மரண ஓலம் உலகத்தை அப்பிக்கொண்டிருக்கிறது! எங்கு பார்த்தாலும் மனித
இரத்தம் புவியை நனைத்துக் கொண்டிருக்கும் சிவப்புக் காட்சிகள்! குறிப்பாக
முஸ்லிம்களின் விலைமதிக்க முடியாத உயிர், செல்லாக் காசுகளாகிவிட்ட கொடூர
காலக்கட்டம்! எந்த நேரத்தில் நம் உயிர் பிரியும் என்பது யாருக்கும்
தெரியாது! எங்கு தான் இந்த உயிர் பறிக்கப்படும் என்பதும் நமக்குத்
தெரியாது!
எனவே அடிக்கடி நம்மை நாமே சுயபரிசோதனை செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.
கடந்த கால நம் வாழ்க்கையை கொஞ்சம் அசைபோட்டுப் பார்த்து நம் எதிர்காலத்தை
திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். கடந்த காலம் குறித்த பின்னோக்கும்
தன்மையும், எதிர்காலம் குறித்த திட்டமிடலும் கண்டிப்பாக ஒவ்வொரு
மனிதனுக்கும் தேவை.
எல்லாவற்றிற்கும் மேலாக மறுமைக்காணதோர் பயணம் நம்மை எதிர்பார்த்துக்
கொண்டிருக்கிறது. அந்தப் பயணம் ஒரு சுவனப் பசுஞ்சோலையை நோக்கியதோர்
பயணமாகவும் இருக்கலாம், அல்லது பாதாள படுகுழியின் பாசறையான நரகம்
நோக்கியதோர் பயணமாகவும் இருக்கலாம் அல்லவா? நம்மை நாம் தான் பாதுகாத்துக்
கொள்ள வேண்டும்.
அன்பு நெஞ்சங்களே! மறுமையின் நந்தவனத்தில் ‘நாமும் ஒரு மலராக’
வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
இதோ கீழ்காணும் எண்ண அலைகளை அமைதிப்படுத்த முயற்சிப்போமாக! எம்மைப்
படைத்த வல்ல ரஹ்மானின் ஆதரவு என்றும் நம்மோடு இருக்கின்றது.
1. தீமை தரும் பேச்சுக்களை விட்டும் என் நாவை எந்தளவு பாதுகாத்துக்
கொள்கிறேன்? அல்லது வெட்டிப் பேச்சும், வீண் வம்பும் தான் என் கைதேர்ந்த
கலையா?
2. என்றாவது மையவாடியைத் தரிசித்து, நமக்கும் மரணம் வருமே! நாமும் இங்கு
தானே கொண்டு வரப்படுவோம்! என்கின்ற எண்ணம் எப்போதாவது வந்துள்ளதா? அல்லது
உலகம் மரணத்தையும் மறுமையையும் மறக்கடித்து விட்டதா?
3. கப்ர் வாழ்க்கைக்கான கட்டுச் சாதனத்தை தயார் செய்து விட்டேனா? அல்லது
கப்ர் வாழ்க்கையே இப்போது தான் நினைவுக்கு வருகின்றதா?
4. பிறர் குறைகளைப் பாராது என் குறைகளை சீர் செய்வதில் எந்த அளவு ஆர்வம்
காட்டியிருக்கிறேன்? அல்லது பிறர் குறைமேய்வது தான் என் தொழிலா?
5. இறையச்சமுடையவனாகுவதற்கு எந்த அளவு முயற்ச்சித்திருக்கிறேன்? அல்லது
என் மனது கல்லாகி விட்டதா?
6. காலத்தை வீணடிக்காது அமானிதத்தைப் பாதுகாத்திருக்கிறேனா? அல்லது காலம்
கூட அமானிதம் என்பது எனக்குத் தெரியாதா?
7.அல்-குர்ஆனில் எத்தனை சூராக்களைப் பாடமாக்கியிருக்கிறேன்? எத்தனை
ஹதீஸ்களை மனனமிட்டிருக்கிறேன்? இல்லை இல்லை பாட்டும் படமும் தான் என்
சிந்தனையின் விருந்தா?
நான் மற்றவர்களை சந்திக்கும் போதெல்லாம் சலாம் கூறுகின்றேனா? அல்லது
சலாம் கூறுவது கூட எனக்கு கசப்பாக இருக்கிறதா?
8. புன்சிரிப்போடும், நல்ல வார்த்தைகளோடும் மற்றவர்களைச் சந்திக்கிறேனா?
