Sunday, May 15, 2011
என் தோல்விக்காக கலங்காதீர்கள்...
Posted by
riyas
at
15.5.11
எம்.தமிமுன் அன்சாரி
அன்பிற்குரிய நண்பர்களே, சகோதரர்களே...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
தமிழகமே விழாக்கோலத்தில் இருக்கும்போது, பண்டிகை தினத்தில் குழந்தையைக் காணடித்த ஒரு தந்தையின் மனநிலையில் நான் இருக்கிறேன் என்பதை மறைக்க விரும்பவில்லை.
எத்தனையோ பேரின் வெற்றிக்காக பாடுபட்டு மகிழ்ந்த நான், என் முதல் தேர்தலில் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்திருக்கிறேன். எனது தோல்வி சென்னையில் அரசியல் வட்டாரத்தையும், பொதுமக்களையும் உலுக்கியிருக்கிறது. தமிழகத்தையும் தாண்டி உலகமெங்கும் வாழும் தமிழக சகோதரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது என்பதை உணர்கிறேன். சமுதாயம் கவலைப்படுவதை அறிகிறேன்.
தங்களாலேயே வெற்றிபெற முடியாது என அதிமுகவினர் ஒதுங்கிய சவால்மிக்க ஒரு தொகுதி சேப்பாக்கம்&திருவல்லிக்கேணி என்பது தமிழகம் அறிந்த உண்மை.
சென்னையை மிரட்டும் ரவுடிகளின் துணையோடு, மிகப்பெரிய சினிமா பணக்காரரான ஜெ.அன்பழகன் திமுக சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட போதே அங்கு பரபரப்பு தொற்றியது. கலைஞரின் தொகுதி மட்டுமல்ல... தயாநிதி மாறனின் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குப்பட்ட பகுதி வேறு. கலைஞர் அன்பழகனை வேட்பாளராக நிறுத்திய போது, இங்கு நானே நிற்பதாக கருதுங்கள் என்று அறிமுகப்படுத்தினார்.
அங்கு திமுகவுக்கு ஏற்படும் தோல்வி, கலைஞரின் குடும்பத்திற்கு ஏற்படும் தோல்வி என கருதப்பட்டதால் தயாநிதி மாறனும், கலைஞரின் மகன் மு.க.தமிழரசும் நேரடியாக எனக்கு எதிராக களப்பணியாற்றினார்கள்.
தினந்தோறும் ரவுடிகளின் பிரச்சனையை சந்தித்தேன். தினந்தோறும் வாக்களர்களுக்கு பணம் வினியோகித்த அநீதிக்கு எதிராக போராடினேன். ஒரு கட்டத்தில் தமிழக தேர்தல் ஆணையர் பிரவீன் குமாரை இரண்டு முறை நேரில் சந்தித்து பண வினியோகத்தை தடுத்து நிறுத்துமாறு முறையிட்டேன். அவரை நேரில் இருமுறை சந்தித்த ஒரே வேட்பாளர் நான் மட்டுமே. ஆயினும் பண விநியோகத்தை தடுக்க முடியவில்லை.
எனினும் மனம் தளராமல் போராடினேன். நமக்கு பலஹீனமாக இருந்த ஒரு தொகுதி, 15 நாள் உழைப்பில் தமிழமே பேசப்படக்கூடிய ஒரு நட்சத்திர தொகுதியாக மாற்றினோம். நம் உழைப்பையும், பிரச்சாரத்தையும் மீடியாக்கள் வியந்து போற்றின. ரவுடிகளையும், பணக்கார சக்திகளையும் எதிர்த்து போராடுவதாக பாராட்டின. நவீன வடிவிலான பிரச்சாரங்களை முன்னெடுத்தேன்.
தேர்தல் களத்தில் நான் ஒரு கதாநாயகன் போல் மக்களால் வர்ணிக்கப்பட்டேன். செல்வி. ஜெயலலிதா அம்மையார் அவர்களே நேரில் அழைத்து பாராட்டினார்கள்.
ஆனாலும், கடைசி இரண்டு நாட்களில் கடுமையாக வினியோகிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகளும், தங்கக் காசுகளும், குடிசை மக்களையும், மீனவ மக்களையும் விலைக்கு வாங்கிவிட்டது என்பதை வாக்குகள் எண்ணப்படும் போது அறிந்தேன்; அதிர்ந்தேன். எந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டேனோ அந்த மக்கள் என்னை கடைசி நேரத்தில் கைவிட்டுவிட்டார்கள்.
குடிக்காதீர்கள்; பொருளாதாரத்தை சேமியுங்கள்; பின்ளைகளைப் படிக்க வையுங்கள் என்றெல்லாம் தேர்தல் பிரச்சாரத்திற்கு மத்தியில் கொள்கை பிரச்சாரத்தை எந்த மக்களிடம் அக்கறையுடன் செய்தேனோ, அந்த மக்கள் தங்களுக்கும், தங்கள் தொகுதிக்கும் பேரிழப்பை ஏற்படுத்திக் கொண்டுவிட்டார்கள் என்பதை நினைத்து வருந்துகிறேன்.
