இறைவனின் திருப்பெயரால்....

Pages

Thursday, November 17, 2011

ஆம்புலன்ஸ் சேவை குறைபாடு: குற்றச்சாட்டுக்கு தமுமுக விளக்கம்!

அஸ்ஸலாமு அலைக்கும்
சகோ லெ.மு.செ. அபூபக்கர் அவர்கள் த.மு.மு.க மற்றும் பைத்துல்மால் அவசர ஊர்திசேவையில் உள்ள குறைகளைப் பற்றி கூறியதற்கு த.மு.மு.க வின் பதிலாக இங்கே சிலவற்றைக் குறிப்பிட விரும்புகிறோம்.

த.மு.மு.க.வின் அவசர ஊர்திகென்று தனி கைபேசி எண் 97 50 50 50 94 இது த.மு.மு.க.வின் பொறுப்பாளர் நசுருதீன் என்பவரிடம் உள்ளது. சம்பவம் நடந்த நள்ளிரவு 2.10 க்கு பின் 2.15 முதல் 2.25 வரை நசுருதீனின் சொந்த கைபேசி எண்ணான வேற எண்ணுக்கு 19ஆவது வார்டு கவுன்சிலரின் கணவர் சகோ அகமது ஹாஜா தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் 15 நிமிடம் வரை அந்த அழைப்பை நசுருதீன் அவர்கள் எடுக்கவில்லை. காரணம் அவர் முதல் நாள் இஷா தொழுகைக்கு போகும்போது அவரின் கைபேசியை அமைதி நிலையில் (Silent Mode) வைத்தவர் மீண்டும் அதை செயல் நிலைக்கு கொண்டு வர மறந்து விட்டார். "அவசர ஊர்தி தொடர்பு எண் தன் கைப்பேசியில் பதிவில் இல்லை. எனவே தனக்கு அந்த எண் நினைவில் இல்லை" என்று சகோ அஹ்மத் ஹாஜா அவர்கள் கூறுகிறார். அந்நிலையில் லெ.மு.செ.அபூபக்கரின் சகோதரர் சிராஜுதீன் அவரின் கைபேசியில் இருந்து 2.29 க்கு அவசர ஊர்தி எண்ணான 97 50 50 50 94 எண்ணுக்கு அழைப்பை விடுக்கிறார். இருமுறை அழைப்பு விடுக்கப்பட்டு அது பதில் அளிக்கப்படவில்லை. உடனே அவர் த.மு.மு.க.வின் நகரச் செயலாளர் தையுப் அவர்களை தொடர்பு கொள்கிறார். அவர் சிராஜுதீனிடம் "ஓட்டுனர் வீடு சுரைக்கா கொல்லையில் உள்ளது. போய் உடனே எழுப்புங்கள்" என்று சொல்லியுள்ளார்.

சிராஜுதீன் அங்கு சென்று ஓட்டுனர் வீடு சரியாக தெரியாத காரணத்தால் மீண்டும் அவசர எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது நசுருதீன் இப்பொழுது அழைப்பிற்கு பதில் அளித்துள்ளார். அப்பொழுது நேரம் 2.33. ஓட்டுனரின் வீட்டு முகவரியை தெளிவாகச் சொல்லியுள்ளார் அத்துடன் மூன்று நிமிடம் கழித்து ஓட்டுனருக்கும் பேசியுள்ளார். அப்பொழுது ஓட்டுனர் தானும் சிராஜுதீனும் அவசர
ஊர்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஷிபா மருத்துவமனை நோக்கி செல்வதாக கூறியுள்ளார். அப்பொழுது நேரம் 2.36. இவை எல்லாம் கைபேசியில் பதிவாகி உள்ள நேரங்கள்.