அல்லது கர்வம் தான் என் நடைமுறைகளின் அலங்காரமா?
9. என் எல்லாக்காரியங்களிலும் வலதை முற்படுத்துகின்றேனா?
10. மறுமையில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் ஷபாஅத்தைப்
பெற்றுக்கொள்வதற்காக, முஅத்தின் பாங்கு கூறும் போது நானும் அதே போன்று
கூறுகின்றோனா? அல்லது வீணாக பேசிக் கொண்டிருக்கிறேனா?
11. எந்த அளவு என் நாவை பேணுகிறேன்? குறிப்பாக புறம் பேசாமலிருக்கிறேனா?
12. தீமையான விஷயங்களைக் கேட்பதை விட்டும் என் காதுகளையும், தீயவைகளைப்
பார்ப்பதை விட்டும் என் கண்களையும் காத்துக்கொள்கிறேனா?
13. நான் முஸலிமாக இருப்பதையொட்டி அல்லாஹ்வைப் புகழ்ந்தேனா? அல்லது நான்
ஒரு நன்றி கெட்டவனா?
14. எல்லா விஷயங்களிலும் அல்லாஹ்வின் மீது தவக்குல் வைக்கின்றேனா?
அவனிடமே உதவியும் தேடுகின்றேனா?
15. பிற முஸலிம்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்காக எப்போதாவது
தனிமையில் பிரார்த்தனை செய்துள்ளேனா?
16. பெருமையடிக்காமல் அல்லாஹ்வுக்கென்று என்னைத் தாழ்த்திக் கொண்டேனா?
17. அல்லாஹ்வின் படைப்பினங்களைக் கூர்ந்து கவனித்து படிப்பினை பெற்றுள்ளேனா?
18. எனக்கேற்படும் சோதனைகளிலிருந்து விடுபட அல்லாஹ்விடத்தில் முறையிட்டு
கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேனா?
19. எல்லா நேரத் தொழுகைகளையும் ஜமாஅத்தோடு தொழுகின்றேனா? எத்தனை முறை
முன்வரிசையில் நிற்பதற்கு கவணம் செலுத்தியிருக்கிறேன்?
20. அல்-குர்ஆனை நிதானமாக எத்தனை முறை ஓதியிருக்கிறேன்? அதன் மொழி
பெயர்ப்பை படித்து விளங்க முயற்சி செய்தேனா?
21. சுன்னத்தான தொழுகைகளைத் தொழுகின்றேனா? குறிப்பாக முன்பின்
சுன்னத்துகள், வித்ர், ளுஹா போன்ற தொழுகைகளோடு எந்தளவு என் தொடர்பு
இருக்கின்றது?
22. காலை-மாலை திக்ர்களைப் பேணி ஓதுகின்றேனா?
23. எல்லா அமல்களையும் இஹ்லாஸோடு செய்கின்றேனா? அல்லது உலக இலாபம் தான்
என் நோக்கமா?
24. நயவஞ்சகத்திலிருந்து பாதுகாப்பு பெறும் பொருட்டு நான் மற்றவர்களுக்கு
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்றேனா?
25. என் பெற்றோர்களோடு நல்ல முறையில் நடக்கின்றேனா? உறவினர்களோடு
சேர்ந்து வாழ்கின்றேனா?
26. ஏழை எளியவர்களுக்கு தான தர்மம் செய்கின்றேனா?
27. எவனாவது நோய் வாய்பட்டிருக்கும் நிலையில் நோய் விசாரிக்கச் சென்று
நோய் நிவாரணத்திற்காக அந்நோயாளிக்கு பிரார்த்தனை செய்தேனா?
28. முஸ்லிம்கள் தாக்கப்படுகின்ற போதெல்லாம் அவர்களின் விடுதலைக்காக ஒரு
சொட்டு கண்ணீராவது சிந்தியிருக்கிறேனா?
29. ஒவ்வொரு நாளும் தூங்கும் முன் என்னை நானே சுய பரிசோதனை செய்கின்றேனா?
சகோதர சகோதரிகளே! கொஞ்சம் நில்லுங்கள்!
இக்கேள்விகளை அடிக்கடி உங்கள் மனதில் ஓட விடுங்கள்! ஒவ்வொரு கேள்விக்கும்
விடை காண முழு முயற்சி எடுங்கள்!
நம் அமல்களை ஏற்றுக்கொள்ள வல்லோனே போதுமானவன்.
Friday, April 15, 2011
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.