கூட்டணிக் கட்சியொன்றைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் சிலரும் தயாநிதி மாறனிடம் விலை போனதை அறிந்து வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை.
சென்னையில் நானும், கொளத்தூரில் ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிட்ட சைதை துரைசாமியும்தான் அனல் பறக்கும் பிரச்சாரத்தை கடும் வெயிலில் தீவிரமாக மேற்கொண்டோம். வீடு வீடாக, வீதி வீதியாக ஏறி இறங்கினோம்.
நாங்கள் இருவருமே மீடியாக்களால் பாராட்டப் பெற்றோம். ஆனாலும் எங்கள் இருவரையும் அலைகளையும் தாண்டி பணம் ஜெயித்து விட்டது.
இன்று அறிவார்ந்த மக்களிடமும், மனசாட்சிமிக்க வாக்காளர்களிடமும் நாங்கள் இரக்கத்திற்குரிய நபர்களாக அனுதாப அலையில் நின்று கொண்டிருக்கிறோம். வெற்றியால் கிடைத்திருக்கும் ஆதரவை விட, தோல்விக்குப் பிறகு கிடைத்திருக்கும் ஆதரவு பன்மடங்குகளாக இருக்கிறது.
என் தோல்வியால் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர் என்பதை ஃபேஸ்புக் தகவல் பரிமாற்றங்களில் பார்க்க முடிகிறது. என்னை சந்தித்து அழும் சகோதரர்களிடமும், அலைபேசி வழியாக பதறும் சகோதரர்களிடமும் அந்த உணர்வுகளை புரிந்துகொள்ள முடிகிறது. என் மீது பற்றுக்கொண்ட மக்கள் இவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை அறிந்து மனம் நெகிழ்கிறேன்.
போரில் வெற்றி பெறும்போது எதிர்பாராவிதமாக முக்கிய தளபதி கொல்லப்படுவது யுத்தங்களில் சகஜமானது. அதுபோல்தான் இதுவும்! நான் சட்டமன்றத்திற்குப் போனால் பாராளுமன்றத்தில் வைகோ முழங்கியது போல், சட்டமன்றங்களில் ரஹ்மான் கான், பரிதி இளம்வழுதி முழங்கியது போல் செயல்பட்டிருக்க முடியுமே... அது முடியாமல் போய்விட்டதே என ஒரு சகோதரர் குமுறினார். கவலை வேண்டாம்.
அருமை தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், அருமை நண்பர் அஸ்லம் பாஷாவும் பெற்ற வெற்றி நமக்கு புதுத்தெம்பை அளித்திருக்கிறது. சமுதாயத்திற்குப் புது நம்பிக்கையை தந்திருக்கிறது. அதை நினைக்கும் போது ஆறுதலாக இருக்கிறது. மனிதநேய மக்கள் கட்சி அரசியல் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறதை நினைக்கும் போது, மனம் மகிழ்கிறது.
என் தொகுதி மக்களில் சிலர் செய்த வரலாற்றுத் தவறுக்காக யாரும் கலங்க வேண்டாம். எத்தனையோ களங்கள் நமக்காக காத்திருக்கிறது. இதைவிட சிறப்பான இன்னொன்றை இறைவன் நமக்கு வழங்குவான். 15 கோடிகளை செலவு செய்த எதிர்தரப்புக்கு முன்னால் சில லட்சங்களை செலவு செய்து சில ஆயிரம் ஓட்டுகளில் மட்டுமே தோற்றிருக்கிறோம்.
ஆனால், வல்ல இறைவனின் நாட்டம் இதுதான் எனும்போது இதற்குமேல் இதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை.
என் வாழ்க்கை முழுவதும் போராட்டங்களால் சூழப்பட்டிருக்கிறது. எனது பொது வாழ்வு பயணங்களில் நான் பல காயங்களைப் பட்டிருக்கிறேன். ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் நான் பல அதிர்வுகளை சந்தித்து மெல்ல மீண்டும் வந்திருக்கும்போது, எதிர்பாராத இத்தோல்வியால் நான் அதிர்ச்சியடைந்திருக்கிறேன் என்பதை மறைக்க முடியவில்லை. ஊரே விழாக்கோலத்தில் இருக்கும்போது, அந்த மகிழ்ச்சியில் நாமும் பங்கெடுக்க முடியவில்லையே என்ற வருத்தத்தையும் மறைக்க விரும்பவில்லை.
அன்று இரவு பத்திரிக்கையாளர்கள் என்னை தொடர்புகொண்டு, இத்தொகுதியில் ‘‘இவர்களை’’ எதிர்த்து உங்களைத் தவிர வேறு யார் நின்றிருந்தாலும், தயாநிதி மாறன் டெபாசிட் வாங்க விட்டிருக்க மாட்டார் என்று கூறினார்கள்.