சகோ அபூபக்கர் குறிப்பிடுவது போல் ஓட்டுனரின் கைப்பேசி அணைத்து வைக்கப்படவில்லை. அவசர எண் ஓட்டுனரிடம் இல்லை. அது பொறுப்பாளர் சகோ. நசுருதீன் வசம் உள்ளது நாம் அதை ஓட்டுனர்கள் வசம் கொடுத்து வைத்தால் ஒருவேளை அவர்கள் எடுக்க வில்லை என்றால் என்ன நடக்கிறது என்பது நிர்வாகிகளான எங்களின் கவனத்திற்கு வராமலே போகலாம். எனவேதான் பொறுப்பாளர் ஒருவரை நியமித்து தகவல் வந்த உடன் அதை அவர் மறுபுறம் உறுதி செய்து ஓட்டுனருக்கு தகவல் தருவார். ஓட்டுனரிடம் அவசர எண்ணான 97 50 50 50 94 இந்த எண்ணிலிருந்து வருவதற்காகவே தனி இலக்கம் வைத்துள்ளார். இந்த இலக்கத்தை வேறு எந்த சுய உபயோகத்திற்கு அவர் பயன் படுத்துவதில்லை.

சகோ அபூபக்கர் சொல்வது போல் இரவு பகல் என இரு ஓட்டுனர்களை வைத்து கொள்வதற்கு த.மு.மு.கவிடம் பொருளாதார வசதியும் இல்லை. குறைந்த சம்பளத்திற்கு சேவை மனப்பான்மை உள்ள ஓட்டுனர் கிடைப்பதில்லை. அதுபோல அவசர ஊர்தி தினமும் ஓடுவதற்கான வாடகை வாகனமும் அல்ல. நாங்கள் வசூலிக்கும் வாடகையில் இரு ஓட்டுநர்களை பணி அமர்த்துவது சாத்தியமும் இல்லை. தற்போதைய எங்களின் ஓட்டுனரை போல் நல்உள்ளம் கொண்டவரை பார்ப்பது கடினம்.

அரசாங்கம் செய்துவரும் 108 போல் இரவு முழுவதும் விழித்திருந்து சேவை செய்து பலபேர் வைத்து நிர்வாகம் நடத்துமளவுக்கு த.மு.மு.கவிடம் பொருளாதார சக்தி இல்லை. அன்று நடந்ததில் ஒரு தவறு நடந்துள்ளது. நள்ளிரவு 2.29 க்கு சகோ சிராஜுதீன் தொடர்பு கொள்ளும் பொழுது அந்த பொறுப்பாளரான நசுருத்தீன் இரண்டு முறை பதில் அளிக்காமல் உறக்கத்தில் இருந்திருக்கிறார். அவரும் மனிதன் தான். இறைவன் தனது வசனத்தில்... "இரவை உங்களுக்கு இளைப்பாறுவதற்கும் உறங்குவதற்கும் படைத்திருக்கிறேன்" என்று கூறுகிறான். நள்ளிரவு 2.30 மணிக்கெல்லாம் அழைப்பிற்கு சிலர் உடனே எழலாம். சிலர் சிறிது நேரம் கழித்து எழலாம். இது இறைவன் அவர்களுக்கு கொடுத்த சக்தியைப் பொறுத்தது.

இதில் சகோ அபூபக்கரின் வரிகளான // இவ்வாக்கம் யாரையும் தூக்கிப் பிடிப்பதற்கோ அல்லது தரம் தாழ்த்துவதற்கோ எழுதப்பட்டதல்ல. ஊர் நடப்புகளை உங்களுக்கு தெரியப்படுத்தி சில அசொளகரியங்களை களைவதற்காகத்தான் அன்றி வேறொன்றும் இல்லை.// என்பது
5 நிமிட காலதாமதத்தை இவ்வளவு பெரிது படுத்தி எங்கள் தரப்பு விளக்கத்தை பெறாமல் அவர் ஊடகத்தின் வாயிலாக அதிவிரைவாக விமர்சித்திருப்பதை படைத்தவனே அறிவான்.

