட்டு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.


தீர்மானம் 9: வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு தனி அமைச்சகம்


வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும் என்பது நமது நீண்டகால கோரிக்கையாகும். தமிழக அரசு வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு வாரியம் அமைக்கப் போவதாக அறிவித்துள்ளது. கேரளாவில் இருப்பது போல் தமிழகத்திலும் வெளிநாடு வாழ் தமிழர்களுக்கென தனி அமைச்சகத்தை தொடங்க வேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.


தீர்மானம் 10: உருதுமொழிக்கு உத்திரவாதம்


சமச்சீர் கல்வித்திட்டத்தில் உருதுவை தாய்மொழியாகக் கொண்டவர்கள், மொழிப் பாடமாக உருதுவைக் கற்கும் வாய்ப்புப் பறிக்கப்பட்டது. இது சரி செய்யப்படும் என்று முதல்வர் அளித்த வாக்குறுதியும் காற்றில் பறந்து விட்டது. நடைமுறையில் உருதுவைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் உருதுவை மொழிப்பாடமாகப் படிக்க முடியாத சூழலே உள்ளது.


மாநில மொழியான தமிழை ஒரு பாடமாகக் கற்க உருது பேசும் மக்கள் தயாராக உள்ளபோது, தாய்மொழியை ஒரு மொழிப்பாடமாகக் கற்கும் வாய்ப்பைப் பறிப்பது நியாயமற்றது. உருதுவை மொழிப்பாடமாகக் கற்பதில் தமிழக அரசு ஏற்படுத்திய தடைகளை அகற்ற வேண்டுமென இப்பொதுக்குழு வலியுறுத்துகின்றது.


தீர்மானம் 11: ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை


கிழக்கு தாம்பரம் ரயில்வே காலனியில் உள்ள 75 ஆண்டுகால பழமை வாய்ந்த கிறிஸ்து ராஜா பள்ளிக்கூட இடத்தைக் கையகப்படுத்த ரயில்வே நிர்வாகம் எடுத்துள்ள முயற்சியைக் கைவிட வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

0 comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.