நமது உழைப்பு அங்கு குறுக்கு வழியில் முறியடிக்கப்பட்டிருக்கிறது. என்றாலும் அதையும் மீறி எனக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் வாக்களித்த 54,988 வாக்காளர்களுக்கும் என் சார்பிலும், கட்சியின் சார்பிலும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னோடு உழைத்த கூட்டணிக் கட்சியினருக்கும், சொந்தக் காசை செலவு செய்து, பசியோடும் & பட்டினியோடும் அலைந்து திரிந்து பிரச்சாரம் செய்த என் உயிருக்கினிய மனிதநேய சொந்தங்களுக்கும், தாய்க்கழக உறவுகளுக்கும் என் மனப்பூர்வ நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்குப் பின்னணியில் உழைத்த அறிவுஜீவிகள், மாணவர்கள், இளைஞர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், உலகமெங்கும் எனக்காக துவா செய்த நல்லுள்ளங்களுக்கும், என் அதிர்ச்சித் தோல்விக்குப் பின்னாலும் எனக்காக துடித்துக் கொண்டிருக்கும் அன்பர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் வெற்றி பெற்றிருந்தால் கிடைக்கும் ஆதரவை விட, நான் தோற்ற பிறகு எனக்கு கிடைத்திருக்கும் ஆதுரவும், அனுதாபமும் அளவிட முடியாததாக இருக்கிறது. வயதில் இளையவனாகிய என் மீது சமுதாய மக்கள் வைத்திருக்கும் அன்பை எண்ணி உண்மையில் கண் கலங்குகிறேன்.
என் உரையில் உந்தப்பட்ட மாணவர் தம்பிகள் தமிழகமெங்கும் அழுகின்ற செய்திகள் என்னை உறைய வைக்கிறது. நமது இயக்க குடும்பங்களில் பெண்களெல்லாம் கூட எனக்காக பதறும் செய்திகள் என்னை விசும்ப வைக்கிறது. பல சகோதரர்கள் என்னை நேரில் சந்திக்க பல ஊர்களிலிருந்து வந்தவண்ணம் உள்ளனர்.
மீண்டும் கூறுகிறேன். கவலைகள் இருந்தாலும், அடுத்த களத்துக்கு நம்மை தயார்படுத்துவோம். அமெரிக்காவுக்கு விடுதலை வாங்கித்தந்த ஜார்ஜ் வாஷிங்டனையே அதே மக்கள் தேர்தலில் தோல்வியடைய செய்தார்கள். இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்துக்கு வெற்றியை தேடிக் கொடுத்த வின்ஸ்டன் சர்ச்சிலை அடுத்த தேர்தலில் அதே மக்கள் தோல்வியைச் செய்தார்கள்.
காமராஜர், அண்ணா போன்றவர்களே தோற்றிருக்கும்போது எனது தோல்வி சாதாரணமானது. நாம் சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டிருக்கிறோமே தவிர நேரிய வழியில் அல்ல.
குறுக்கு வழியில் வெல்வதை விட, நேர்மையான வழியில் தோற்பது உயர்வானது.
வெளிநாடுகளில் வாழும் நண்பர்களும், சகோதரர்களும் இதை எளிதாக எடுத்துக் கொண்டு இயல்பு நிலைக்கு திரும்புமாறு வேண்டுகிறேன்.
உங்களின் எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் நிறைவேற்றும் வேறொரு சிறந்த வாய்ப்பை இறைவன் எனக்கு நல்குவான். தற்போது மன அமைதியும், சிறிய ஓய்வும் எனக்கு தேவைப்படுகிறது.
ஆயினும் எந்தவிதத்திலும் சமுதாயப் பணி தடைபடாது. முன்னிலும் அதிகமாக உழைப்பேன். நமது கட்சி வெற்றி பெற்ற ஒரு போரில் காயம்பட்ட ஒரு வீரனாக இருக்கிறேனே தவிர, ஓடி ஒளிந்தவனாக இருக்க மாட்டேன்.
எனக்கு ஒரே ஆறுதல், நம் சமுதாய மக்கள் வாழுமிடங்களில் 99 சதவீத ஆதரவு கிடைத்ததுதான். இது மமகவுக்கான அற்புதமான களம் வலுப்படுத்தப்பட்டிருக்கிறது.
கலைஞர் குடும்பத்தையும், ரவுடிகளையும், அதிரவைத்த ஒரு தமுமுக தொண்டன், மமக ஊழியன் என்ற பெருமிதத்தோடு என் அடுத்தகட்டப் பயணம் தொடரும். இன்ஷாஅல்லாஹ்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே! இறுதி வெற்றி நமது அணிக்கே!
அல்லாஹ் நமக்கு விதித்ததைத் தவிர வேறொன்றும் எங்களை அணுகாது (அல்குர்ஆன் 9:51)
மூமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள் (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள் (இம்மையிலும் மறுமையிலும்) வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 3:200)
அன்புடன்
எம். தமிமுன் அன்சாரி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.