தவறான முடிவுகள் எடுக்கும் சரியான மனிதர் வைகோ
கடந்த, 2006 சட்டசபை தேர்தல் முதல், அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த ம.தி.மு.க., தற்போது அதிலிருந்து விலகியுள்ளது. இரண்டு மாதத்துக்கு அரசியல் துறவறம் மேற்கொள்ளப்போவதாக வைகோ அறிவித்துள்ளார். குட்டிக் கட்சிகள் கூட களம் காணத் தயாராகும் இந்த நேரத்தில், வைகோ போன்ற முதிர்ந்த அரசியல்வாதிகள் இத்தகையை முடிவை எடுத்தது, அரசியல் நோக்கர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க.,வில் இருந்து திட்டமிட்டு வெளியேற்றப்பட்ட வைகோ, மீண்டும், 1999 லோக்சபா தேர்தலில், அக்கட்சியுடனே கூட்டணிக்கு சம்மதித்தது மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அவருக்காக உயிர் நீத்தவர்களின் தியாகம் வீணானதாக விமர்சனம் எழுந்தது. "பா.ஜ., கூட்டணியிலிருந்து, அ.தி.மு.க., விலகி, தி.மு.க., இணைந்து, தாமும் உடன் இருக்க நேர்ந்தது காலத்தின் கட்டாயம்' என, அவர் காரணம் சொன்னாலும், பரம வைரிகள் பக்கத்து பக்கத்தில் இருப்பதை பாமரர்கள் ரசிக்கவில்லை. கூட்டு சேர்ந்தாகிவிட்டது. அடுத்து நடந்த, 2001 சட்டசபை தேர்தலில் ஒரு சீட்டுக்காக உணர்ச்சிவசப்படாமல் இருந்திருந்தால், 15 முதல் 20 எம்.எல்.ஏ.,க்களை அப்போதே ம.தி.மு.க., பெற்றிருக்கும். கூட்டணியில் வெளியேறி, தனித்துப் போட்டியிட்டு, அதையும் இழந்தார் வைகோ.
தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தி.மு.க., மீது சீறிப் பாய்ந்த அவர், 2004 லோக்சபா தேர்தலில் அவர்களோடு இணைந்து, "அண்ணன் கலைஞர், தம்பி வைகோ' என, மாறி மாறி கண்ணீர் உகுத்ததை, அடிமட்டத் தொண்டர்கள் விரும்பவில்லை.அதேபோல, 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும், மூன்று சீட்களுக்காக தி.மு.க.,வை முறைத்துக்கொண்டு, அ.தி.மு.க., அணியில் ஐக்கியமானார். "பொடா' சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட வடுக்கள் மறைந்திராத நேரமது. முதல் நாள், "பாசிச ஜெயலலிதா' என முழங்கியதும், மறுநாள், "அன்புச் சகோதரி' என முழங்கியதும், தர்மசங்கடத்தை ஏற்படுத்தின.அதன் பிறகு, அம்மையாருக்கு முழு விசுவாசமாகத் தான் இருந்தார் வைகோ. அந்த விசுவாசம், எல்லை கடந்து சென்றது தான் அவருக்கே வினையாக அமைந்தது. 2006 தேர்தலில், ஆறு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதிலும், ஒரு எம்.எல்.ஏ., இறந்துவிட்டார். அதற்காக நடந்த திருமங்கலம் இடைத்தேர்தலில், தொகுதியை அ.தி.மு.க., வுக்கு தாரை வார்த்துவிட்டார். அப்போதே கட்சிக்குள் முணுமுணுப்புகள் எழுந்தன.
அடுத்தடுத்து இரண்டு எம்.எல்.ஏ., கள் கட்சி தாவிவிட்டனர். ஆரம்ப காலத்தில் தோளோடு தோள் நின்ற அத்தனை பேரும், இன்றைய தேதியில் ம.தி.மு.க., வில் இல்லை. காரணம் ஆயிரம் இருக்கலாம், வைகோ பக்கமே நியாயம் இருக்கலாம், "முக்கிய புள்ளிகள் வெளியேறுகின்றனர்' என்ற ஒரு வரி மட்டும் தான் உலகத்தைச் சென்றடைந்தது. விலகிய அளவுக்கு புதிய ஆட்களைச் சேர்த்திருந்தால் கூட இத்தகைய விமர்சனங்கள் எழுந்திருக்காது.இந்த ஆட்சியில் நடந்த இடைத்தேர்தல்களைப் புறக்கணிப்பதென ஜெயலலிதா முடிவெடுத்தார். அதற்கும் உடன்பட்டார் வைகோ. "ஆட்சியைப் பிடிக்க நினைக்கும் அரசியல் கட்சிகள், தேர்தலைப் புறக்கணிப்பது நல்லதல்ல' என்பதை உணர்ந்து, அடுத்த தேர்தலிலேயே அ.தி.மு.க., போட்டியிட்டது.
சட்டசபையில் கூட, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களுக்கும், தங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது போலத் தான் அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் நடந்து கொண்டனர். அத்தனை கட்சிகளும் ஆர்ப்பாட்டம், போராட்டம், மாநாடு என சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கையில், விசுவாசத்துக்கு குந்தகம் வந்துவிடக் கூடாது என அடக்கியே வாசித்தார் வைகோ.மாநிலம் முழுவதும் உள்ளூர் பிரச்னையில் உறியடி நடத்திக்கொண்டிருந்த போது, இலங்கைப் பிரச்னை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்தார். 2009 லோக்சபா தேர்தலில், விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட போது கூட அதைத்தான் பிரசாரம் செய்தார்.இப்படி, பல நேரத்தில் அவர் எடுத்த தவறான முடிவுகள், நிதர்சனத்துக்கும், அந்த நல்ல மனிதருக்கும் இடையிலான இடைவெளியை அதிகரித்துக் கொண்டே சென்றன. இன்று, சட்டசபை பொதுத் தேர்தலையே புறக்கணிக்கும் முடிவை எடுத்திருக்கிறார்.சுருக்கமாகச் சொல்வதானால், தமிழகம் ஒரு நல்ல மனிதரை தொடர்ந்து கைவிட்டது; அவர் இன்று தமிழகத்தைக் கைவிட்டிருக்கிறார்.
0 comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் அறிவிப்பின்றி நீக்கப்படும்.
வாசகர்களின் கருத்துக்கு அதிரை தமுமுக எவ்வகையிலும் பொறுப்பாகாது.