விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவராக இருந்த பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் சென்னை விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார். மனிதாபிமானமற்ற இச்செயல் கடும் கண்டனத்திற்குரியது. இதற்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசும், அதில் இடம் பெற்றுள்ள தி.மு.க.வும் தான் பொறுப்பேற்க வேண்டும்.
மலேசிய அரசு மனிதாபிமானத்துடன் நடந்துகொண்டது. ஆனால், வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலார், குளிரில் நடுங்கிய மயிலுக்கு போர்வை போர்த்திய பேகன், முல்லைக்கொடி பரவி வளர தேர் கொடுத்த பாரி மன்னன், பார்ப்பனர்களுக்கும் உதவி செய்த பெரியார் ஆகியோர் பிறந்த தமிழக மண் அவரை துன்பப்படுத்தி துரத்தியடித்துள்ளது.
பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதற்கு 2003ஆம் ஆண்டு முதல்வராக இருந்த செல்வி.ஜெயலலிதா விடுத்த அரசாணைதான் காரணம் எனக் கூறுவது பொருத்தமற்றது.
அன்றைய அரசியல் சூழலில் எடுத்த முடிவை, இப்போதைக்கு காரணமாக கூறுவது நியாயமல்ல. பார்வதி அம்மாள் வருகை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என முதல்வர் கூறியிருப்பது ஆச்சர்யமளிக்கிறது. முதல்வருக்கு தகவல் கொடுக்காமல், தமிழக காவல்துறை எப்படி விமான நிலையம் சென்றது என்று தெரியவில்லை.
பார்வதி அம்மாள் மீண்டும் தமிழகம் வருவதாக இருந்தால், இதுகுறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுத தயார் என்று முதல்வர் கலைஞர் தெரிவித்திருக்கிறார். நடைபெற்ற நிகழ்வுக்கு பார்வதி அம்மாள் குடும்பத்தாரிடம் தமிழக அரசு வருத்தம் தெரிவித்து, அவரை மீண்டும் தமிழகம் கொண்டு வரவும், மத்திய அரசிடம் அவருக்கு எதிரான தடையாணையை ரத்து செய்யவும் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.