எங்களின் அவசர ஊர்தி சேவையை பற்றி சகோ அபூபக்கர் அறியாதவரல்ல. கடந்த 4/11/11 அன்று அவரது உறவினரின் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனையில் எவ்வளவு நேரம் காத்திருந்து அவசர ஊர்தி சேவை செய்தது என்பது அவருக்கும் தெரியும்.

நல்ல விமர்சனம் எங்களை மேலும் நெறிப்படுத்தட்டும். உள்நோக்கம் இருந்தால் எல்லாம் வல்ல அல்லாஹ் போதுமானவன்.

இப்படிக்கு
செயலாளர் த.மு.மு.க,
பொருளாளர் த.மு.மு.க,
துணைத் தலைவர் த.மு.மு.க ,
துணை செயலாளர் த.மு.மு.க
அதிரை நகரம்

1 comments:

மு.செ.மு. நெய்னா முஹம்மது said...

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பான சகோதரர்களே,

சகோ. லெ.மு.செ. அபுபக்கர் தன் கட்டுரை மூலம் நம்மூருக்கு (அதிரை பைத்துல்மால் மற்றும் த.மு.மு.க மூலம்) அற்புதமான அற்பணிப்பான ஆம்புலன்ஸ் சேவையை மேலும் செம்மைப்படுத்த வேண்டுமென்ற நல்நோக்கில் தன் வேண்டுகோளை ஒரு கோரிக்கையாக வைத்திருந்தார். அவர் யாரையும் குற்றம், குறை சுமத்தி அதை அரசியலாக்கி அதன் மூலம் ஆதாயம் அடையும் நோக்கில் நிச்சயம் எழுதவில்லை என்பதை அவருடைய பால்ய நண்பன் என்ற முறையில் நான் தாங்கள் அனைவருக்கும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இதில் சகோ அபூபக்கரின் வரிகளான // இவ்வாக்கம் யாரையும் தூக்கிப் பிடிப்பதற்கோ அல்லது தரம் தாழ்த்துவதற்கோ எழுதப்பட்டதல்ல. ஊர் நடப்புகளை உங்களுக்கு தெரியப்படுத்தி சில அசொளகரியங்களை களைவதற்காகத்தான் அன்றி வேறொன்றும் இல்லை.// என்பது...

மேற்கண்ட கருத்து மூலம் அவர் யாரையும் தனிப்பட்ட முறையில் சாடி எழுதவில்லை. எனவே இக்கருத்திற்கு உட்கருத்து வைத்து எழுதுவது நமக்கு நல்லதாக தெரியவில்லை.

அவரவர் தனியாகவோ, இயக்கமாகவோ, நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ செய்யும் ஒவ்வொரு நற்பணிக்கும், மக்கள் தொண்டிற்கும் இவ்வுலகில் பாராட்டுப்பத்திரங்கள் கிடைக்கிறதோ, இல்லையோ? படைத்த இறைவன் முன் நிச்சயம் அவைகளுக்கு நற்கூலி உண்டு என்ற நம்பிக்கையில் நம் வாழ்க்கை மெல்ல, மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது.

நம்முடைய நற்பணிகளையும், இறைவனுக்காக செய்யும் சேவைகள் அனைத்தையும் மக்கள் தவறாக புரிந்து கொண்டு தூற்றினாலும், தொல்லைகள் பல தந்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாது நம் நற்பணிகள் தொய்வின்றி கடைசி மூச்சுக்காற்று தொண்டைக்கும், நெஞ்சிற்கும் தொங்கோட்டம் ஓட்டிக்கொண்டிருக்கும் வரை தொடரட்டுமாக.....

இயக்கங்களால் நமக்குள் தயக்கங்கள் வேண்டாம்.....

தவறாக புரிந்துணர்தலால் வந்த தடங்கலுக்கு வருந்துகிறேன்.

அன்புடன்...

மு.செ.மு. நெய்னா முஹம்மது

நம்மூரிலிருந்து....

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.

வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.